சனி, 27 ஜனவரி, 2018

தேவதை

வெளிச்சத்தில்  தெரியும் சந்திர
பிம்பமாய் அவள் இருந்தாள்.
அவள் அழகு பரிபூரணம் அடைந்திருந்தது.
அவள் கண்களில் ஒரு வித சோகம் தெரியும். அவள் புகைப்படங்களில்  பார்க்கலாம். அரங்கிற்குள்
வராத , கூடத்திற்கு கட்டுப்படாத
பயந்து விலகி செல்லும் ஒரு மான் போலவே அவள் முகம் இருக்கும்.
ரகசிய கண்ணி வெடிகளை போல திடீரென கிடைக்கும் தரிசனங்களிலோ
அவள் முகம் வேறு மாதிரியாய் இருக்கும்.
சிறு பிள்ளையை அதட்டும் பாவனையுடன் அவள் பேசும் போதெல்லாம் மற்றோர் முகம் .
அவள் அழகு பாசி படிந்த குளத்தில் பூத்திருக்கும் தாமரை என சில நாட்களில் தோன்றும். வேறு சில நாட்களிலோ பிரமாண்ட மலையின் முன் நிற்கும் சிறுவனாக தோன்ற வைக்கும்.
அவள் பற்றிய தெளிவான பிம்பம் எனக்கும்  இருந்ததில்லை.
அந்தரத்தில் தூக்கி வீசி பிடிக்கும் வேடிக்கையை அவள் ஒவ்வொர் நாளும் நிகழ்த்தி கொண்டிருந்தாள்.
அவள் பற்றிய நிறைய கதைகள் உண்டு.
சில கதைகளில் அவள் ராட்சசியாய் இருக்கிறாள். சில கதைகளில் அவள் தேவதையாய் இருக்கிறாள்.
எல்லாக் கதைகளிலும் அவளை பிடித்திருந்தது. எந்த கதையிலும் அவளுக்கு என்னை பிடித்ததாக
தரவுகள் இல்லை.
அவள் இருளை ஆடையாக அணிந்திருந்தாள். எப்போதும் அவளை நெருங்க முடிந்ததில்லை.
எல்லாக் காலங்களிலும் அவள்
மட்டும் வசந்த காலமாய் இருக்கிறாள்.
அவள் வரும் போது மழை வருகிறது.
பூக்களை கொட்டி விடுகிறாள். அது உலகம் முழுக்க பரவி விடுகிறது.
அவள் வரும் போது குளிர் வருகிறது.
அவள் தொடும் போது மரங்கள் உயிர் பெறுகிறது.
அவள் பேசும் போது மகுடி இசை ஒலிக்கிறது. மயங்கி சரணடைந்து விடுகிறார்கள்.
அவள் ஊதி நிரப்பிய பாலூனுக்கு
உயிர் வந்து விடுகிறது. பிரபஞ்சத்தை தாண்டி அது பறந்து கொண்டிருக்கிறது.
அவள் பற்றிய கதைகளை மட்டும் அறிந்திருந்த எனக்கு,
பனி சூழ்ந்த ஒரு மலைபிரதேசத்தில்
சூரியன் ஆரம்பிக்காத ஒரு காலையில்
அவள் காட்டிய முகம்
தேவதைகளுக்கானது.
என் மொத்த வாழ்நாளிற்கானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக