ஞாயிறு, 28 ஜனவரி, 2018

குட்டி யானையும் நகரத்து மனிதனும்

காட்டில் இருந்து அப்போது தான் குட்டி யானையை  பிடித்து வந்திருந்தார்கள்.
அதன் கால்கள் பெரிய சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூக்கு லாரியில் ஏறமாட்டாமல் அடம் பிடித்து கொண்டிருந்தது.

விடிகாலையில் அவன் அந்த
நகரத்திற்கு வந்தான்.
மின்சார வெளிச்சம் கண்களை
கூசியது.கொண்டு வந்து சேர்த்த பஸ்ஸை திருப்பி கொண்டிருந்தார்கள்.
அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

ஒடிசலான தேகம் கொண்ட ஒருவன்
தழிகளை வெட்டி எறிந்தான்.
நூறு ஆண்டுகள் பழமையான மரத்தில் குட்டி யானை கட்டப்பட்டிருந்தது.
அதன் சிறிய கண்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இப்போது பிளிறவில்லை.

ஒரு வழியாக அட்ரஸ் தேடி கண்டுபிடித்து விட்டிருந்தான்.ரெஸ்யும்  கைகளில் எடுத்து வைத்து கொண்டான்.யாரை கேட்பதென தெரியவில்லை. தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

இரண்டு வாரம் முடிந்திருந்தது.
யானை குட்டியை இடம் மாற்றி கட்டியிருந்தார்கள்.தும்பிக்கையை ஆட்டிய படி நின்று கொண்டே தூங்கி கொண்டிருந்தது.
நெற்றியில் குங்குமம் இட்டிருந்த தலைப்பாகட்டுகாரன் ஒருவன்  குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.

எதிரே கேள்வி கேட்பவரின் முகம் கணிக்க முடியாததாய் இருந்தது.
டேபிள் மீது சம்பிரதாயமாக சில புத்தகங்கள் இருந்தது.அந்த அறையில் இருந்து பெட்ரோல் வாசனை அடித்தது.
அவன் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
அவர்  இது தான் கடைசி கேள்வி என்றார்.

யானை குட்டிக்கு கண்கள் கட்டப்பட்டது.
அவன் சம்பளம் பற்றி சொன்னார்கள்.
லாரியில் ஏற்றவும் உடல் குலுங்க நகர்ந்தது. பஸ் சீட் கிடைக்க வில்லை. படியில் தொங்கி கொண்டு வந்தான்.

புதன்கிழமை ராசியான நாளாம்.
குளித்து முடித்து திருநீர் அணிந்து
பஸ் ஸ்டாபில் நின்று கொண்டிருந்தான்.
அங்கு எல்லாரும் அவனை மாதிரியே  இருந்ததாக தோன்றியது.

லாரியில் இருந்து இறக்கியதும் கண் கட்டு அவிழ்க்க பட்டது. அங்கே சில நூறு யானைகள் மரங்களை தூக்கியபடி நகர்ந்து கொண்டிருந்தது.

1 கருத்து: