ஞாயிறு, 28 ஜனவரி, 2018

தாஜ்மஹால்

பெருமழை பெய்து பாலம் இடிந்ததை ஊர் கூடி பார்த்து கொண்டிருந்த போதுதான்  அவள் நிற்பதை கவனித்தேன்.மழை தண்ணீரில் வெற்றுக்காலுடன் நின்ற அவள் பாதங்களை தான் முதலில் பார்த்தது.
நிமிர்ந்த போது  மின்னல் வெட்டியது போல் இருந்தது  அவள்   நிறம் ; அந்த நிறத்திற்கு அவள்  என்னை  திரும்பி கூட பார்க்கபோவதில்லை  என்றுதான்  அப்போது    தோன்றியது.

இரட்டை சடைபோட்டு ஹைஸ்கூல் யூனிபார்மில் சின்ன  சைக்கிளை நிறுத்தி திரும்பி  பார்க்கும்  வரையிலும்  அப்படித்தான் நினைத்திருந்தேன்.
அவள்  கூட வரும் வானரங்கள் பிள்ளையார் கோவில் தெருவில் பிரிந்துவிட சைக்கிளில் இருந்து  நடக்க  ஆரம்பிப்பாள்.நால்ரோடு தாண்டி பின்னே செல்லும்   தைரியம் எனக்கு  இருந்ததில்லை. தெருமுனையில் நின்றுவிடும் போது திரும்பி திரும்பி பார்த்து விட்டு சைக்கிளில் ஏறி செல்வாள்.

அவளுடன் பேசுவதற்கும் ஒரு மழை வேண்டி இருந்தது.ஒருநாள்  மழை பிடிக்க செருப்பை கழட்டிவிட்டு பிள்ளையார் கோவில் முகப்பிற்கு வந்து நின்றாள்.அதே பாதங்கள். நானுற்றி அம்பது முறை சொல்லிபார்த்த அந்த  கேள்வியை  அவளிடம்  கேட்டேன்.
நீ  என்ன படிக்கிற ?

என்னை விட இரண்டு வகுப்புகள் குறைவாக சொன்னாள். அந்த
மழைக்கும் பிள்ளையாருக்கும்
நன்றிகள்.

உள்ளூர் திருவிழாவில் தண்ணீர் தெளித்து குளிப்பாட்டியிருந்த தார்ச்சாலையில் வைத்து
இடது  கையில் அவள் நம்பர்  எழுதி தந்தாள்.அதிகாலையில் எடுத்த    தாஜ்ஹால் போட்டோ  ஒன்றோடு அவள் பெயரை சேமித்து வைத்திருந்தேன்.
அதிகம்  பேர்  வராத ஒரு பெட்டிக்கடை வாசலில் ஓரத்தில் எனக்காக காத்திருப்பாள்.உள்ளங்கையில் மடித்து வைத்திருக்கும்  திருநீறை  அக்கம்  பக்கம்  பார்த்து பூசிவிடுவாள்.
இது வழக்கம்  தான்.சங்குசக்கரம்  போட்டிருந்த அம்மன் கோவில் சிகப்பு கயிற்றில் கோர்த்த டாலர்தான் அவள்  தந்த முதல் அன்பளிப்பு.
நூல்  நைந்து அறுந்து வீழும் வரையிலும்  அது கழுத்தில் இருந்தது.
கடைக்கார அண்ணனுக்கு எங்களை பற்றி தெரியும்.எப்போதும் அவர் அதை காட்டிக்கொண்டது இல்லை.
ஊர்  திரும்ப வேண்டிய ஓர்  நாள் சீக்கிரம் வந்தது.கடைசி நாள் அவளை
பார்க்கும் போது தாடிமுளைக்க ஆரம்பித்திருந்தது.
இனிமேல் ஷேவ் செய்ய வேண்டும்.
மூன்று நாட்களாக ஒரே சட்டையை  போட்டிருப்பதாக சொன்னாள்.

சோனி எரிக்சனின் மிகப்பழைய மாடல் ஒன்றில் லாக் எடுக்கும்  போது தவறவிட்ட அழைப்புகள் முன் வந்து நிற்கும்.அதன்பிறகான நாட்களில்
எப்போது  எழும்போதும்  போனில் தாஜ்மஹால் காட்டும். ஆறுமாதங்களுக்கு பிறகு  ஒரு நாள்  பிள்ளையார் கோவில் தெருவில்
நின்று கொண்டிருந்தேன்.
தாவணி கட்டியிருந்தாள்.
நுனி தலைப்பை கையில் பிடித்தபடி வேகமாக நடந்து வந்து வந்தாள்.

ரெட்டை சடை போட்டு ஹைஸ்கூல் யூனிபார்மில்  நால்ரோடு வரை சைக்கிள்  தள்ளி வந்த  அந்த சின்ன பெண்  இப்போது இல்லை.
வளர்ந்திருக்கிறாள்.தாவணியில் வெட்கம்   அவளை  அழகாக்கி  கொண்டிருந்தது. பிரிண்ட் செய்யபட்ட
பஸ்டிக்கட் தாளை திருப்பி என் புது நம்பரை எழுதி கொடுத்தபோது வாங்கிகொண்டாள்.தெருமுனையில் விடைபெற்று பஸ்  ஏறும் போது  தாஜ்மஹாலிடம்  இருந்து  அழைப்பு வந்தது.அவள்  பேசும் போது அழுதிருப்பது  தெரிந்தது.

ஆறுவருடங்களுக்கு  பிறகு அரசாங்கத்தில்  பழைய பாலத்தை இடித்துவிட்டு புது பாலம்  கட்டியிருந்தார்கள். பாலத்தை பஸ் கடக்கும் போது கடைசி படிக்கட்டில் நின்று கொண்டேன்.

தூரத்தில் அவள்  வெற்றுக்காலுடன் மழைத்தண்ணியை தள்ளி விளையாடி
கொண்டிருந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக