சனி, 27 ஜனவரி, 2018

யட்சி

கடற்கரையிலிருந்து மலையோரம் வந்து திரும்புகிற கடற்காற்றை போல் அவள் அமர்ந்திருந்தாள். ஈரக்காற்று அவள் தலைமுடி வாசம் பெற்று திரும்பி கொண்டிருந்தது.ஆழிப்பேரலைகள் சுற்றி போகிற தனித்த தீவில் தீவினைகள் நெருங்க முடியா தூரத்தில் அவள் இருந்தாள். அவள் பாதச் சுவடுகள் பட்ட மணல் வெளியை அலை கொண்டு போய்  வைத்து கொண்டது.

அவள் சிந்தனையில் இருந்தாள்.
காலம் மெல்ல நீண்டு காணாமல் போய்
பின் திரும்பி அவளுடன் நிழலாக வந்து கொண்டிருந்தது.கோடானு கோடி நட்சத்திரங்கள் அவளுக்கு துணையாக நின்றன.ஓடி வந்து அணைக்கின்ற கடலும் தூரத்து மரங்களும் அவள் பதில் பேச காத்திருந்தன.அப்போதும் அவள் தனிமையில் இருந்தாள்.
பெரும் புயலுக்கு உடைந்து விடாத விடாத நாணல் புல் மாதிரி மௌனமாய் இருந்தாள்.

மற்றொரு முறை,
ஒரு மஞ்சள் நதியின் குறுக்கே நடந்து வந்து கொண்டிருந்தாள்.பாதி மூழ்கியிருந்த மரக்கட்டையில் நின்றிருந்த போது மழை வந்தது.அவள் அங்கேயே இறுக கைகளை கட்டியபடி நின்று கொண்டிருந்தாள். மழை வந்து அழைத்து கொண்டு போகும் வரையிலும் எங்கும் போகவில்லை.

பின் ஒரு நாள்,
காட்டுக்குள் திரும்பி செல்கிற சாலையின் ஓரத்தில் தனியே அமர்ந்திருந்தாள்.காடு தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.அப்போது அவளுக்கு நூறு வயதாகி இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக