ஞாயிறு, 28 ஜனவரி, 2018

Paradox


விடிகாலை மூன்று மணிக்கு
செல்போன் திரை மின்னி
மறைந்தது.
மூன்று ஸ்மைலிகள் வந்திருந்தது.
இது ஒரு குறிப்பு.
இது தான் கடைசி தகவல்.
இனி அவள் பேச மாட்டாள்.

கடிதம் கசங்கிய தாளில் வந்திருந்தது.
நிறைய முறை எழுதி தூக்கி போட்டிருக்கலாம்.
அடித்தல் திருத்தல்களுடன் நிறைய
எழுதி இருந்தாள்.கடைசி வரி அடிக்கோடிடபட்டிருந்தது.
இனி பதில் எழுத தேவை இல்லை.

சாம்பல் நிற பூக்கள் நதியில்
அலைந்து வந்தது.
சாம்பல் பிரிவின் நிறம்.
நதியின் ஆரம்பத்தில் அவள்
இருக்கிறாள்.அவளிடம் இருந்து பூக்கள் வரப்போவதில்லை.

அவள் ஆன்லைனில் இருந்தாள்.
"நீ எல்லாம் என் கூட பேசமாட்ட தானே "
"ஸ்மைலிகள் "
"அப்படி தெரியலையே "
"எல்லார் கூடவும் தான் பேசுறேன் "
"ம்ம் நம்பிட்டேன் "
"ஸ்மைலிகள் "
"உன்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா "
"ம்ம்ம் "
அதனால தான்  தூக்கம் சுழன்றடிக்க இழுத்து பிடித்து பதில் அனுப்பி கொண்டிருக்கிறேன்.

வளர்பிறையின் ஆரம்ப நாட்களில்
ஒரு தினத்தில் கடிதம் வந்திருந்தது.
தெளிவான கையெழுத்தில் அனுப்பியிருந்தாள்.
"மஞ்சள் தவறி விழுந்த ஆற்றின்
கரையில் நான் இருந்தேன்.முகம்
கழுவிய பின்னர் போகதிருந்த
வண்ணம் குறித்து தோழிக்கு சந்தேகம்.
நான் உங்களை எடுத்து பூசியிருக்கிறேன்."

"நீ பூசிய மஞ்சளை கயிற்றில் கட்டி ,உன் சங்கு கழுத்திற்கு அவை அணிகலனாகும் நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்"
என பதில் கடிதம் போயிற்று.

விடிகாலையில் அருவி முன் அவள் நின்று கொண்டிருந்தாள்.சூரிய வெளிச்சத்தில்
காட்டு செடிகள் அவள் வனப்பை மறைத்து அழகாக காட்டி கொண்டிருந்தது.
அவள் நனைந்து அருவியை குளிக்க வைத்து கொண்டிருந்தாள்.
அருகில் வந்த போது குளிப்பாட்டுவதை விட்டு விட்டு அவனை பார்க்க தொடங்கினாள்.பார்த்துகொண்டே இருந்தாள்.ஒரு முடிவில்லாத காலத்தில் அவள்  சிக்கியிருப்பதாக தோன்றியது.

அவள் தலையை சாய்த்து பார்த்தபடி நிற்கும் புகைப்படம் வால்பேப்பராக மாறியிருந்தது.ஒரு  லென்சிற்குள் இருவரும் பொருந்தி போக வெட்கம் தாளாமல் கேமரா  பிளாஷ் அடித்தது.
இருவரும் குடிக்க ஒரு கப் போதுமானதாக மாறியிருந்தது.கடற்கரைக்கு முதுகு காட்டி கடலை பார்த்தபடி நிற்பது வழக்கமாயிற்று.குட்டி குட்டி பொம்மைகள் அவளிடம் குவிந்திருந்தது.ஒவ்வொரு முறையும் அவளை பார்க்க சாக்லேட்டுடன் வர வேண்டும்.தவறினால் முத்தங்கள் குறையும் தண்டனையும் உண்டு.

மருதாணியில் அவன் பெயரை இட்டுக்கொண்டாள்.அரிசி கோலத்தில்  அவன் எழுத்தை வரைந்தாள்.
பிள்ளையார் கோவில் தெரு
சந்திக்கும் இடமானது.கருப்பட்டியில் செய்த குழிப்பணியாரம் எடுத்து வருவாள்.அவன் கண்ணாடி வளையல்கள்  தேடி வாங்கி வந்து கொண்டிருந்தான்.
அவன் தாமதாகும் நாட்களில் மௌனவிரதம் எடுப்பாள்.

நதி முகத்துவாரத்தில் அவள் அமர்ந்திருப்பாள்.
அவன் வரும் போது மட்டும்
ஆயுதங்களை கீழே போடுவாள்.
அவள் கூடையில் தேன் இருக்கும்.தினம் ஒரு பூக்களால் அவளை அர்ச்சித்து கொண்டிருந்தான். காலநேரம் பற்றி அவர்கள் அறிந்ததில்லை.காலமும் அவர்களுக்காக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

அவள் வாட்ச்ப் செயலியை அழித்திருந்தாள்.இரண்டு நாட்களாக முப்பத்தைந்து தவற விட்ட அழைப்புகளை அவள் செல்போன் காட்டி
கொண்டிருந்தது.இனி எல்லாம் முடிந்தது என்று அவள் சொல்லும் போது அவன் நம்பவில்லை.இதே மாதிரியான நிறைய சண்டைகள் நீர்த்து போயிருக்கின்றன.
இந்த மௌனம் அவன் பார்த்திராதது.

பிள்ளையார் கோவில் தெரு வெறிச்சோடியிருந்தது.இரண்டு வாரங்களாக கடிதம் வரவில்லை.அவள் தோழிகள் எதுவும் தெரியாது என்று மட்டும் சொல்லி விட்டு போனார்கள்.
பிள்ளையாருக்கு துணையாக அந்த கோவில் வாசலிலேயே தங்க ஆரம்பித்திருந்தான்.அவன் தவம் கண்டு
பிள்ளையார் மனம் இறங்கி வரம் தரத் தயாராக இருந்தார்.அவள் நாத்திகம் பேசுபவளாக மாறியிருந்தாள்.

பாறையில் அவன் வைத்த பூக்கள்
காய்ந்து கொண்டிருந்தது.
காடு முழுக்க அவனுக்கு தெரியும்.அவள் மாயமாய் மறைந்து போயிருந்தாள்.
அன்று பசியில்லை.அவன் வெறிபிடித்தவன் போல வேட்டையாடி கொண்டிருந்தான்.
பெருங்காட்டில் அவன் அலறல் சத்தம்  எதிரொலித்து கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக