ஞாயிறு, 28 ஜனவரி, 2018

யட்சி வருகை

பெரிதாய் எந்த திட்டமிடல்களும் 
இல்லாத ஒரு சாமனியனின் வாழ்க்கையில் 
ஒரு நாள் யட்சி நுழைந்தாள். 
எளிதில் உணர்ச்சிவசப்படுவனாகவும் 
அதன் பொருட்டு வருந்துபவனும் 
இருந்த  போது , 
யட்சியோ அதன் மறுகரையில் இருந்தாள்.
ஒரு வழிகாட்டியை போல் அவள் 
தன் பாதையில் அழைத்து சென்றாள்.
எல்லா அசாதாரணமான விஷயங்களும் அவளுக்கு சாதரணமாய் இருந்தது.
என் வாழ்வில் இத்தனை 
குழப்பங்கள் நிறைந்த ஒரு பெண்ணை 
இப்போது தான் பார்க்கிறேன் என்று நினைத்த போது உலகம் அவள் தெளிவிற்காக 
கொண்டாடி கொண்டிருந்தது.
கானகங்களில் அலைந்து 
கொண்டிருந்த போது அவள்தான் 
நகரத்திற்கு அழைத்து வந்தாள்.
மழைதுளிகள் ஒலி எழுப்ப தொடங் கிய
அவள்  குரல் கேட்க தொடங்கும்.
ஒரு நடு இரவில் அழுது கொண்டிருந்த 
போது அவள் Smiley கள் அனுப்பி வைத்தாள்.
நட்சத்திரங்களை எண்ணிய நாட்களில் 
அவள் என் கூட இருந்தாள். 
அன்பை அதன் அத்தனை பரிணமாங்களிலும் 
உணர்த்தியவளை புரிந்து கொள்ள 
முயற்சிப்பதை விட்டுவிட்டு நேசிக்கத்தொடங்கிவிட்டேன்.

தாஜ்மஹால்

பெருமழை பெய்து பாலம் இடிந்ததை ஊர் கூடி பார்த்து கொண்டிருந்த போதுதான்  அவள் நிற்பதை கவனித்தேன்.மழை தண்ணீரில் வெற்றுக்காலுடன் நின்ற அவள் பாதங்களை தான் முதலில் பார்த்தது.
நிமிர்ந்த போது  மின்னல் வெட்டியது போல் இருந்தது  அவள்   நிறம் ; அந்த நிறத்திற்கு அவள்  என்னை  திரும்பி கூட பார்க்கபோவதில்லை  என்றுதான்  அப்போது    தோன்றியது.

இரட்டை சடைபோட்டு ஹைஸ்கூல் யூனிபார்மில் சின்ன  சைக்கிளை நிறுத்தி திரும்பி  பார்க்கும்  வரையிலும்  அப்படித்தான் நினைத்திருந்தேன்.
அவள்  கூட வரும் வானரங்கள் பிள்ளையார் கோவில் தெருவில் பிரிந்துவிட சைக்கிளில் இருந்து  நடக்க  ஆரம்பிப்பாள்.நால்ரோடு தாண்டி பின்னே செல்லும்   தைரியம் எனக்கு  இருந்ததில்லை. தெருமுனையில் நின்றுவிடும் போது திரும்பி திரும்பி பார்த்து விட்டு சைக்கிளில் ஏறி செல்வாள்.

அவளுடன் பேசுவதற்கும் ஒரு மழை வேண்டி இருந்தது.ஒருநாள்  மழை பிடிக்க செருப்பை கழட்டிவிட்டு பிள்ளையார் கோவில் முகப்பிற்கு வந்து நின்றாள்.அதே பாதங்கள். நானுற்றி அம்பது முறை சொல்லிபார்த்த அந்த  கேள்வியை  அவளிடம்  கேட்டேன்.
நீ  என்ன படிக்கிற ?

என்னை விட இரண்டு வகுப்புகள் குறைவாக சொன்னாள். அந்த
மழைக்கும் பிள்ளையாருக்கும்
நன்றிகள்.

உள்ளூர் திருவிழாவில் தண்ணீர் தெளித்து குளிப்பாட்டியிருந்த தார்ச்சாலையில் வைத்து
இடது  கையில் அவள் நம்பர்  எழுதி தந்தாள்.அதிகாலையில் எடுத்த    தாஜ்ஹால் போட்டோ  ஒன்றோடு அவள் பெயரை சேமித்து வைத்திருந்தேன்.
அதிகம்  பேர்  வராத ஒரு பெட்டிக்கடை வாசலில் ஓரத்தில் எனக்காக காத்திருப்பாள்.உள்ளங்கையில் மடித்து வைத்திருக்கும்  திருநீறை  அக்கம்  பக்கம்  பார்த்து பூசிவிடுவாள்.
இது வழக்கம்  தான்.சங்குசக்கரம்  போட்டிருந்த அம்மன் கோவில் சிகப்பு கயிற்றில் கோர்த்த டாலர்தான் அவள்  தந்த முதல் அன்பளிப்பு.
நூல்  நைந்து அறுந்து வீழும் வரையிலும்  அது கழுத்தில் இருந்தது.
கடைக்கார அண்ணனுக்கு எங்களை பற்றி தெரியும்.எப்போதும் அவர் அதை காட்டிக்கொண்டது இல்லை.
ஊர்  திரும்ப வேண்டிய ஓர்  நாள் சீக்கிரம் வந்தது.கடைசி நாள் அவளை
பார்க்கும் போது தாடிமுளைக்க ஆரம்பித்திருந்தது.
இனிமேல் ஷேவ் செய்ய வேண்டும்.
மூன்று நாட்களாக ஒரே சட்டையை  போட்டிருப்பதாக சொன்னாள்.

சோனி எரிக்சனின் மிகப்பழைய மாடல் ஒன்றில் லாக் எடுக்கும்  போது தவறவிட்ட அழைப்புகள் முன் வந்து நிற்கும்.அதன்பிறகான நாட்களில்
எப்போது  எழும்போதும்  போனில் தாஜ்மஹால் காட்டும். ஆறுமாதங்களுக்கு பிறகு  ஒரு நாள்  பிள்ளையார் கோவில் தெருவில்
நின்று கொண்டிருந்தேன்.
தாவணி கட்டியிருந்தாள்.
நுனி தலைப்பை கையில் பிடித்தபடி வேகமாக நடந்து வந்து வந்தாள்.

ரெட்டை சடை போட்டு ஹைஸ்கூல் யூனிபார்மில்  நால்ரோடு வரை சைக்கிள்  தள்ளி வந்த  அந்த சின்ன பெண்  இப்போது இல்லை.
வளர்ந்திருக்கிறாள்.தாவணியில் வெட்கம்   அவளை  அழகாக்கி  கொண்டிருந்தது. பிரிண்ட் செய்யபட்ட
பஸ்டிக்கட் தாளை திருப்பி என் புது நம்பரை எழுதி கொடுத்தபோது வாங்கிகொண்டாள்.தெருமுனையில் விடைபெற்று பஸ்  ஏறும் போது  தாஜ்மஹாலிடம்  இருந்து  அழைப்பு வந்தது.அவள்  பேசும் போது அழுதிருப்பது  தெரிந்தது.

ஆறுவருடங்களுக்கு  பிறகு அரசாங்கத்தில்  பழைய பாலத்தை இடித்துவிட்டு புது பாலம்  கட்டியிருந்தார்கள். பாலத்தை பஸ் கடக்கும் போது கடைசி படிக்கட்டில் நின்று கொண்டேன்.

தூரத்தில் அவள்  வெற்றுக்காலுடன் மழைத்தண்ணியை தள்ளி விளையாடி
கொண்டிருந்தாள்.

கடைசி வனம்

சஞ்சாரமற்ற ஓர் அடர்வனம் தீப்பிடிக்கிறது.
அந்தியில் நட்சத்திரம் 
மறைந்து தீப்பிழம்பு காடெங்கும் 

சாம்பல் பரப்புகிறது.
வெடித்து கிளம்பும் சுள்ளிகள் புகை 

நடுவே நடனம் புரிகின்றன.
பெறுங்காற்று காடு முழுவதையும் 

தின்ன கொடுக்கிறது.
பொருளற்ற சத்தங்கள்
திசையெங்கும் ஒலிக்கிறது.
ஆர்ப்பரிக்கும் நெருப்பில்
மரண ஓலங்கள்
காணமல் போயிருந்தது.
வீடு திரும்பும் பறவைகள்
வீட்டை தொலைத்து விட்டிருந்தன.
விடியலில் மழை பெய்து,
தீ உயிர்விடுகிறது.
இரண்டு திங்களில்
எரிந்த மரக்களைகளில் தளிர் எட்டிபார்க்க
நகரமயமாக்கலில் எஞ்சியிருக்கும்
கடைசி வனம்
புதுயுகத்தை ஆரம்பிக்கிறது.

யட்சிக்கு

அந்தி மறையும்  சூரியன் தன்
கிரணங்களை பூமியில் விட்டு
சென்றதென அறிந்தவர்கள் அவள் 
புன்னகையை பற்றி தான்
பேசியிருக்க  கூடும்.

காலத்தில் தனித்திருக்கும் 
தேவதையின் சிரிப்பு
இந்த பிரபஞ்சம் எங்கும்
வியாபித்திருக்கிறது.

யுகங்களுக்கு பின்னும் 
யட்சியின் குரலை இன்னும் காடு  பிரித்தெடுக்கவில்லை.

அவள் புன்னகை  வேண்டி மழை
மேகத்தை பார்க்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

காற்றின் சாரலில் சிந்தியிருக்கும் 
கடைசி புன்னகையை  தேடி
சென்றவர்கள் திரும்பவில்லை.

வனம் திரும்பும் யட்சிக்கு
புன்னகைப்பதற்கென தனி 
காரணங்கள் எதுவும் இல்லை.

கட்டி முடிக்கப்படாத பாலம்

இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பாலத்தின்  ஒரு  முனையில் இருக்கிறேன். கடைசி நேர மன்னிப்புகளும்  சமாதனங்களும் பலனின்றி உடைய ஆரம்பித்திருக்கிறது.
நம்பிக்கைகளும் நட்புமான ஒரு
நாளில் தான் நாங்கள் இந்த
பாலத்தை உருவாக்கினோம்.
இரு வேறுமுனையில் இருக்கும்  எங்களுக்குள்  நட்பை இந்த  பாலம்
பறிமாற்றிக்கொண்டிருந்தது.
எல்லைகளற்ற  அன்பு  எப்போதும்  பாலத்தை  உயிர்ப்புடன்  வைத்திருந்தது.
சிறு சண்டையின்  நீட்சியாய்
பேசாமல் இருந்த  நாளில்,
பாலத்தின்  முதல்  செங்கல் விழுந்தது.
விளக்கங்களை சொல்ல வாய்ப்புகள்  அளிக்காத  நொடிகளில்  பாலம் 
ஆட்டம்  காண  ஆரம்பித்தது.
வெறுப்புகளும் புறக்கணிப்புகளாமான ஒரு நம்பிக்கையற்ற
கணத்தில்  பாலம்  இடிந்து விழத்தொடங்கியது.
கண்முன்  எதிர்பக்கம்  சரிந்து
விழுந்து  கொண்டிருக்க ,
கொஞ்சம்  பூங்கொத்துகளையும்.. கொஞ்சம்  மன்னிப்புகளையும் ..
கொஞ்சம்  நட்பையும்
சேர்த்து  வைத்து காத்திருக்கிறேன்.

பிணம் தின்னும் கழுகுகள்

பிணம் தின்னும் கழுகுகள்
நதிக்கரையில் அமர்ந்திருக்கும்.
வேட்டை நாய்கள் ஊலையிடும்.
இரத்த வாடை காற்றில் வீசும்.
நரிகள் அலையும்.

ஒரு போர்
ஒரு வெறி
ஒரு வெற்றி

ஒரு உடன்படிக்கை
ஒரு சமாதானம்.

நாடுகள் பிளவுறும்.
நகரங்களுக்கு புது எல்லைகள்
அறிக்கைகள் ,
ஆயுதங்கள் ,பேரங்கள்.
ஊழல்கள்.

ஆட்சி மாற்றம்
கட்டுபாடுகள்
விதிமுறைகள்
கண்ணியம்
ஒழுக்கம்
கொஞ்சம் கொலைகள்.

போராளிகள் தோன்றுவர்.
இயக்கங்கள் உருவாகும்.
பிஞ்சு குழைந்தைகளின் கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்படும்.

ஆட்சி மாறும்.
அதிகாரம் மாறும்.
ஆள்பவர்கள் மாறுவார்கள்.
உறுதி மொழிகள் அள்ளி வீசப்படும்.
துரோககங்கள் நிகழும்.
பட்டினி சாவுகள் சாதரணமாகும்.

எல்லாவற்றுக்கும் பின்னால்,

ஒரு சர்வாதிகாரம்
ஒரு பேராசை
ஒரு ஏமாற்றம்
ஒரு கண்ணீர் துளி.

குட்டி யானையும் நகரத்து மனிதனும்

காட்டில் இருந்து அப்போது தான் குட்டி யானையை  பிடித்து வந்திருந்தார்கள்.
அதன் கால்கள் பெரிய சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூக்கு லாரியில் ஏறமாட்டாமல் அடம் பிடித்து கொண்டிருந்தது.

விடிகாலையில் அவன் அந்த
நகரத்திற்கு வந்தான்.
மின்சார வெளிச்சம் கண்களை
கூசியது.கொண்டு வந்து சேர்த்த பஸ்ஸை திருப்பி கொண்டிருந்தார்கள்.
அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

ஒடிசலான தேகம் கொண்ட ஒருவன்
தழிகளை வெட்டி எறிந்தான்.
நூறு ஆண்டுகள் பழமையான மரத்தில் குட்டி யானை கட்டப்பட்டிருந்தது.
அதன் சிறிய கண்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இப்போது பிளிறவில்லை.

ஒரு வழியாக அட்ரஸ் தேடி கண்டுபிடித்து விட்டிருந்தான்.ரெஸ்யும்  கைகளில் எடுத்து வைத்து கொண்டான்.யாரை கேட்பதென தெரியவில்லை. தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

இரண்டு வாரம் முடிந்திருந்தது.
யானை குட்டியை இடம் மாற்றி கட்டியிருந்தார்கள்.தும்பிக்கையை ஆட்டிய படி நின்று கொண்டே தூங்கி கொண்டிருந்தது.
நெற்றியில் குங்குமம் இட்டிருந்த தலைப்பாகட்டுகாரன் ஒருவன்  குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.

எதிரே கேள்வி கேட்பவரின் முகம் கணிக்க முடியாததாய் இருந்தது.
டேபிள் மீது சம்பிரதாயமாக சில புத்தகங்கள் இருந்தது.அந்த அறையில் இருந்து பெட்ரோல் வாசனை அடித்தது.
அவன் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
அவர்  இது தான் கடைசி கேள்வி என்றார்.

யானை குட்டிக்கு கண்கள் கட்டப்பட்டது.
அவன் சம்பளம் பற்றி சொன்னார்கள்.
லாரியில் ஏற்றவும் உடல் குலுங்க நகர்ந்தது. பஸ் சீட் கிடைக்க வில்லை. படியில் தொங்கி கொண்டு வந்தான்.

புதன்கிழமை ராசியான நாளாம்.
குளித்து முடித்து திருநீர் அணிந்து
பஸ் ஸ்டாபில் நின்று கொண்டிருந்தான்.
அங்கு எல்லாரும் அவனை மாதிரியே  இருந்ததாக தோன்றியது.

லாரியில் இருந்து இறக்கியதும் கண் கட்டு அவிழ்க்க பட்டது. அங்கே சில நூறு யானைகள் மரங்களை தூக்கியபடி நகர்ந்து கொண்டிருந்தது.

ரகசியங்களை கடந்தவள்


மழையில் நனைந்த ஓவியம் போல் இருக்கிறது அவள் மனசித்திரம்.
சில நேரம் எல்லாம் புரிந்ததாக தோன்றுகிறது.சில நேரம் எதுவுமே புரிவதில்லை.

சில வார்த்தைகள் சில மௌனங்கள்  மட்டும் வைத்திருக்கிறாள்.சில நாட்களில் வார்த்தைகளை சாப்பிட்டு மௌனமாக இருந்து விடுகிறாள்.
வாரக்கடைசியில் அந்த வார்த்தைகளும்  இருப்பதில்லை.

அவளுக்கு வண்ணங்கள் பற்றிய ஒரு பிரமை இருக்கிறது.வித விதமான வண்ணங்கள்.எல்லா நிறங்களிலும் அவள் இருக்கிறாள்.வண்ணங்கள் அற்ற ஓர் உலகம் அவளுடையதாக இருக்கிறது.

அவள் பேச விரும்பும் போதே பேசுகிறாள்.சில நேரம் அவளே பேசு பொருளாயிருக்கிறாள்.சில நேரம் அவள் எதுவும் பேசுவதில்லை.

காடு பற்றிய நியாபகங்கள்  அவள் மனதில்  புதைந்திருக்கிறது.
காடு வந்து சேர்தல் பற்றிய
கனவுகள் எப்போதும் அவளுக்கு வருகிறது.

ஒரு நாள் ஆகாயத்தில் இருப்பதாக தோன்றுகிறது.மறுநாள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள்.அவள் இடைவெளிகளை தீர்மானிப்பது  வினோதமாயிருக்கிறது.

அதிதீவிரமான வெறுப்பும் அன்பும் சூழ நிற்கிறாள்.அவள் வெறுப்பு இந்த உலகத்தை அழிக்க போதுமானதாய் இருக்கிறது.அன்பு இந்த பிரபஞ்சத்தை குளிர்விக்க செய்கிறது.

சிலருக்கு ஒரு ஞானியை போல் அவள் முகம் தீர்க்கமனதாக தோன்றுகிறது. வேறு சிலருக்கோ  ஒரு  குழந்தையை போல  தெரிகிறாள்.

அவளோ யட்சியாக இருக்கிறாள்.

வேதாளம் சொன்ன கதை

வேதாளம் தோளில் ஏறி மூன்று
வருடங்களாகி விட்டது.
ஒவ்வொரு முறையும் வளர்ச்சி
கதை சொல்லும்.
தவறான பதில்களுக்கு கலவரமும்
சரியான பதில்களின் போது
வெளிநாட்டிற்கும் செல்லும்.

வேதாளத்தின் முதல் கதை
பணத்தாள்களை வெற்று தாளாக்கி
ஆரம்பித்தது.
வேதாளத்தின் அடிமைகள்
புது இந்தியா பிறந்ததாக ஆர்ப்பரிக்க
மக்கள் தலையை பிய்த்து தெருவில் அலைந்து கொண்டிருந்தனர்.

வேதாளத்தின் அடுத்த கதை
குடிமக்களுக்கு அடையாள எண்
கொடுப்பதாக ஆரம்பித்தது.
மக்கள் எண்களாக மாற்றம்பெற
அஃறினை போல் அலைய
வேதாளத்தின் அடிமைகள் வளர்ச்சி வளர்ச்சி என்று கூவின.

வேதாளத்தின் மூன்றாம் கதை
இந்தியை நடுவீட்டிற்கு அழைத்து வருவதாக ஆரம்பித்தது.நடுவிட்டில் உட்கார வைப்பதை சரிகட்ட  பெருச்சாளிகளை விட்டு தேர்வு செய்யும் நீட்டை கொண்டுவந்தது.
இந்தி தின்று வளர்ந்த பெருச்சாளிகள்
எல்லா இடத்திலும் நாட்டாமை செய்ய
முனைந்தன.

வேதாளத்தின் நான்காம் கதை
வரியில்லா வரி.
புதியா இந்தியா அடுத்தடுத்து பிரசவித்து தள்ளாட தொடங்கியிருந்தது.
போட்டோஷாப் செய்யப்பட்ட விலைபட்டியோடு வேதாளத்தின் அடிமைகள் நகரை சுற்றி வந்தன.

வேதாளத்தின் அடுத்த கதை
ஆரம்பிப்பதற்கு முன்
கையில் வைத்திருந்த ரேசன் கார்டை பிடிங்கி கொண்டது.
அடிமைகள் அலறல் இன்னும் குறையவில்லை.

வேதாளம் இப்போது தோளில்
இருந்து கழுத்தை இருக்க தொடங்கியிருக்கிறது.

அது கதை சொல்வதை நிறுத்த போவதில்லை.
அதன் கதைகள் நாளுக்கு நாள்
கொடூரமாகி கொண்டே வருகிறது.

இரண்டு ஆண்டுகள் முடியும் போது
பிணங்களும் வேதாளங்களும் மட்டுமே இங்கு  இருக்கும்.

நதியும் பிரபஞ்சத்தின் பேரழகியும்

மரக்கிளைகளில் இருந்து நழுவி
நதியில் விழுகிறது ஒரு மலர்.
பிரபஞ்சத்தின்  பேரழகியை  தேடிக்கொண்டிருந்தவன்  முன்
கையில்  நோட்டுடன்  அவள் நின்றாள்.
சலனமற்ற  நதியின்  மேற்பரப்பில்
மலர் மிதக்க  தொடங்கிற்று.
ஒப்பீடுகள்   அற்ற  பேரழகான ஒருத்தியை  இப்போது  தான் அவன்  பார்க்கிறான். பார்ப்பதே   அவனுக்கு  ஆனந்தமாய்  இருந்தது. நதிக்கும்  பூவுக்குமென ஒரு  புது  அத்தியாயம்  தொடங்கியிருந்தது. அவளை  48  நிமிடங்களாக காதலித்து கொண்டிருந்தான். அவளை
பார்த்தும்  அதே 48 நிமிடங்கள்தான் ஆகி  இருந்தது. இப்போது  காற்று வீசி மலர் புரண்டு அதன் எல்லா  இதழ்களும் ஒரு  முறையேனும்  நதியில்  நனைந்தது.
தேவதையின்  அருகாமை  அவனை  என்னவோ செய்தது. வெளிபடுத்த  முடியாத  அன்பு அவனை நிலையில்லாதவனாக  மாற்றிக்கொண்டிருந்தது.
நதி நீரில் வட்டமடித்து பயணிக்க தொடங்கியது  மலர். கட்டுபாடுகள்  அற்றவன்  பிரபஞ்சத்தின்  பேரழகியை ஒருநாள் சந்தித்தான். தேவதை  கைபிடித்து  நடக்க   வாழ்நாள்  முழுவதும் வேண்டும்  என்றான்.
நதிப்பிரவாகம்  வேகமெடுக்க  தொடங்கியிருந்தது.
சாத்தான்களுடன் வாழ  தேவதைகளுக்கு  விருப்பம்  இருப்பதில்லை என்றாள்.
அவன்  சாத்தானை தேடியபோது அவனை  நோக்கி சுட்டு விரலை நீட்டினாள்.மலர்  இன்னும்  நதியில்
தான்  இருந்தது.
அவள்  அங்கேயே  நின்று கொண்டிருந்தாள்.
அவன்  நடக்க ஆரம்பித்தான்.
இப்போது  அவனுக்கு  பிடிக்காத  முதல் விஷயமாக காதல்  மாறியிருந்தது.
பாறையில்தடுக்கி  மலர்  நின்றுவிட, நதி  தனியே  செல்ல ஆரம்பித்தது.
தேவதைகள்  மெய் உலகில் இல்லை  என உணர  அவனுக்கு  இரண்டரை வருடங்கள்  ஆகிவிட்டிருந்தது.
எந்த  மலர்களின்  வருகைக்கும்  காத்திராமல் பேரிரைச்சலோடு இப்போதும்   நதி  பயணித்து  கொண்டிருக்கிறது.

மூன்று கனவுகள்

மூன்று தொடர்ச்சியான  கனவுகள்.
எல்லாக் கனவுகளில் யாரோ இருக்கிறார்கள் அல்லது நான் இருக்கிறேன்.நெடு மரங்கள் வளர்ந்த மலைப்பாதையில் பழங்கால ஜீப்
ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அதை பின் தொடரும்  ஒரு வண்டியில் நான்  இருக்கிறேன்.

மரங்களின் நடுவே ஒரு  பறவை எங்களை பார்த்து கொண்டே பறக்கிறது.இல்லை அப்படி தோன்றுகிறது.மெல்ல மேலேறி மரங்களை விட்டு ஆகாயத்திற்கு போகிறது.

இலைகள் காற்றில் அசைகிறது.
நாங்கள் வண்டியில் இருக்கிறோம்.
பறவை காணாமல் போகிறது.

இப்போது பக்கத்தில் பறவை தெரிகிறது.பள்ளத்தில்
ஜீப் கவிழ்ந்து கிடக்கிறது.
நான் ஆகாயத்தில் இருக்கிறேன்.

.

மழை பெய்கிறது.
யாருமற்ற குளத்தின் கரையில்
ஒருவன் அமர்ந்திருக்கிறான்.
அது நான் என தெரியவில்லை.
அவன் கைகள் இறுக்க கட்டியிருக்கிறது.
மழை அவன் மீதும் பெய்கிறது.

இடி இடிக்கிறது.
ஒரு பூ தண்ணீருக்குள் செல்கிறது.
தாமரை இலையில் திட்டு திட்டாக தண்ணீர் நிற்கிறது. படிக்கட்டுகளின் மூழ்க தொடங்குகிறது. மழை ஒரே ரீங்காரமாக இசைக்கிறது.

அவன் அங்கேயே இருக்கிறான்.
மழை நிற்கவில்லை.
.
அகண்ட நதியின் குறுக்கே
அணை ஒன்று கட்டப்படுகிறதது.
வெகுவேகமாக வரும் தண்ணீர் நிற்கிறது. மனிதர்கள் அடித்து கொள்கிறார்கள். மதகுகளின் வெளியே வரும் தண்ணீரில் இரத்தம் கலந்திருக்கிறது.

விண்வெளியில் இருந்து
பூமி முழுக்க தண்ணீராக இருக்கிறது.
.

Life of Pi

மறையும் வெளிச்சதின்  கோடுகள் தண்ணீரில் அலைஅலையாக பிரதிபலிக்கிறது.
எடையற்று மிதக்கும் நீரில்
இருள தொடங்குகிறது.
அனிச்சையாய் உயிர்
அசைந்தாடுகிறது.
ஆகாயத்தில் எழும்பும் சூரியன்
கதிர்களை அனுப்பி ஒரு
நீண்ட நாளின் தொடக்கத்தை அறிவிக்கிறது. இயலாமையோடு பார்க்கும் கணத்தில்  காலம் சோம்பல் முறித்து எழுகிறது.
கூர்ந்து கவனிக்கும் காலத்துடன் இருக்கிறேன் தனியனாக.
நட்சத்திரங்கள் இறைந்த வானில் இருக்கிறோம். இரவு வருகிறது.
காலம் நிதானமாக தலையை
சிலுப்பி சிலிர்த்து கொள்கிறது.
நிச்சலனம் இன்றி போதாமை வழியும் கண்களோடு அசைவற்று  அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.
உடல் சுருங்கி உயிர் ஒடுங்கி
துண்டு பகுதியில் வீழ்ந்து கிடக்கிறது.
மறுபடி வெளிச்சம் வந்த போது உப்புகாற்றில் எறிந்த கைகள்
வாஞ்சையோடு நெருங்குகிறது.
இரத்தம் சுண்டி கைகள் நடுங்கிய வண்ணம் இருக்கிறது. அதில்
இரக்கம் இல்லை.மடியில் கிடத்திய போது அழ முடியவில்லை.
கடைசி மூச்சையும் கடைசி நம்பிக்கையும் இழந்து கொண்டிருக்கிறோம்.
ஊசி விழுங்கும் துவாரம்
அளவிற்காவது முன்பு  வெளிச்சம் தெரிந்தது. இப்போது அதுவும் இல்லை.

Paradox


விடிகாலை மூன்று மணிக்கு
செல்போன் திரை மின்னி
மறைந்தது.
மூன்று ஸ்மைலிகள் வந்திருந்தது.
இது ஒரு குறிப்பு.
இது தான் கடைசி தகவல்.
இனி அவள் பேச மாட்டாள்.

கடிதம் கசங்கிய தாளில் வந்திருந்தது.
நிறைய முறை எழுதி தூக்கி போட்டிருக்கலாம்.
அடித்தல் திருத்தல்களுடன் நிறைய
எழுதி இருந்தாள்.கடைசி வரி அடிக்கோடிடபட்டிருந்தது.
இனி பதில் எழுத தேவை இல்லை.

சாம்பல் நிற பூக்கள் நதியில்
அலைந்து வந்தது.
சாம்பல் பிரிவின் நிறம்.
நதியின் ஆரம்பத்தில் அவள்
இருக்கிறாள்.அவளிடம் இருந்து பூக்கள் வரப்போவதில்லை.

அவள் ஆன்லைனில் இருந்தாள்.
"நீ எல்லாம் என் கூட பேசமாட்ட தானே "
"ஸ்மைலிகள் "
"அப்படி தெரியலையே "
"எல்லார் கூடவும் தான் பேசுறேன் "
"ம்ம் நம்பிட்டேன் "
"ஸ்மைலிகள் "
"உன்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா "
"ம்ம்ம் "
அதனால தான்  தூக்கம் சுழன்றடிக்க இழுத்து பிடித்து பதில் அனுப்பி கொண்டிருக்கிறேன்.

வளர்பிறையின் ஆரம்ப நாட்களில்
ஒரு தினத்தில் கடிதம் வந்திருந்தது.
தெளிவான கையெழுத்தில் அனுப்பியிருந்தாள்.
"மஞ்சள் தவறி விழுந்த ஆற்றின்
கரையில் நான் இருந்தேன்.முகம்
கழுவிய பின்னர் போகதிருந்த
வண்ணம் குறித்து தோழிக்கு சந்தேகம்.
நான் உங்களை எடுத்து பூசியிருக்கிறேன்."

"நீ பூசிய மஞ்சளை கயிற்றில் கட்டி ,உன் சங்கு கழுத்திற்கு அவை அணிகலனாகும் நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்"
என பதில் கடிதம் போயிற்று.

விடிகாலையில் அருவி முன் அவள் நின்று கொண்டிருந்தாள்.சூரிய வெளிச்சத்தில்
காட்டு செடிகள் அவள் வனப்பை மறைத்து அழகாக காட்டி கொண்டிருந்தது.
அவள் நனைந்து அருவியை குளிக்க வைத்து கொண்டிருந்தாள்.
அருகில் வந்த போது குளிப்பாட்டுவதை விட்டு விட்டு அவனை பார்க்க தொடங்கினாள்.பார்த்துகொண்டே இருந்தாள்.ஒரு முடிவில்லாத காலத்தில் அவள்  சிக்கியிருப்பதாக தோன்றியது.

அவள் தலையை சாய்த்து பார்த்தபடி நிற்கும் புகைப்படம் வால்பேப்பராக மாறியிருந்தது.ஒரு  லென்சிற்குள் இருவரும் பொருந்தி போக வெட்கம் தாளாமல் கேமரா  பிளாஷ் அடித்தது.
இருவரும் குடிக்க ஒரு கப் போதுமானதாக மாறியிருந்தது.கடற்கரைக்கு முதுகு காட்டி கடலை பார்த்தபடி நிற்பது வழக்கமாயிற்று.குட்டி குட்டி பொம்மைகள் அவளிடம் குவிந்திருந்தது.ஒவ்வொரு முறையும் அவளை பார்க்க சாக்லேட்டுடன் வர வேண்டும்.தவறினால் முத்தங்கள் குறையும் தண்டனையும் உண்டு.

மருதாணியில் அவன் பெயரை இட்டுக்கொண்டாள்.அரிசி கோலத்தில்  அவன் எழுத்தை வரைந்தாள்.
பிள்ளையார் கோவில் தெரு
சந்திக்கும் இடமானது.கருப்பட்டியில் செய்த குழிப்பணியாரம் எடுத்து வருவாள்.அவன் கண்ணாடி வளையல்கள்  தேடி வாங்கி வந்து கொண்டிருந்தான்.
அவன் தாமதாகும் நாட்களில் மௌனவிரதம் எடுப்பாள்.

நதி முகத்துவாரத்தில் அவள் அமர்ந்திருப்பாள்.
அவன் வரும் போது மட்டும்
ஆயுதங்களை கீழே போடுவாள்.
அவள் கூடையில் தேன் இருக்கும்.தினம் ஒரு பூக்களால் அவளை அர்ச்சித்து கொண்டிருந்தான். காலநேரம் பற்றி அவர்கள் அறிந்ததில்லை.காலமும் அவர்களுக்காக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

அவள் வாட்ச்ப் செயலியை அழித்திருந்தாள்.இரண்டு நாட்களாக முப்பத்தைந்து தவற விட்ட அழைப்புகளை அவள் செல்போன் காட்டி
கொண்டிருந்தது.இனி எல்லாம் முடிந்தது என்று அவள் சொல்லும் போது அவன் நம்பவில்லை.இதே மாதிரியான நிறைய சண்டைகள் நீர்த்து போயிருக்கின்றன.
இந்த மௌனம் அவன் பார்த்திராதது.

பிள்ளையார் கோவில் தெரு வெறிச்சோடியிருந்தது.இரண்டு வாரங்களாக கடிதம் வரவில்லை.அவள் தோழிகள் எதுவும் தெரியாது என்று மட்டும் சொல்லி விட்டு போனார்கள்.
பிள்ளையாருக்கு துணையாக அந்த கோவில் வாசலிலேயே தங்க ஆரம்பித்திருந்தான்.அவன் தவம் கண்டு
பிள்ளையார் மனம் இறங்கி வரம் தரத் தயாராக இருந்தார்.அவள் நாத்திகம் பேசுபவளாக மாறியிருந்தாள்.

பாறையில் அவன் வைத்த பூக்கள்
காய்ந்து கொண்டிருந்தது.
காடு முழுக்க அவனுக்கு தெரியும்.அவள் மாயமாய் மறைந்து போயிருந்தாள்.
அன்று பசியில்லை.அவன் வெறிபிடித்தவன் போல வேட்டையாடி கொண்டிருந்தான்.
பெருங்காட்டில் அவன் அலறல் சத்தம்  எதிரொலித்து கொண்டிருந்தது.

சனி, 27 ஜனவரி, 2018

மற்றும் ஒரு மழை

இந்த மழை  யாருக்காக
என்று அவள் கேட்ட போது எனக்கு தெரியவியில்லை.
நான் குடைக்குள் இருந்த போது அவள் நனைந்து கொண்டிருந்தாள்.
மழைக்கு அழைத்து வந்து
நனைதல்  வரம் என்றாள்.
அவள் குளித்த  மழை
புனிதமாகியிருந்தது.
புத்தகங்கள் பிடிக்குமா என்று கேட்டாள்.ஏசுவை போல் இரண்டு கைகளை விரித்து அவ்வளவு பிடிக்கும் என்றேன்.ஆமாம் எனக்கும் நிறைய பிடிக்கும் அதில் தலை வைத்தால் தான் நன்றாக தூக்கம் வருகிறது என்றாள்.
சம்மணமிட்டு கையை மடித்து உன் தவத்தை மெச்சினோம்
பக்தா என்ன வரம் வேண்டும் என்றாள்.
என்னை கடவுளாக்கி விடு என்றேன்.
நான் பக்தை ஆகிவிடுகிறேன் என்றாள்.
கையில் அவள் பேர் எழுதி தந்தாள்.
கவிதை படம் வரைந்திருக்கிறது என்றேன்.
வேகமாக அழித்தாள்.
கவிதைக்கு கோபம் வந்து விட்டது.
அவள் குடித்த காபியில் அமிர்தம் இருக்கிறது என்றேன்.அது
எச்சில் என்றாள்.
குழந்தை எச்சில் பண்ணியதற்காக  சாப்பிடாமலா இருக்கிறோம்.
உன்னை பற்றி கவிதை எழுதி கொண்டு வந்திருக்கிறேன் என்றாள்.
வாங்கி பார்த்த போது அது வெறும் தாளாய் இருந்தது.இலக்கியம் எனக்கு புரியாதென்றேன்.
ஒரே பாட்டை எப்படி நூறு முறைகள் கேட்கிறாய் என்றேன். ஒவ்வொரு முறை கேட்டு முடிந்ததும் அந்த  பாடல் புதியதாகி விடுகிறது என்றாள்.
அவள் வைத்திருக்கும் குட்டி பொம்மைக்கும் எனக்கும அவள் பெரிதாய் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை. கொஞ்சுவதும் பின் தூக்கி வீசுவதும் ஒரு விளையாட்டு போலவே செய்கிறாள்.
அவள் அழும் போது கூடவே அழ வேண்டும்.அவள் சமாதானமாகியதும் 
எனக்கு ஆறுதல் சொல்வாள்.
அவள் தப்புக்கும்  மன்னிப்பு கேட்க வேண்டும்.போனல் போகிறதென எப்போதாவது மன்னிப்பாள்.
அன்று சொல்லாமல் விட்டதை
இப்போது அவளிடம் சொல்ல வேண்டும்.
மழை ஆசீர்வதிக்கபட்டிருக்கிறது.
இந்த நிலம் ஆசீர்வதிக்கபட்டிருக்கிறது.
நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

கண்ணம்மா

தேவ காணம் ஒலிக்கிறது.
இசை உலகிற்கு புது வரவு.
உலகின் எல்லா இசையும் நிற்கிறது.
அவள் பாட தொடங்குகிறாள்.
இசை உயிர் பெற்று அவளை தேடி வருகிறது. காற்றில் கலந்த ஓசை
எங்கும் எதிரொலிக்கிறது.
சிலுசிலுத்து தொடங்கும் குரல்
மெல்ல குழைகிறது; பின்
கட்டைளையிடுகிறது.
அதுவே இசையாகிறது.
இசைக்கோர்ப்பை பறவைகள்  எடுத்துகொணடு விடுகின்றன.
பிரபஞ்சம் ரசிகனாக
காலம் அவள் துயில் எழும்ப காத்திருக்கிறது.
அவள் பாடுகிறாள்.
மழை வருகிறது.
பிரளயம் ஏற்பட்டு
எல்லாரும் இறக்கிறார்கள்.
அவள் பாடுகிறாள்
மழை நிற்கிறது.
எல்லாருக்கும் உயிர் வருகிறது.
அவள் பாடுகிறாள்
தேசங்கள் அழிந்து ஆதி பூமி உருவாகிறது.
அவள் பாடுகிறாள்
உலகின் முதல் உயிர்
தோன்றுகிறது.
பாடுவதை நிறுத்துகிறாள்.
பிரபஞ்சம் வெடிக்க ஆரம்பிக்கிறது.

அப்போது அவர்கள் அங்கிருந்தார்கள்

அப்போது அவர்கள் அங்கிருந்தார்கள்.
ஒருக்கணம் அவர்கள்  மட்டுமே இருந்தார்கள்.பூமிக்கும் வானிற்கும் நடுவே நின்றார்கள்.பெருக்கெடுத்து பெய்கிற மழைநீரை தாங்கி   நிற்கிற இலையை ப்போல் அவர்கள் அன்பு வழிந்தோடிக்கொண்டிருந்தது.
காற்றின் காணாத தீவிரம் போல் அதோடு இசைந்தாடினார்கள்.
மழைக் காலத்து கிணற்றை போல்
அன்பு பெருகி கொண்டிருந்தது.
சுற்றுகிற உலகோடு இல்லாமல் இருந்தார்கள்.அதன்
பிரியத்தை எல்லாத்திசைகளிலும் உணர்பவர்களாக இருந்தார்கள்.
அங்கே மொளனம் நிலை கொண்டிருந்தது.
கடைசியில் கானகத்தில் விடப்பட்டு காதலில் தொலைந்தார்கள்.
அவர்கள் திரும்பி வரவில்லை.
அவர்களை எதிர்பார்க்கிறவர்களும் இல்லை.
கடல் நுரைகளை கொண்டு வேலி அமைத்து கொண்டார்கள்.
அங்கு தனிமை இல்லை
அவர்கள் இருந்தார்கள்.
காதல் இருந்தது.
நில்லாது ஓடிக்கொண்டிருக்கிற அருவியோடு  காலத்தில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
தடுப்புகள் இல்லா சுதந்திரத்தை உணர்ந்தவர்கள் திரும்பவில்லை.
பின்தொடரவில்லை.
அவர்கள் ஆரம்பித்தது மொளனத்தை அதனை உணரந்தவர்கள் அவர்கள் உலகிற்கு வரவில்லை.
அவர்கள் எல்லைகள் இன்னும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

தேவதை

வெளிச்சத்தில்  தெரியும் சந்திர
பிம்பமாய் அவள் இருந்தாள்.
அவள் அழகு பரிபூரணம் அடைந்திருந்தது.
அவள் கண்களில் ஒரு வித சோகம் தெரியும். அவள் புகைப்படங்களில்  பார்க்கலாம். அரங்கிற்குள்
வராத , கூடத்திற்கு கட்டுப்படாத
பயந்து விலகி செல்லும் ஒரு மான் போலவே அவள் முகம் இருக்கும்.
ரகசிய கண்ணி வெடிகளை போல திடீரென கிடைக்கும் தரிசனங்களிலோ
அவள் முகம் வேறு மாதிரியாய் இருக்கும்.
சிறு பிள்ளையை அதட்டும் பாவனையுடன் அவள் பேசும் போதெல்லாம் மற்றோர் முகம் .
அவள் அழகு பாசி படிந்த குளத்தில் பூத்திருக்கும் தாமரை என சில நாட்களில் தோன்றும். வேறு சில நாட்களிலோ பிரமாண்ட மலையின் முன் நிற்கும் சிறுவனாக தோன்ற வைக்கும்.
அவள் பற்றிய தெளிவான பிம்பம் எனக்கும்  இருந்ததில்லை.
அந்தரத்தில் தூக்கி வீசி பிடிக்கும் வேடிக்கையை அவள் ஒவ்வொர் நாளும் நிகழ்த்தி கொண்டிருந்தாள்.
அவள் பற்றிய நிறைய கதைகள் உண்டு.
சில கதைகளில் அவள் ராட்சசியாய் இருக்கிறாள். சில கதைகளில் அவள் தேவதையாய் இருக்கிறாள்.
எல்லாக் கதைகளிலும் அவளை பிடித்திருந்தது. எந்த கதையிலும் அவளுக்கு என்னை பிடித்ததாக
தரவுகள் இல்லை.
அவள் இருளை ஆடையாக அணிந்திருந்தாள். எப்போதும் அவளை நெருங்க முடிந்ததில்லை.
எல்லாக் காலங்களிலும் அவள்
மட்டும் வசந்த காலமாய் இருக்கிறாள்.
அவள் வரும் போது மழை வருகிறது.
பூக்களை கொட்டி விடுகிறாள். அது உலகம் முழுக்க பரவி விடுகிறது.
அவள் வரும் போது குளிர் வருகிறது.
அவள் தொடும் போது மரங்கள் உயிர் பெறுகிறது.
அவள் பேசும் போது மகுடி இசை ஒலிக்கிறது. மயங்கி சரணடைந்து விடுகிறார்கள்.
அவள் ஊதி நிரப்பிய பாலூனுக்கு
உயிர் வந்து விடுகிறது. பிரபஞ்சத்தை தாண்டி அது பறந்து கொண்டிருக்கிறது.
அவள் பற்றிய கதைகளை மட்டும் அறிந்திருந்த எனக்கு,
பனி சூழ்ந்த ஒரு மலைபிரதேசத்தில்
சூரியன் ஆரம்பிக்காத ஒரு காலையில்
அவள் காட்டிய முகம்
தேவதைகளுக்கானது.
என் மொத்த வாழ்நாளிற்கானது. 

Demantization

பேரழிவின் தொடக்கம் இன்று
தான் நிகழ்ந்தது. இடுங்கிய
கண்களுடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தவர்களிடம் சாகசத்தின் நாயகன் தோன்றினார்.அரக்க குழந்தையொன்றை கையிலெடுத்து வசந்தம் வரப் போகிறதென்றார்.
அதன் வாயில் ரத்தம் வடிந்தது.

அன்று தான் கடைசி தூக்கம் என
அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அன்று தான் அவர்கள் சம்பளம் வாங்கியிருந்தார்கள்.
அன்று தான் அவர்கள் தொழில் தொடங்கியிருந்தார்கள்.
அன்று தான் அவர்களுக்கு கல்யாணம் நிச்யமாகியிருந்தது.
அன்று தான் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்.
பின் எப்போதும் நினைவில் வைத்திருக்க போகிற அந்நாளை வெடிச்சத்தங்களிடையே ,
ஆரவாரங்களிடையே,
Don't panic களிடையே,
உறங்க போனார்கள்.

விடிய தொடங்கியிருந்தது.
சரித்திரத்தின் மகத்தான நாட்களில் வாழபோகிறோம் என்ற நினைப்பில்
எழுந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சாலைக்கு வந்த போது காவி நிறகுரங்கு கூட்டமொன்று  எல்லையிலே
என பாடியபடி சென்றது.
ஊருக்குள் அவ்வளவு பெரிய குரங்கு கூட்டத்தையே மக்கள் அப்போது தான் பார்த்தார்கள்.
மீட்க வந்திருப்பது தேவ குமாரன் அல்ல என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு நேரமிருந்தது.

காரிலிருந்து காலை எடுத்திராதவர்கள் தரைக்கு வந்தார்கள்.கடவுளை கூட காத்திருந்து பார்த்திராதவர்கள் கால்கடுக்க நின்றார்கள். நீண்ட கூட்டத்தை பார்த்து திகைத்தார்கள்.
பயமும் நடுக்கமும் எழ ஒருவரை
பார்த்து கொண்டார்கள்.
தூரத்தில் எல்லையிலே சத்தம் ஆரவாரமாக கேட்டு
கொண்டிருந்தது.

எல்லாம் மாறிவிடும் என்ற நப்பாசையில் படுக்க சென்றவர்களை வரவேற்க காத்திருந்தது பேரழிவின்
இரண்டாம் நாள்.கையிருப்பு குறைந்த போது  பயப்பட தொடங்கியிருந்தார்கள். வெற்று காகிதமாக்க பட்டிருப்பது யார் என அவர்களுக்கு மெல்ல உரைத்தது.
இருந்தும் சாகசத்தின் நாயகன் ஏதேனும்  வித்தைகள் செய்து தங்களை
மீட்பாரென ஆசுவாசபடுத்தி கொண்டார்கள்.
அவர் அப்போது தான் உலக உருண்டையை மற்றுமொரு முறை
சுற்றி விட்டு கொண்டிருந்தார்.
அணைக்க படாத வானுர்தி எஞ்சின் உருமியபடி காத்திருந்தது.

மூன்றாம் நாள் அரக்க குழந்தை சுறுசுப்புடன் எழுந்தது.அதன்
கட்டுக்கள் விடுவிக்கபட்டன.
இரண்டு நாள் பசியுடன் ஊருக்குள்
புகுந்த போது பெரு முதலைகள் தண்ணீருக்குள் மூழ்கின.
வல்லூருகள் மலையுச்சிக்கு சென்றன.
கையாலாகாத நடுத்தர வர்க்கமும்
ஏழை கூட்டமும் தெருவில் நின்று கொண்டிருந்தது.
மொழி தெரியா அத்தனை மக்களுக்கும்
அரக்க குழந்தையின் பெயர் மறக்க
முடியா வண்ணம் அன்று பதிந்தது.

டிஜிட்டல் பட்டாடை கொண்டு மூடினால் அதன் மூர்க்கம் குறையுமென யாரோ சொல்ல அரக்க குழந்தைக்கு ஆடை நெய்யபட்டது.
இப்போது தான் ஆடையே வாங்க
போகும்  கூத்தை கூட்டம் வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்த போது அது அம்மணமாக தெருவில்  ஓடி கொண்டிருந்தது.

சாகசத்தின் நாயகன் தூக்கத்தில்
இருந்து விழித்த போது ஆறு மாதங்களாகியிருந்தது.
மரண ஓலமும் சிதை நாற்றமும் வீசும் பெரிய சுடுகாட்டின் நடுவே
ஊர்தி இறங்கியது.
பெற்று போட்டு போன அரக்க
குழந்தை விளையாடி களைத்து போயிருந்தது.

இன்று அரக்க குழந்தையின்
முதல் பிறந்தநாள்.
நூற்றுக்கணக்காணவர்களின்
ரத்தத்தை குடித்து நகர முடியாமல்
பெருத்து போயிருக்கிறது.
அதை தேசபக்தி ஊட்டி வளர்த்தவர்கள்
இன்று சீண்டுவதாயில்லை.
அதன் தம்பிகள் போடும் வெறியாட்டத்தை
பார்த்தபடி ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறது.
இந்த அனாதை குழந்தையின் தந்தை
இந்நேரம்  அடுத்த குழந்தைக்கு  தயராகி
கொண்டிருக்க கூடும்.

யட்சி

கடற்கரையிலிருந்து மலையோரம் வந்து திரும்புகிற கடற்காற்றை போல் அவள் அமர்ந்திருந்தாள். ஈரக்காற்று அவள் தலைமுடி வாசம் பெற்று திரும்பி கொண்டிருந்தது.ஆழிப்பேரலைகள் சுற்றி போகிற தனித்த தீவில் தீவினைகள் நெருங்க முடியா தூரத்தில் அவள் இருந்தாள். அவள் பாதச் சுவடுகள் பட்ட மணல் வெளியை அலை கொண்டு போய்  வைத்து கொண்டது.

அவள் சிந்தனையில் இருந்தாள்.
காலம் மெல்ல நீண்டு காணாமல் போய்
பின் திரும்பி அவளுடன் நிழலாக வந்து கொண்டிருந்தது.கோடானு கோடி நட்சத்திரங்கள் அவளுக்கு துணையாக நின்றன.ஓடி வந்து அணைக்கின்ற கடலும் தூரத்து மரங்களும் அவள் பதில் பேச காத்திருந்தன.அப்போதும் அவள் தனிமையில் இருந்தாள்.
பெரும் புயலுக்கு உடைந்து விடாத விடாத நாணல் புல் மாதிரி மௌனமாய் இருந்தாள்.

மற்றொரு முறை,
ஒரு மஞ்சள் நதியின் குறுக்கே நடந்து வந்து கொண்டிருந்தாள்.பாதி மூழ்கியிருந்த மரக்கட்டையில் நின்றிருந்த போது மழை வந்தது.அவள் அங்கேயே இறுக கைகளை கட்டியபடி நின்று கொண்டிருந்தாள். மழை வந்து அழைத்து கொண்டு போகும் வரையிலும் எங்கும் போகவில்லை.

பின் ஒரு நாள்,
காட்டுக்குள் திரும்பி செல்கிற சாலையின் ஓரத்தில் தனியே அமர்ந்திருந்தாள்.காடு தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.அப்போது அவளுக்கு நூறு வயதாகி இருந்தது.

Alternate climax


"நான்  தான் தலைவனா இருப்பேன்."
"இல்ல நான் தான் "
"ஏன்டா இப்படி அடிச்சிக்கிறீங்க
எனக்கு தலைவலியா இருக்கு "
கமல், நாமெல்லலாம் அண்டார்டிக் போக போறோம் அதுக்கு யார் தலைவனா இருக்கதுங்கிறது தான் பிரச்சனை.
"நாம கோவா போகலாமே "
அது எங்கே இருக்கு கமல்
உங்க யாருக்கும் தெரியாதா
நீ தான் இந்த பெயரை சொல்ற
"எனக்கு தலை வலிக்குது
ஆமாம் இது என்ன வருஷம்"
2132
ஒரு நிமிஷம்
என்ன கமல்
நான் இருபத்தியோரம் நூற்றாண்டை சேர்ந்தவன்.
*
ஆபீஸ் ரூமை திறந்த போது சென்ட் வாசனை அடித்தது.இருளுக்குள் சென்று லைட்டை on செய்தேன்.
"வாங்க கமல் ".
ரஜினி சோபாவில் அமர்ந்திருந்தார்.
"வயசனாலும் உங்க ஸ்டைல் மட்டும் மாறவே இல்ல "
"நான் உங்கள தான் பாக்க வந்தேன்
 கமல் "
" ‎அது சரி பூட்டியிருக்க ஆபீஸ்குள்ள எப்படி வந்திங்க "
"---"
"என்ன ரஜினி எதுவும் பேச மாட்டேங்கிறிங்க "
திரும்பிய போது ரஜினி கையில் ரிவால்வரோடு நின்று கொண்டிருந்தார்.
*
லேப் பளிச்சென்றிருந்தது.கண்ணாடி சிதறல்கள் இல்லை.கதவு உடைக்க படவில்லை.ரத்தம் திட்டு திட்டாக உறைந்திருக்கவில்லை.
இன்னும் ஏகப்பட்ட இல்லைகள்.
புரபசர் தூங்கி கொண்டிருப்பது மாதிரி தான் இருந்தது.இன்ஸ்பெக்டர்க்கு ஆச்சரியமாக இருந்தது.இது வரையிலும் எந்த கொலையும் இப்படி நிகழ்த்தபட்டது இல்லை.தடயவியல் குழுவும்  எதுவும் கிடைக்கவில்லை  என்று சொல்லி விட்டது.இன்ஸ்பெக்டர் புரபசரை நகர்த்தினார்.பின் மண்டையில் குட்டியாய் ஒட்டி கொண்டிருந்த சிப் அவர் வழுக்கையில் தெரிந்தது.
"பூத கண்ணாடி கொண்டு வாங்க "
"என்ன சார் அது "
இனிமேல் தான் கண்டுபிடிக்கணும்.
அவர்களுக்கு எப்போதும் அது தெரிய போவதில்லை.இன்னும் அறுபது ஆண்டுகளுக்கு பின் அதை கண்டுபிடிக்கவே போகிறார்கள்.
அரசாங்கத்தால் தடை செய்யபட போகிறது.
பூதக்கண்ணாடி வழியே நானோ புல்லடை வியப்புடன் இன்ஸ்பெக்டர் பார்த்து கொண்டிருந்தார்.
*
என்னோட ஸ்டுடெண்ட்லேயே நீதான் புத்திசலியானவன் கமல்.
"நன்றி புரபசர் "
 இதுல இருக்க எல்லா பிரச்சனைகளையும் யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.
 ‎உனக்கு சம்மதமா
" ‎நூஉஉஉறு  சதவீதம் "
"ஏன் இப்படி இழுத்து  சொல்ற கமல் "
இந்த வார்த்தையை என் மனசுக்குள்ள யாரோ பதிய வச்சிட்டாங்க சார்.
"யாரு "
துபூச்சிக்கு துபூச்சிக்கு பிக்பாஸ்
"என்ன உளர்ற கமல் "
ஒன்னும் இல்ல சார் நீங்க ஆரம்பிங்க.
புரபசர் நாற்காலி மாதிரி இருந்த அந்த வினோத மெஷினில் கமலை உட்கார செய்தார்.காலம் 2132 செட் செய்தார்.
"சார் இதை நிறுத்துங்க "
"என்ன கமல்"
எனக்கு தலை வலிக்குது .
*
"இந்த ரிவால்வர் பழைய மாடல் ரஜினி,
உன்ன மாதிரியே அதுக்கும் வயசகிடுச்சு "
"ஆனா உனக்கு வயசாகலையே கமல்
அப்படியே தானே  இருக்கே "
புரபசர் என்னை விட்டு உன்னை தேர்ந்துடுக்கும் போது எனக்கு சந்தோசமா இருந்தது கமல் ஆனா நீ அவரயே கொல்லுவனு  எதிர்பார்க்கல.
"---"
போலீசுக்கு வேணா தெரியாம இருக்கலாம் எனக்கு தெரியும் கமல்
இத்தனை வருஷம் உனக்ககாத்தான்
காத்திருந்தேன்.புரபசர் இறந்து நாப்பது வருஷம் கழிச்சு தான் என்னால இதை உருவாக்க முடிஞ்சது.
*
என் பெயர் ரஜினி.கடவுள் ரஜினியோட பக்தன்.எனக்கு ஒரு நண்பன் இருக்கான்.
காலேஜ் ல தான் அவனை பார்த்தேன்.
அவன் பெயர் கமல்.எங்க ரெண்டு பேரையும் இன்னைக்கு புரபசர் வர சொல்லியிருக்கிறார்.கமல் அறைக்கு சென்ற போது பூட்டியிருந்தது.
கமல் எப்போதும் இப்படி தான்.
அதை விட அதிர்ச்சியான விஷயம் மாலை  புரபசரை இறந்த செய்தி வந்தது.
கமலையும் காணவில்லை.
*
நான் இங்க வந்த முதல் நாளே எனக்கு நண்பர்கள் கிடைச்சிடாங்க ரஜினி.
நாம காலம் பூரா கோவா போற மாதிரி பிளான் போடறது இங்க இல்லை.
புரபசர் நல்லவர் தான்.
அவர் நூறு வருடங்காகளுக்கு அப்பறம் உள்ள தொழிநுட்பங்களை இப்பவே கொண்டு போக நினைச்சார்.இந்த உலகமே கொண்டாட்டமா இருந்தது.
எனக்கு இங்க இருந்து வர விருப்பமே இல்லை.அப்போ தான் அவர் உன்னை அனுப்பிச்சார்.2136ல உன்னை பார்த்ததுமே ஒரு விஷயம் எனக்கு புரிஞ்சது.நமக்குள்ள இருக்க போட்டி நூறு வருஷம் கழிச்சும் நான் தொடர விரும்பல.
அண்டார்டிக்ல வாங்குன துப்பாக்கியோட புரபசர பாக்க என்னை அனுப்பிச்ச அதே தேதியில  வந்தேன்.அவரை என்னால சமாதானம் பண்ண முடியல .அதனால,

ரிவால்வர் வெடித்தது.

வயசானாலும் உன் ஸ்டைல் மட்டும்
மாறல ரஜினி.

*
திரையரங்கம் ஆர்பரித்தது.தியேட்டரின் உள் அறையில் ரஜினியும் கமலும் அமர்ந்திருந்தனர்.
"எப்படி ரஜினி கிளைமேக்ஸ் சரியா
இருக்கும்னு நினைச்சீங்க "
மன்னிக்கிறவன் தான் பெரிய மனுசன் டையலாக் இப்போ யாரும் ஏத்துக்க
மாட்டங்க கமல்.
"பழி வாங்குற கதை தான் தமிழ்ல
ஓடும் போல "
ஆமாம் அது கிறிஸ்டோபர் நோலனா இருந்தாலும்.

A flim by Nolan என டைட்டில் ஓடி கொண்டிருந்தது.கமல் பிக்பாஸ் 18க்கும்
ரஜினி எந்திரன் 8 ற்கும் கிளம்பிய போது
அரசியலுக்கு வா தலைவா என கோஷம் வெளியே  கேட்டு கொண்டிருந்தது.

காளத்தி

கைவிடப்பட்ட தரிசு நிலத்தின் மூலையில் பழங்கால கிணறு  வெள்ளாமை நிலத்தின் கடைசி நினைவுகளை போல இருந்தது.
பாட்டனார் காலத்தில் விளைச்சல் பூமியாக இருந்திருக்க வேண்டும்.மகன் வழியில் கட்டிகாக்க திரணியில்லாது குடிக்கும் கூத்தியாலுக்கும் குடுத்து விட்டார்கள். கிராமத்தில் பெரும் தனக்காரர்களை இருந்தவர்களின் பேரன்கள் ஓட்டாண்டிகளாகி போகினர். ஊரில் ஐம்பது வயதுக்கு அதிகமாக இருந்த எல்லாருக்கும் ஒரு தலைமுறை அழிந்த கதை தெரிந்திருந்தது.
பேச்சு வழக்காக ,அறிவுரையாக வீழ்ந்த குடும்பத்தின் கதையை சொல்லி கொண்டே இருந்தார்கள்.
இந்த இடமும் பாசன வசதி இல்லாததலே சீண்டபடாமல் கிடந்தது.
சீட்டாடுவதற்கு வசதியாக தென்னை மரங்கள் சுற்றி இருந்த அந்த இடத்திற்கு தான் கருப்பன் வர சொல்லியிருந்தான்.
பைக்கை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு ஒற்றையடி பாதையில் நடக்கும் போது குற்ற உணர்ச்சியாய் இருந்தது.எந்த தைரியத்தில் பார்க்க ஒத்து கொண்டேன் என்பதே தெரியவில்லை.
களத்துமேட்டுக்கு அருகிலேயே கருப்பன் நின்று கொண்டிருந்தான்.கோடையும் கடுமையும் அவன் முகத்தை இறுக்கமாக மாற்றி வைத்திருந்தது.
அருகில் வந்து நின்ற போதும் அமைதியாக இருந்தான்.அந்த அமைதி
அச்சுறுத்துவதாக இருந்தது.

"உன்கிட்ட கேக்க வேணாம்னு தான் நினைச்சேன் ரவி ,காட்டுல போட்டதையும் எடுக்க முடியல நகையில போட்டதையும் எடுக்க முடியல கொஞ்சம் பணம் வேணும்."

"கருப்பா ,உனக்கே தெரியும்
இருக்கிற சொத்தை எல்லாம் வித்து பாவக்கணக்கு தீர்த்து நாலு வருஷம் கூட ஆகல மறுபடியும் பணம்னு வந்து நிக்கிற"

"நீ தூக்கி போட்ட  பணம்
ஊடல வந்தவனும் நின்னவனும் தின்னது போக எஞ்சுனது தம்புடி அரிசி தான் ரவி. அதுவும் ஆத்துல கரைச்சிட்டோம்."

" கேட்கும் போதெல்லம் படியளக்க பரமசிவன் இல்ல கருப்பா, வானத்தையும் ஆத்தையும் பார்த்து விவசாயம் பண்ற கூலிக்காரன் தான் இருக்கேன்.
மறுபடியும் வந்து மாரடிக்காத "

வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாகி விட்டது மாதிரி தான் தோன்றியது.
கருப்பன் எதுவும் பேசாமல் கிணற்று பக்கம் பார்த்தவாறு
நின்று கொண்டிருந்தான்.
×××××
பதினோரு மணிக்கே வெயில் உச்சிக்கு வந்திருந்தது.இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் பஸ்ஸ்டாண்ட் வந்து விடும்.கை துண்டை தலையில் கட்டியதும்  வியர்த்தது.
சின்ராசு மகன் எதிரில் வந்து கொண்டிருந்தான்.
"மாமா எங்க போறீங்க "
" 11 மணி காருக்கு மாப்ள,பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் தானேனு நடக்க ஆரம்பிச்சேன்.
கண்ணை இருக்கிக்கிட்டு வருது."
"உக்காருங்க நான் கொண்டாந்து விடறேன் "
"துண்டை வாங்கி பின் சீட்டில் வைத்தான்.
இப்போ ஏறி உட்காருங்க
நல்லாயிருடா மாப்ள ,பொண்ணு இருந்தா கட்டி வச்சிருப்பேன்.
"ரவி எங்க மாமா,அவன் கிட்ட சொன்னா கொண்டாந்து விடுவானே , வயசான காலத்துல ஏன் இவ்வளவு தூரம் நடந்து கிட்டு "
"அப்பன் மகன் உறவெல்லாம் எப்பவோ அந்து போச்சு மாப்ள ,அவன் என்கிட்ட எதுவும் சொல்றதும் இல்லை ,நானும் கேட்கறது இல்ல."
மாப்ள எங்காலத்தில நான் கண்ணு மண்ணு தெரியாம இருக்காத அழிச்சேன்.
எங்கப்பாரு கிட்ட சொத்து இருந்தது.
இவன் பங்குக்கு மிச்சம் இருந்ததையும் உட்டுட்டு  வந்தான்.
ஏதோ பிரச்சனை வரமா போகுது "
சரி மாமா இறங்கிகங்க.நான் போய்ட்டு வரேன்.
பஸ் வருவதற்கும்
கொஞ்ச நேரத்திற்கு முன்னாலேயே திரும்பி வந்தான்.
" என்ன மாப்ள ,என்ன அவசரம் "
"நம்ம ரவிக்கும் கருப்பனுக்கும் கிணத்தடிக்கிட்ட சண்டையாம் "
"ஐய்யோ மாப்ள , அவன் இன்னொரு எழுவ இழுத்துட்டு வந்துற போறான் .சீக்கிரம் வண்டிய எடு .
××××××
நான்கு வருடங்களுக்கு முன் ரவி காளத்தி பாலத்தில் இருந்து உயிரோடு வந்ததே அதிசயம் தான்.ஊரே திரண்டு ஓடி வந்து கொண்டிருந்தது.ட்ராக்டரில் மாட்டிய பையனை உரித்து தான் எடுத்தார்கள்.
காளத்தி பால வளைவு ரத்தம் குடித்தே வளர்ந்திருந்தது.இருந்தும் உயிர் பலி வாங்கியது இல்லை.அந்த குறை ரவியை வைத்து தீர்த்து கொள்ள நினைத்திருக்க வேண்டும்.பின்னே ஏன்  அவ்வளவு பெரிய ட்ராக்டரில் ஒருவன்  வண்டியை கொண்டு வந்து விட போகிறான்.ஒவ்வொரு சொந்தக்காரன் வீட்டிலும் ஒளித்து ஒளித்து ரவியை காப்பாற்ற  வேண்டி இருந்தது.
ட்ராக்ட்ரை விற்று போலீசுக்கும்
நிலத்தை விற்று ஊர் வாய்க்கும் போட்டு கேஸ் முடிந்தது.
×××××
கருப்பன் கைகட்டோடு நின்று கொண்டிருந்தான்.கிணறும் தரிசு நிலமும் அவன் பெயருக்கு எழுதி வைக்க பட்டது.

சில மணி நேரங்கள்

16 மணி நேரங்களுக்கு முன்பு :

      Last seen 09:02 Am என காட்டி கொண்டிருந்தது.சாதாரணமாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது.விர்ச்சுவல் உலகில் அவள் மறைந்ததில் இருந்தே  நாள் தோறும் Dp, status காட்டாத அமங்களமான அவள் புரபலை தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.நான் வசிக்கும் இதே பிரபஞ்சத்தில் தான் ஏதோ ஓர் மூலையில் அவளும் இருக்கிறாள் என்பதை உயிர் பெற்றிருந்த அவள் புரபைல் காட்டி கொண்டிருந்தது.அவள் இருப்பே போதுமானது.மிக முக்கியமாக என் நம்பரை இன்னும் நீக்காமல் வைத்திருக்கிறாள்.அவள் நியாபகத்தின் அடுக்குகளில் எங்கோ ஓரிடத்தில் நான் இருக்கிறேன்.Curserஐ வைத்து அவ...
என டைப் செய்ய தொடங்கும் போது last seen online ஆக மாறியது.

இரண்டு வருடங்கள் மற்றும் ஏழு மாதங்களுக்கு முன்பு :

     அந்த பெயரை படித்ததுமே fake id ஆக இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆங்கில திரைப்படத்தில் இருந்து பெயரை எடுத்திருக்க வேண்டும். மேற்குலகத்தின் சாயல் அந்த புரபைல் மீது படிந்திருந்தது.Req accept செய்த இரண்டு நாட்களுக்கு பிறகு முதல் msg வந்தது. இந்த மாதிரியான விஷயங்களில் என் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை.நான்கு நாட்களிலேயே எதிர்ப்பாலினத்திடம் பேசி கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டது.ஆனாலும் அந்த வட அமெரிக்க பெயர் மட்டும் நெருடலாகவே இருந்தது.மற்றுமொரு நான்கு நாட்கள் கடந்த பிறகு அவள் உண்மை பெயரை சொல்ல ஒப்புக் கொண்டாள்.  பெயர் தெரிந்த போது அவள் அப்பாவோ அல்லது அவருக்கு தெரிந்த யாரோ ஒருவர் நிச்சயம் தமிழ் ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

இரண்டு மணி நேரங்ககளுக்கு முன்பு :

Whatsup deactivate செய்யபட்டிருந்தது.ஒவ்வொரு சமூக வலை தளத்தில் இருந்தும் வெளியேறி கொண்டிருந்தேன்.எடை குறைந்தது மாதிரி செல்போன் பிராசசர் வேகமாக இயங்க தொடங்கிற்று.கடைசியில் mp3 பாடல்கள் மட்டும் எஞ்சியது.வெகு நாட்களுக்கு பிறகு செல்போன் கையில் இருந்து தரைக்கு இடம் பெயர்ந்து.ஒரு கணம் அறை புதுமையாக தோன்றியது.ஓரத்தில் புத்தக திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள் கலைந்து கிடந்தது.முதல் புத்தகத்தை கையில் எடுத்ததும் தூசி நெடியேறி தும்மல் வந்தது.ஊதி விட்டு படிக்க ஆரம்பித்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு :

உலகம் சுருங்கி விட்டது. தொழில்நுட்பங்கள்  மனிதனுக்கு இத்தனை சந்தோஷத்தை கொண்டு வரும் யாரும் எதிர்ப்பர்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் சில மரபு பழக்க வழக்கங்ககள் மாறுவதில்லை.மரத்தில் பெயரை எழுதிய தலைமுறையில் இருந்து வந்த நான் என் எல்லா கணக்கிற்கும் அவள் பெயரை கடவுசொல்லாக்கினேன்.
அவந்திகா.இந்த பெயரை கேட்டு இன்றோடு ஏழு மாதங்கள் முடிய போகிறது.அவள் குரல் மெல்லிசையை போல் எப்போதும் காதில் கேட்டு கொண்டிருந்தது.உலகின் நிகழ்வுகள் யாவும் அவளிடம் சொல்வதற்காக தான் அப்போது  நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஆறு வருடங்கள் இரண்டு மாதங்ககளுக்கு முன்பு :

ஆர்குட் மாதிரி தான் இருக்கிறது.என்ன புதுமையை கண்டார்கள் என தெரியவில்லை.ஆளாளுக்கு பேஸ்புக்கில் இருப்பதை தான் கேட்கிறார்கள்.இப்போது இது கவுரவ பிரச்சனை.டான் அர்ஜித்.அர்ஜித் ராக்கி எதுவும் ஒத்து வரவில்லை. கடைசியில் தகப்பனார் வைத்த அர்ஜித் கண்ணனை எடுத்துக்கொண்டது.தனுஷ் போட்டோ ஒன்றை முகப்பு படமாக வைத்தேன். இரண்டு நாட்களுக்காக யாரும் விரும்பகிற மாதிரி தெரியவில்லை.நானே விரும்பி கொள்கிறேன்.ஒரு லைக் தான் போட முடியும் போலிருக்கிறது.

ஆறு மாதங்ககளுக்கு முன்பு :

      அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது.சின்ன விசயத்திற்கு எல்லாம் சண்டை வருகிறது.அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. காரணமற்ற நூற்றுக்கணக்கான சண்டைகள்.எங்கே பிரச்சனை என்பதே கண்டுபிடிக்க முடியவில்லை.எங்கள் காலத்தின் வீழ்ச்சியில் நாங்கள்  இருந்தோம்.பேசுவதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் குறைந்து கொண்டே இருந்தது.கடைசி மூன்று நாட்களாக அவளிடம் இருந்து msg எதுவும் வரவில்லை.இன்று அவள் dp, status மறைந்து போயிருந்தது.அவள் என்  உலகத்தில் இருந்து மொத்தமாக காணாமல் போயிருந்தாள்.

யாழ்மொழி

இத்தனை உயரத்திற்கு இதற்கு முன் வர விரும்பியதில்லை.அல்லது
ஒரு முறையை தவிர ; கீழே தெரிகிற வனம் முழுவதும் அவள் முகம் தெரிந்தது. ஒவ்வொரு மரங்களிலும் அவள் இருந்தாள்.கனரக வாகனங்களும் மனிதர்களும் இல்லாத மரங்களடர்ந்த ஒரு நெடுஞ்சாலையை நான் தான் அவளுக்கு காட்ட விரும்பினேன்.இப்போது அவள் பட்டாம்பூச்சியாக பிறந்து இந்த காடுகளில் உலவி கொண்டிருப்பாள்.வருகிறேன் யாழ்மொழி.இருவரும் இந்த காடு முழுவதும் பறப்போம்.தெளிவற்ற இந்த இரவு ஆரம்பிப்பதற்கு முன்பே வந்து விடுவேன். குரல்கள் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அவற்றை கேட்க  விருப்பமில்லை.

×××××××

19 மணி நேரங்களுக்கு முன்பு :

உருவங்கள் மங்கலாகி கொண்டிருந்தது.மூன்றாவது ரவுண்டிலேயே நிறுத்தியிருக்க வேண்டும்.இப்போது யோசிப்பதற்கு நேரமில்லை. கார் சாவி பாக்கெட்டிலேயே இருந்தது. கண்ணாடியை சரி செய்த பின்னும் மனிதர்கள் இரண்டிரண்டாக உருமாறி கொண்டிருந்தார்கள். எத்தனை மைல்கற்களை இடித்து வீடு போய் சேர போகிறேன் என்று தெரியவில்லை. வந்து சேர்ந்த போது 10 மணி ஆகிவிட்டிருந்தது.காலையில் தெளிந்து காரை பார்த்த போது தான் கவனித்தேன்.காரின் பின்புறம் நசுங்கி ஹெட்லைட் உடைந்திருந்தது.

××××××

அந்த காட்சி என் வாழ்வை மாற்றி போடும் என எதிர்பார்க்கவில்லை.ஒரு வகையில் இந்த சந்திப்பு நிகழாமல் இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் சாதரணமாக எடுத்து கொண்டிருக்க வேண்டும். முடியவில்லை.இந்த தவறு என்னில் இருந்தே தொடங்குகிறது.நான் தான் சரி செய்ய வேண்டும்.

×××××

ஹங்கோவர் குறைந்திருந்தது. வண்டியை ஷெட்டில் விட்டு வரும்போது தான் அவனை பார்த்தேன். முதலில் அவன் இயற்கையை  ரசிப்பவனாக தான் தோன்றியது.இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு அக்கறையில்லை. நான் பிறந்ததில் இருந்து இதை பார்த்து கொண்டிருக்கிறேன்.இந்த பகுதிக்கு வருகிறவர்கள் முழுக்கவுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.அவன் இயற்கையை ரசிக்கிற மாதிரி தெரியவில்லை.எதிர்ப்பார்த்தது தான். அட்ரினலின் சுரந்து
கத்திகொண்டே ஓடினேன். அவன் எதையும் காதில் வாங்குகிறவனாக தெரியவில்லை.

××××××

இன்று அவளுக்கு பிறந்தநாள். காதலிக்க ஆரம்பித்து மூன்று வருடங்களாகி விட்டது.
இதே மாதிரியான ஒரு பிறந்தநாளில் அது நிகழ்ந்தது. இரவையும் காடுகளையும் ரசிக்கிற வினோத பிறவி அவள்.அவள் உலகில் எல்லாம் உயிர் பெற்றிருந்தது.மரங்களும் பறவைகளும் அவள் வாழ்வோடு கலந்திருந்தது. அவள் பெயரும் மொழியும் ஒன்று தான்.யாழ்மொழி. அவளுக்கு இந்த உலகத்தை பரிசளிக்க விரும்பினேன். இப்போது  குறைந்த பட்சம் அவள் விரும்புகிற உலகில் கொஞ்ச நேரம் இருந்து  வர வேண்டும்.இது தான் திட்டம்.பைக் இருக்கிறது.மூன்று மணி நேரத்தில் அவள் உலகில் நுழைந்து விட முடியும்.

×××××

"ரொம்ப நன்றி சார் "

" பரவாயில்லைங்க ".

கைத்தாங்கலாக அவனை இரண்டு பேர் பிடித்திருந்தார்கள்.அவன் முகம் அழுது சிவந்து போயிருந்தது.நடக்க ஆரம்பித்தோம்.

" என்ன ஆச்சு, நான் பார்த்துட்டு ஓடி வரும் போதே sucide பண்ணிக்க பாக்குறாப்ள "

கூட வந்தவர்களில் ஒருவன் பேசினான்.

"நேத்து இவன் ஆளுக்கு பர்த்டே சார்.அவளை கூட்டிகிட்டு இங்க வந்திருக்கான்.வர வழியில் எவனோ
கார்காரன் திருப்பத்தில அடிச்சிட்டு நிக்கமா போயிட்டான்.அந்த பொண்ணுக்கு பயங்கர அடி. இருட்டுல பைக் வேற  நசுங்கிபோய் எடுக்க முடியலை. கையிலேயே கொஞ்ச தூரம் தூக்கிட்டு வந்திருக்கான்"

நான் எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.

"அப்பறம் ஒரு வண்டி கிடைச்சு ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்திருக்கான். இன்னைக்கு மத்தியானம்  அந்த பொண்ணு செத்து  போச்சு சார்.கார்ல அடிச்சவன் கொண்டு வந்திருந்தா கூட காப்பத்தியிருக்கலாம். அவன் நிக்காமயே போயிருக்கான்".

நான் பேசிக்கொண்டு வருகிறவரின் தோளில் சாயந்திருக்கிற அவன் முகத்தை பார்த்தேன்.அவன் சுய நினைவோடு இருக்கிற மாதிரி தோன்றவில்லை.

"ஹாஸ்பிடல் வந்து விசாரிச்சிட்டு இவன தேடிக்கிட்டு வந்தோம்.அதுக்குள்ள இப்படி தெய்வம் மாதிரி வந்து காப்பத்திட்டிங்க"

"இங்க இருப்பார்னு எப்படி தெரியும்" என்றேன்.

" இங்க தான் ஆக்சிடென்ட் ஆச்சு " என கைகாட்டினார்கள்.அந்த சாலையில்  முடிவில் என் வீடு இருந்தது.

×××××

கார் ஷெட்டில் இருந்து எடுக்கபடவில்லை.
உள்ளூர் வாலிபர் தற்கொலை என செய்தி வந்திருந்தது.

கோர்ட் ஆப் லவ்

கோர்ட் ஆப் லவ் கூடியிருந்தது.நாட்டின் மிக முக்கிய காதல் வழக்கான கார்த்திக் ஜெஸ்ஸி வழக்கு இன்று எடுத்துக்கொள்ள பட இருக்கிறது.வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பபட்டு இன்று ஆஜராகியிருக்கிறார்கள்.
கோர்ட்க்கு வெளியே பெமினிஸ்ட் குழுவொன்று கார்த்திக் உருவ பொம்மையை எரித்து கொண்டிருந்தது.
ஒரு தலை ராகம் குழுவினர் பாண்ட் வாத்தியங்களுடன் தயாராக இருந்தனர்.
இன்ஸ்பெக்டர் நரசிம்மா தலைமையில்
போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்தியது.

நீதிபதி :     ஜெஸ்ஸி ஏமாற்றி விட்டதாக கார்த்திக் அளித்த புகார் மனுவின் பேரில் விசாரணை தொடங்குகிறது. சாட்சியங்களை பப்ளிக் பிராசிக்யூட்டர் விசாரிப்பார்.

Vtv கணேஷின் சாட்சியம் :
    விசாரணை கூண்டுக்குள் வந்த vtv கணேஷ் நீதிபதிக்கு வணக்கம் தெரிவிக்கிறார்.கேள்விகள் ஆரம்பமாகிறது.

" கார்த்திக் ஜெஸ்ஸியை லவ் பண்றதா சொல்றாரே ,இது உங்களுக்கு எவ்வளவு நாளா தெரியும் "

" வேணாம்டா தம்பி,நமக்கெல்லாம் லவ் செட்டாகுதுனு சொன்னேன்.கேட்க் மாட்டேங்குறான்.இப்படி தான்... "

பப்ளிக் பிராசிக்யூட்டர் இடைமறிக்கிறார்.

"  போதும்.  உங்க குரலுக்கு என்ன ஆச்சு,கடப்பாரையை முழுங்கிட்டிங்களா "

"இன்னா சார் கலாய்க்கிறீங்களா "

"சரி.ஜெஸ்ஸி கார்த்திக்கை காதலித்தார் என உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா "

" ஆமா சார்.அவனுக்குகாக தான் அந்த பொண்ணு கல்யாணத்தையே நிறுத்திடுச்சு ".

ஆதிக் ரவிச்சந்திரன் சாட்சியம் :

   " சார் இவர் ஒழுங்கா சூட்டிங்கே வர மாட்டேங்குறார்."என கார்த்திகை கைகாட்டுகிறார்.

" நீங்க யார் சார்,திடீர்னு கூண்டுக்குள்ள ஏறுறிங்க "

" நான் தான் திரிஷா இல்லைனா நயன்தாரா ஆதிக் "

" அது என்ன திரிஷா இல்லைனா நயன்தாரா .அடைமொழியா "

" அது நான் எடுத்த முதல் வெற்றிப்படம் "

" எத்தனை படம் எடுத்துருக்கிங்க "

"ரெண்டு ".

நீதிபதி அப்போது குறுக்கிட்டு பேச ஆரம்பிக்கிறார்.

" இது கோர்ட் ஆப் லவ்.உங்க பிரச்சனையை விஷாலை அணுகி தீர்த்துக்கோங்க ".

அவர் எந்த  R K நகர்ல் துப்பறியிராரோ என புலம்பிக்கொண்டே ஆதிக் வெளியேறுகிறார். கோர்ட் தொடர்ந்து நடைபெறுகிறது.

பீட்டர்மேனன் சாட்சியம்  :

பீட்டர் மேனன் கூண்டில் ஏறியதுமே  பேச ஆரம்பித்து விடுகிறார்.

" Usually I start a flim ...."

பப்ளிக் பிராசிக்யூட்டர்  குறுக்கிடுட்டு,

" சார் .இது தமிழ்க்கதை . இப்படி நீங்க
English ல பேசினா ஒருத்தனும் படிக்க மாட்டான்"
பீட்டர் மேனன் புரிந்து கொண்வர் போல தலையசைக்கிறார்.

" actully, நான் 80% கதையோட தான் சூட் போவேன்.that was the situation.
ஜெஸ்ஸி என்ன பண்ண முடியும் ".

" அப்போ நீங்களும் ஜெஸ்ஸி கார்த்திக்கை ஏமாத்த தூண்டினதுக்கு ஒரு  காரணம்னு எடுத்துக்கலாமா "

" That was the fact man ,you should accept the ..."

நீதிபதி காவலர்களுக்கு சமிக்ஞை செய்கிறார்.அவர்கள் வலுக்கட்டாயமாக பீட்டர் மேனனை வெளியேற்றுகிறார்கள்.
கோர்ட் நான்கு இங்கிலிஷ் படம் பார்த்த உணர்வில் அமைதியோடிருக்கிறது.

ஜெஸ்ஸி சாட்சியம்  :

ஜெஸ்ஸி கூண்டில் ஏறியதும் ஒருக்கணம் நீதிபதி அதிர்ச்சியாகிறார்.முப்பது வருசத்துக்கு முன்னாடி கோலம் போட வேண்டியவ என  பின்னணி குரல் மண்டைக்குள் ஒலிக்கிறது.சுதாரித்து விசாரணையை தொடங்கலாம் என அறிவிக்கிறார்.

" நீங்க கார்த்திக்கை லவ் பண்ணது உண்மையா "

" எனக்கு தெரியல .ஐ வாஸ் இன் லவ்.கார்த்திகை பிடிக்கும்.ஒரு வயசு சின்னவன்."

" என்னமா லூசு மாதிரி உளர்றிங்க "

"எனக்கு அந்த வலி பிடிச்சிருந்தது "

"முதல்ல ஹஸ்கி voiceல பேசுறத நிறுத்துங்க ,இது கோர்ட்."

"இது நடக்கும்னு தெரியும்.இவ்வளவு சீக்கிரம்னு எதிர்ப்பர்க்கல ".

பப்ளிக் பிராசிக்யூட்டர்  தலைதெறிக்க ஓடுகிறார்.ஜெஸ்ஸி சாரியை செய்தபடி அமைதியாக இருக்கிறார்.

கார்த்திக் சாட்சியம் :

கார்த்திக் உள்ளே வர ,
என்னா **** லவ் பன்றோம்.என்னா ****லவ் பன்றோம் என ரிங்டோன் ஒலிக்கிறது.அவசரமாக செல்போனை  அமர்த்துகிறார்.

 " ஜெஸ்ஸி உங்க மேல காதல் இல்லைனு சொல்றாங்களே ,இதுக்கு என்ன சொல்றிங்க "

" நான் மத்தவங்க மாதிரி மாதா ,பிதா ,குரு ,தெய்வம்னு போக மாட்டேன்.என் ஆர்டரே வேற "

" அவங்க எப்போவாவது உங்க கிட்ட காதலை வெளிப்படுத்தி இருக்காங்களா "

" நான் ஒரு மறத்தமிழன்.அப்பறம் தான் இதெல்லாம்.உங்க எதிர்ப்பை காட்ட ஒரு ஒரு நிமிஷம் உங்க வீட்டு முன்னாடி நில்லுங்க."

பப்ளிக் பிராசிக்யூட்டர்க்கு தலை சுற்றுகிறது.சமாளித்து கேள்வியை தொடர்கிறார்.

" ஜெஸ்ஸி உங்கள காதலிச்சத்து ஏதாவது ஆதாரம் இருக்கா "

" பிரதர்.லவ்ங்கிறது நம்மள அப்படியே போட்டு தாக்கணும்.அது வேற பீல்."

நீதிபதி எழுந்தரித்து ஓடுகிறார்.வெளியே  T.R வேட்டியை கட்டியபடி தோளில் அங்கியோடு வர,கோர்ட் மொத்தமாக கலைகிறது.

பேரன்பின் ராட்சசி


"என் பர்த்டே கிப்ட் என்னடா தரப்போற ? "
"என்ன வேணும்"
"நான் சொல்ல மாட்டேன்."
----------
1.யட்சியிடம் இருந்து
அதிகாலையில் ஒரு தகவல் வருகிறது.
வணக்கத்துடன்
புன்னகைக்கும் smileyஐயும் சேர்த்து அனுப்பி வைத்திருக்கிறாள்.
அவள் சிரிக்கும் முகம்
நினைவில் வருகிறது.
யட்சி....
அவள் செல்லப் பெயர்.
யட்சியை பற்றியும்
அவள்தான் சொன்னாள்.
மற்ற எல்லாரையும் விட அவளுக்கு தான் அந்த
பெயர் பொருத்தமாக
இருப்பதாய் தோன்றும்.
அவள் உலகம்
smiley களால் ஆனது.
அவள் போட்டோக்க்ளில் யட்சியின் வடிவம் தெரியும் என்று சொன்னால்,
இரட்டைக்கொம்பு பூதத்தின் smileyஐ அனுப்பி
வைப்பாள்.
சந்தோசம் கோபம்
வருத்தம் எல்லாமே
அவளுக்கு smiley தான்.
சண்டை நாட்களில்
முறைத்து பார்க்கும்
கோப smiley வரும்.
அவள் கோபமாக எல்லாம் இருப்பதில்லை.
அவள் கோபத்தில்
இருப்பதாக காட்டிக்கொள்ள விரும்புவாள்.
வழக்கத்தை விட smiley
அதிகம் வந்தால் அவள் சந்தோசமாக இருக்கிறாள்
என்று அர்த்தம்.
அவளிடம் இருந்து smiley வராத நாட்களில்,
உண்மையில் அவள்
யட்சியாய் மாறி
இருப்பாள்.
------
2.அவள் ரசனைகள்
எதுவும் என்னுடன் ஒத்துப்போனதில்லை.
அவள் நண்பர்கள் யாரும்
எனக்கு நண்பர்களாய் இருந்ததில்லை.
அவள் பிடிக்கும்
என்று சொன்ன எந்த திரைப்படத்தையும்
நான் பார்த்ததில்லை.
அவள் எடுக்கும்
முடிவுகளில் எந்த ஆலோசனையும் சொன்னதில்லை.
அவளை
பிடித்திருக்கிறதா
என்று கேட்டால்
யோசிக்க வேண்டும்
என்று சொல்வேன்.
எங்களுக்குள் நட்பு சாத்தியமாகியிருந்தது.
நட்பென்பது புரிதல்;
நட்பென்பது நம்பிக்கை;
நட்பென்பது அடையாளம்;
நட்பென்பது நட்பு.
-----
3.உனக்கு எல்லாமும் நியாபகம் இருக்கிறதா?
.
நட்பில் இணைந்த
அன்று வண்ணத்து பூச்சி
பறப்பதை முகப்பு படமாய் வைத்திருந்தாய்.
முதல்பேச்சில் சிரித்து கொண்டே இருந்தாய்.அதிகம் பேசாதவளாக தோன்றியது அல்லது
அப்படி இருக்க
விரும்பியிருக்கலாம்.
புத்தகங்கள் பற்றி அதிகம் சொல்லிக்கொண்டிருப்பாய்.
புது புத்தகம் படிக்கும் போதெல்லாம் கேக் சாப்பிடுவாதக சொல்வாய்.
அது எதேச்சையாக இருக்கும் என நினைத்து கொள்வேன்.
.
அன்று மயிலிறகு படம்
முகப்பில் மாறியிருந்தது.
கோவிலுக்கு போனதாக சொன்னாய்.
கடவுள் நம்பிக்கை வந்திருக்கிறதா என்று கேட்டேன். அதை பற்றி இப்போது பேச வேண்டாம் என்றாய்.அதன் பிறகு எப்போதும் பேசவில்லை.
.
ஒருநாள்
மேகத்தை முகப்பு
படமாக வைத்திருந்தாய்.
அன்று மழை பெய்து கொண்டிருந்தது. பாடல் முணுமுணுப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாய். என்ன பாட்டு என்று கேட்கவில்லை.
சந்தோசமாக இருக்கிறாய்
என்பது புரிந்தது.
.
உன் நிஜப்பெயர் கேட்ட போது அலங்காரம் செய்யப்பட்ட நடிகையின் படத்தை முகப்பில் மாற்றினாய்.
சில நாட்களுக்கு பிறகு,
நான் பொய் சொல்வதில்லை உண்மையை மறைக்கிறேன்
என்றாய். நாம் பேசவில்லை.
.
இரண்டு நாட்களாக
முகப்பு படம் மாற்றபடாமல் இருந்தது. உன்னை புரிந்து கொள்வது கஷ்டம் என்று சொன்னேன்.
அப்படி இருக்கவே பிடித்திருக்கிறது என்றாய்.
.
திடிரென
ஒரு நாள் வந்து மறைந்து வாழப்போவதாக சொன்னாய்.எனக்கு அதில் ஆச்சரியம் எழவில்லை.
.
பேஸ்புக்...
உன் ஐடி டீஆக்டிவேட் செய்யப்பட்டதாக காட்டிக்கொண்டிருந்தது.
-----
4.வண்ணத்துபூச்சியின்
சிறகடிப்பில் ஆரம்பிக்கிறது
அவள் வாழ்க்கை.
கூட்டுக்குள் இருந்து
கேள்விகளும் இல்லாத.
பதில்களும் இல்லாத ஒரு
உலகத்தை தேடி வந்திருக்கிறாள்.
எதிர்பார்ப்புகளும் பற்றுகளும் இன்றி பறக்கவே அவளுக்கு பிடித்திருக்கிறது.
பின்தொடர்வதில் நம்பிக்கையற்று
பறக்கும் திசையை அவளே தேர்ந்தெடுக்கிறாள்.
சிறகுகளில் வண்ணம் பூசி
சந்திக்கும் எல்லோரிடமும் கொஞ்சம் நிறங்களை பகிர்ந்தளிக்கிறாள்.
அவளை புரிந்து கொள்ள
அவள் உலகில்
நீங்கள் வண்ணத்துபூச்சியாய்
இருக்க வேண்டும்.
------
5.ராஜாளியும் வல்லூறுகளும்
பறக்கும் வானத்தை காட்டினால் அவள் பட்டம்பூச்சிகள் தெரிகிறது என்பாள்.
துறைமுகத்தில் உடைந்து நிற்கும் ஒரு கப்பல் ஓவியத்தை
அனுப்பி வைத்தால் புது கப்பல் உருவாக்குகிறார்களா என்று கேட்பாள்.
நோலன் படங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தால்,
உனக்கு விஜய் பிடிக்குமா என்று கேட்பாள்.
பரிணாமவியலையும்
டைம் டிராவலையும்
சிலாகித்தால்,
அவள் பக்கத்து வீட்டு குட்டி பையனுடன் நடந்த சண்டையை பற்றி சொல்வாள்.
ரகசியங்களை பற்றி பேசினால் என்னிடம் மறைக்க எதுவும் இல்லை என்பாள்.
இயற்கையை , அரசியல
லை , கவிதையை, காதலை,
தொழில்நுட்பத்தை , மானுடத்தை,சினிமாவை , இலக்கியத்தை , கதைகளை
எல்லாவற்றை பற்றியும் நாம் ஓர்
நாள் பேச வேண்டும் என்றேன்.
உன்னுடன் பேச வேண்டும் என்பதை தவிர எனக்கு சொல்ல எதுவும் இல்லை என்றாள்.
--------
6.நான் பேசுவது அவளுக்கு புரியுமா என்றெல்லாம் தெரியவில்லை.
ஆனால் அவள் எல்லாவற்றையும் கேட்பாள்.அவள் உளறலுக்காகவேனும் அவளை உங்களுக்கு பிடிக்க கூடும்.
அவள் உலகில் எல்லாரும்
ராமன்கள் தாம்.
அவள் பெயர்.
அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.
அவள் என்பது நிச்சயம்
அவள் மட்டும் தான்.
~~~~~~~
7. யட்சி,
நாம் இருவேறுகாலத்தின் பிரதிநிதிகளாய் இருக்கிறோம்.
நீ கனவென நம்பும்
கடந்த காலத்தில்தான் நான்
இன்னமும் இருக்கிறேன்.
நம் பிரச்சனையும்அதுதான்.
சட்டென முடியும் ஒரு நாளின் பின்னே ஓடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
நகர மறுக்கும் குதிரையின் முதுகில் சவாரி செய்து நாளை விழுங்கும் பாவனையுடன் அமர்ந்திருக்கிறேன்.
யாருமற்ற குளத்தில் மீன்பிடிக்க தூண்டிலுடன் காத்திருப்பவனை பார்த்திருக்கிறாயா யட்சி,
காலத்தில் உறைந்துபோவதென்பது அது தான். நாளை பிடித்து நிறுத்தி அழகாக்கி எதிர்காலத்திற்கு சேர்த்து வைக்கும் வினோத பழக்கம் என்னிடம் இருக்கிறது.
கண் மூடுவதற்கும் திறப்பதற்கும் இடையேயான கணத்தில் இரண்டு உலகத்தில் பிரவேசிக்கிறேன்.
கனவுகளும் நிஜங்களும் நிறைந்த
ஓர் மெய்நிகர் உலகம் எனக்காக காத்திருக்கிறது.
சென்றடைந்த கனவிலிருந்து எழும் நாளில் யட்சிகளும் தேவதைகளும் நிகழ் உலகில் மறைந்திருக்க கூடும்.
~~~~~~
8. நீ கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறேன் யட்சி..
யுகங்களாக..
ஒரு ஒற்றைச்சொல் இந்த
வாதையிலிருந்து மீட்கும்
என்பதை அறிந்திருக்கிறாய்.
நீ கேட்க விரும்பியவைகளை
தூரே ஆற்றில் எறிந்திருக்கிறேன்
கூலாங்கற்களை போல.
அடியாழத்தில் திரும்பிவர முடியாத இடத்தில் கணங்களை அழித்துவிட்டு வந்திருக்கிறேன் யட்சி.
மனிதர்களை விட வார்த்தைகள் அத்தனை பெரியவை இல்லை.
நிகழ்காலத்தை தொலைத்து கனவுகளை சேர்த்து என்ன செய்யப்போகிறேன்.
விலகி நின்று வேடிக்கை காட்டும் காலத்தை என்னவென்று
சொல்வேன் யட்சி.
அகத்தினுள் எழும் ஒற்றை தீ இக்காடு முழுவதையும் கேட்கிறது.
உடைந்து வீழும் நேரத்திலும் அது என்னை இறுக்க பற்றி வைத்திருக்கிறது.
வனத்தில் இருந்து இறங்கி வரும் ஒரு நாளுக்காய் காத்திருக்கிறேன் யட்சி.
~~~~~~~
9. நீ பேசாத நாட்களில் வார்த்தைகளுக்கு உயிர் வந்துவிடுகிறது.
ஒன்றோடு ஒன்று இடித்து கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறது.
தெருமுனையில் வழிகேட்டு என் வீடு வந்துசேர்கிறது.
அனுமதி இன்றி உள்ளே நுழைந்து உன்னுடன் பேச சொல்லி கூச்சல் போடுகிறது.
பேசாவிட்டால் கூட்டமாக தற்கொலை செய்வோம் என மிரட்டுகிறது.
எழுதிய எனக்கு அவற்றின் இறப்பை காண முடியவில்லை.
அதனால் எழுந்தேன்.
வேகவேகமாக இங்கே இழுத்து வந்திருக்கிறது.
வரும் வழியில் உன்னுடன் சண்டை போடக்கூடாதென சத்தியம் வேறு வாங்கியிருக்கிறது.
என் வழியே உன்னை சந்திப்பதில் தான் அவைகளுக்கு சந்தோசமாம்.
காதில் சொல்லிகொண்டு இருக்கிறது.
உன் வீட்டு வாசலில் தான் நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.
எப்போது வந்து எடுத்து கொள்ள போகிறாய்.
~~~~~~
10.
பேரிரைச்சலோடு கால் நனைக்கும் அலைகளுக்கு நடுவே அமர்ந்திருக்கிறாய்.
கடல் கன்னிகள் கரை தேடி புறப்பட்டதில்லை என அறிவேன்.
இதே கார்காலத்தில் ஒரு
காரிருள் ஆரம்பிக்கும் போது உன் கைகளில் தீபம் இருந்தது.
பாம்புகள் ஊறும் கனவிலிருந்து திடுக்கிட்டு எழும் போது நீயே புன்னகைத்து கொண்டிருக்கிறாய்.
உன் வரலாற்றில் சண்டைக்கும் சமாதனத்திற்குமான இடைவெளி என்பது ஒரு நூல்.
தலைகவிழ்ந்து பேசும் போது தூரத்தில் இருந்து வந்து சேர்வதற்குள் உன் குரல் ரகசியமாய் ஆகிவிடுகிறது.
காட்டில் தலைகீழாக பறக்கும் பறவையை தொடர்வண்டியில் செல்பவர்கள் கவனிப்பதில்லை.
ஆகாயத்தில் பறக்கும் பறவையை பற்றி நீலக்கடலில் பயணிப்பவர்களுக்கு என்ன கவலை இருக்க போகிறது?
~~~~~~
அவளுக்கு பிடிக்காத மாதத்தை கேட்டால் நவம்பரை சொல்வாள்.
எனக்கு நவம்பர் தான் பிடிக்கும்.
நவம்பரில் தான்
அவளுக்கு பிறந்தநாள்!.