ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ரகசியங்களை கடந்தவள்


மழையில் நனைந்த ஓவியம் போல் இருக்கிறது அவள் மனசித்திரம்.
சில நேரம் எல்லாம் புரிந்ததாக தோன்றுகிறது.சில நேரம் எதுவுமே புரிவதில்லை.

சில வார்த்தைகள் சில மௌனங்கள்  மட்டும் வைத்திருக்கிறாள்.சில நாட்களில் வார்த்தைகளை சாப்பிட்டு மௌனமாக இருந்து விடுகிறாள்.
வாரக்கடைசியில் அந்த வார்த்தைகளும்  இருப்பதில்லை.

அவளுக்கு வண்ணங்கள் பற்றிய ஒரு பிரமை இருக்கிறது.வித விதமான வண்ணங்கள்.எல்லா நிறங்களிலும் அவள் இருக்கிறாள்.வண்ணங்கள் அற்ற ஓர் உலகம் அவளுடையதாக இருக்கிறது.

அவள் பேச விரும்பும் போதே பேசுகிறாள்.சில நேரம் அவளே பேசு பொருளாயிருக்கிறாள்.சில நேரம் அவள் எதுவும் பேசுவதில்லை.

காடு பற்றிய நியாபகங்கள்  அவள் மனதில்  புதைந்திருக்கிறது.
காடு வந்து சேர்தல் பற்றிய
கனவுகள் எப்போதும் அவளுக்கு வருகிறது.

ஒரு நாள் ஆகாயத்தில் இருப்பதாக தோன்றுகிறது.மறுநாள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள்.அவள் இடைவெளிகளை தீர்மானிப்பது  வினோதமாயிருக்கிறது.

அதிதீவிரமான வெறுப்பும் அன்பும் சூழ நிற்கிறாள்.அவள் வெறுப்பு இந்த உலகத்தை அழிக்க போதுமானதாய் இருக்கிறது.அன்பு இந்த பிரபஞ்சத்தை குளிர்விக்க செய்கிறது.

சிலருக்கு ஒரு ஞானியை போல் அவள் முகம் தீர்க்கமனதாக தோன்றுகிறது. வேறு சிலருக்கோ  ஒரு  குழந்தையை போல  தெரிகிறாள்.

அவளோ யட்சியாக இருக்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக