சனி, 27 ஜனவரி, 2018

Demantization

பேரழிவின் தொடக்கம் இன்று
தான் நிகழ்ந்தது. இடுங்கிய
கண்களுடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தவர்களிடம் சாகசத்தின் நாயகன் தோன்றினார்.அரக்க குழந்தையொன்றை கையிலெடுத்து வசந்தம் வரப் போகிறதென்றார்.
அதன் வாயில் ரத்தம் வடிந்தது.

அன்று தான் கடைசி தூக்கம் என
அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அன்று தான் அவர்கள் சம்பளம் வாங்கியிருந்தார்கள்.
அன்று தான் அவர்கள் தொழில் தொடங்கியிருந்தார்கள்.
அன்று தான் அவர்களுக்கு கல்யாணம் நிச்யமாகியிருந்தது.
அன்று தான் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்.
பின் எப்போதும் நினைவில் வைத்திருக்க போகிற அந்நாளை வெடிச்சத்தங்களிடையே ,
ஆரவாரங்களிடையே,
Don't panic களிடையே,
உறங்க போனார்கள்.

விடிய தொடங்கியிருந்தது.
சரித்திரத்தின் மகத்தான நாட்களில் வாழபோகிறோம் என்ற நினைப்பில்
எழுந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சாலைக்கு வந்த போது காவி நிறகுரங்கு கூட்டமொன்று  எல்லையிலே
என பாடியபடி சென்றது.
ஊருக்குள் அவ்வளவு பெரிய குரங்கு கூட்டத்தையே மக்கள் அப்போது தான் பார்த்தார்கள்.
மீட்க வந்திருப்பது தேவ குமாரன் அல்ல என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு நேரமிருந்தது.

காரிலிருந்து காலை எடுத்திராதவர்கள் தரைக்கு வந்தார்கள்.கடவுளை கூட காத்திருந்து பார்த்திராதவர்கள் கால்கடுக்க நின்றார்கள். நீண்ட கூட்டத்தை பார்த்து திகைத்தார்கள்.
பயமும் நடுக்கமும் எழ ஒருவரை
பார்த்து கொண்டார்கள்.
தூரத்தில் எல்லையிலே சத்தம் ஆரவாரமாக கேட்டு
கொண்டிருந்தது.

எல்லாம் மாறிவிடும் என்ற நப்பாசையில் படுக்க சென்றவர்களை வரவேற்க காத்திருந்தது பேரழிவின்
இரண்டாம் நாள்.கையிருப்பு குறைந்த போது  பயப்பட தொடங்கியிருந்தார்கள். வெற்று காகிதமாக்க பட்டிருப்பது யார் என அவர்களுக்கு மெல்ல உரைத்தது.
இருந்தும் சாகசத்தின் நாயகன் ஏதேனும்  வித்தைகள் செய்து தங்களை
மீட்பாரென ஆசுவாசபடுத்தி கொண்டார்கள்.
அவர் அப்போது தான் உலக உருண்டையை மற்றுமொரு முறை
சுற்றி விட்டு கொண்டிருந்தார்.
அணைக்க படாத வானுர்தி எஞ்சின் உருமியபடி காத்திருந்தது.

மூன்றாம் நாள் அரக்க குழந்தை சுறுசுப்புடன் எழுந்தது.அதன்
கட்டுக்கள் விடுவிக்கபட்டன.
இரண்டு நாள் பசியுடன் ஊருக்குள்
புகுந்த போது பெரு முதலைகள் தண்ணீருக்குள் மூழ்கின.
வல்லூருகள் மலையுச்சிக்கு சென்றன.
கையாலாகாத நடுத்தர வர்க்கமும்
ஏழை கூட்டமும் தெருவில் நின்று கொண்டிருந்தது.
மொழி தெரியா அத்தனை மக்களுக்கும்
அரக்க குழந்தையின் பெயர் மறக்க
முடியா வண்ணம் அன்று பதிந்தது.

டிஜிட்டல் பட்டாடை கொண்டு மூடினால் அதன் மூர்க்கம் குறையுமென யாரோ சொல்ல அரக்க குழந்தைக்கு ஆடை நெய்யபட்டது.
இப்போது தான் ஆடையே வாங்க
போகும்  கூத்தை கூட்டம் வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்த போது அது அம்மணமாக தெருவில்  ஓடி கொண்டிருந்தது.

சாகசத்தின் நாயகன் தூக்கத்தில்
இருந்து விழித்த போது ஆறு மாதங்களாகியிருந்தது.
மரண ஓலமும் சிதை நாற்றமும் வீசும் பெரிய சுடுகாட்டின் நடுவே
ஊர்தி இறங்கியது.
பெற்று போட்டு போன அரக்க
குழந்தை விளையாடி களைத்து போயிருந்தது.

இன்று அரக்க குழந்தையின்
முதல் பிறந்தநாள்.
நூற்றுக்கணக்காணவர்களின்
ரத்தத்தை குடித்து நகர முடியாமல்
பெருத்து போயிருக்கிறது.
அதை தேசபக்தி ஊட்டி வளர்த்தவர்கள்
இன்று சீண்டுவதாயில்லை.
அதன் தம்பிகள் போடும் வெறியாட்டத்தை
பார்த்தபடி ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறது.
இந்த அனாதை குழந்தையின் தந்தை
இந்நேரம்  அடுத்த குழந்தைக்கு  தயராகி
கொண்டிருக்க கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக