சனி, 27 ஜனவரி, 2018

மற்றும் ஒரு மழை

இந்த மழை  யாருக்காக
என்று அவள் கேட்ட போது எனக்கு தெரியவியில்லை.
நான் குடைக்குள் இருந்த போது அவள் நனைந்து கொண்டிருந்தாள்.
மழைக்கு அழைத்து வந்து
நனைதல்  வரம் என்றாள்.
அவள் குளித்த  மழை
புனிதமாகியிருந்தது.
புத்தகங்கள் பிடிக்குமா என்று கேட்டாள்.ஏசுவை போல் இரண்டு கைகளை விரித்து அவ்வளவு பிடிக்கும் என்றேன்.ஆமாம் எனக்கும் நிறைய பிடிக்கும் அதில் தலை வைத்தால் தான் நன்றாக தூக்கம் வருகிறது என்றாள்.
சம்மணமிட்டு கையை மடித்து உன் தவத்தை மெச்சினோம்
பக்தா என்ன வரம் வேண்டும் என்றாள்.
என்னை கடவுளாக்கி விடு என்றேன்.
நான் பக்தை ஆகிவிடுகிறேன் என்றாள்.
கையில் அவள் பேர் எழுதி தந்தாள்.
கவிதை படம் வரைந்திருக்கிறது என்றேன்.
வேகமாக அழித்தாள்.
கவிதைக்கு கோபம் வந்து விட்டது.
அவள் குடித்த காபியில் அமிர்தம் இருக்கிறது என்றேன்.அது
எச்சில் என்றாள்.
குழந்தை எச்சில் பண்ணியதற்காக  சாப்பிடாமலா இருக்கிறோம்.
உன்னை பற்றி கவிதை எழுதி கொண்டு வந்திருக்கிறேன் என்றாள்.
வாங்கி பார்த்த போது அது வெறும் தாளாய் இருந்தது.இலக்கியம் எனக்கு புரியாதென்றேன்.
ஒரே பாட்டை எப்படி நூறு முறைகள் கேட்கிறாய் என்றேன். ஒவ்வொரு முறை கேட்டு முடிந்ததும் அந்த  பாடல் புதியதாகி விடுகிறது என்றாள்.
அவள் வைத்திருக்கும் குட்டி பொம்மைக்கும் எனக்கும அவள் பெரிதாய் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை. கொஞ்சுவதும் பின் தூக்கி வீசுவதும் ஒரு விளையாட்டு போலவே செய்கிறாள்.
அவள் அழும் போது கூடவே அழ வேண்டும்.அவள் சமாதானமாகியதும் 
எனக்கு ஆறுதல் சொல்வாள்.
அவள் தப்புக்கும்  மன்னிப்பு கேட்க வேண்டும்.போனல் போகிறதென எப்போதாவது மன்னிப்பாள்.
அன்று சொல்லாமல் விட்டதை
இப்போது அவளிடம் சொல்ல வேண்டும்.
மழை ஆசீர்வதிக்கபட்டிருக்கிறது.
இந்த நிலம் ஆசீர்வதிக்கபட்டிருக்கிறது.
நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக