ஞாயிறு, 28 ஜனவரி, 2018

நதியும் பிரபஞ்சத்தின் பேரழகியும்

மரக்கிளைகளில் இருந்து நழுவி
நதியில் விழுகிறது ஒரு மலர்.
பிரபஞ்சத்தின்  பேரழகியை  தேடிக்கொண்டிருந்தவன்  முன்
கையில்  நோட்டுடன்  அவள் நின்றாள்.
சலனமற்ற  நதியின்  மேற்பரப்பில்
மலர் மிதக்க  தொடங்கிற்று.
ஒப்பீடுகள்   அற்ற  பேரழகான ஒருத்தியை  இப்போது  தான் அவன்  பார்க்கிறான். பார்ப்பதே   அவனுக்கு  ஆனந்தமாய்  இருந்தது. நதிக்கும்  பூவுக்குமென ஒரு  புது  அத்தியாயம்  தொடங்கியிருந்தது. அவளை  48  நிமிடங்களாக காதலித்து கொண்டிருந்தான். அவளை
பார்த்தும்  அதே 48 நிமிடங்கள்தான் ஆகி  இருந்தது. இப்போது  காற்று வீசி மலர் புரண்டு அதன் எல்லா  இதழ்களும் ஒரு  முறையேனும்  நதியில்  நனைந்தது.
தேவதையின்  அருகாமை  அவனை  என்னவோ செய்தது. வெளிபடுத்த  முடியாத  அன்பு அவனை நிலையில்லாதவனாக  மாற்றிக்கொண்டிருந்தது.
நதி நீரில் வட்டமடித்து பயணிக்க தொடங்கியது  மலர். கட்டுபாடுகள்  அற்றவன்  பிரபஞ்சத்தின்  பேரழகியை ஒருநாள் சந்தித்தான். தேவதை  கைபிடித்து  நடக்க   வாழ்நாள்  முழுவதும் வேண்டும்  என்றான்.
நதிப்பிரவாகம்  வேகமெடுக்க  தொடங்கியிருந்தது.
சாத்தான்களுடன் வாழ  தேவதைகளுக்கு  விருப்பம்  இருப்பதில்லை என்றாள்.
அவன்  சாத்தானை தேடியபோது அவனை  நோக்கி சுட்டு விரலை நீட்டினாள்.மலர்  இன்னும்  நதியில்
தான்  இருந்தது.
அவள்  அங்கேயே  நின்று கொண்டிருந்தாள்.
அவன்  நடக்க ஆரம்பித்தான்.
இப்போது  அவனுக்கு  பிடிக்காத  முதல் விஷயமாக காதல்  மாறியிருந்தது.
பாறையில்தடுக்கி  மலர்  நின்றுவிட, நதி  தனியே  செல்ல ஆரம்பித்தது.
தேவதைகள்  மெய் உலகில் இல்லை  என உணர  அவனுக்கு  இரண்டரை வருடங்கள்  ஆகிவிட்டிருந்தது.
எந்த  மலர்களின்  வருகைக்கும்  காத்திராமல் பேரிரைச்சலோடு இப்போதும்   நதி  பயணித்து  கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக