சனி, 27 ஜனவரி, 2018

காளத்தி

கைவிடப்பட்ட தரிசு நிலத்தின் மூலையில் பழங்கால கிணறு  வெள்ளாமை நிலத்தின் கடைசி நினைவுகளை போல இருந்தது.
பாட்டனார் காலத்தில் விளைச்சல் பூமியாக இருந்திருக்க வேண்டும்.மகன் வழியில் கட்டிகாக்க திரணியில்லாது குடிக்கும் கூத்தியாலுக்கும் குடுத்து விட்டார்கள். கிராமத்தில் பெரும் தனக்காரர்களை இருந்தவர்களின் பேரன்கள் ஓட்டாண்டிகளாகி போகினர். ஊரில் ஐம்பது வயதுக்கு அதிகமாக இருந்த எல்லாருக்கும் ஒரு தலைமுறை அழிந்த கதை தெரிந்திருந்தது.
பேச்சு வழக்காக ,அறிவுரையாக வீழ்ந்த குடும்பத்தின் கதையை சொல்லி கொண்டே இருந்தார்கள்.
இந்த இடமும் பாசன வசதி இல்லாததலே சீண்டபடாமல் கிடந்தது.
சீட்டாடுவதற்கு வசதியாக தென்னை மரங்கள் சுற்றி இருந்த அந்த இடத்திற்கு தான் கருப்பன் வர சொல்லியிருந்தான்.
பைக்கை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு ஒற்றையடி பாதையில் நடக்கும் போது குற்ற உணர்ச்சியாய் இருந்தது.எந்த தைரியத்தில் பார்க்க ஒத்து கொண்டேன் என்பதே தெரியவில்லை.
களத்துமேட்டுக்கு அருகிலேயே கருப்பன் நின்று கொண்டிருந்தான்.கோடையும் கடுமையும் அவன் முகத்தை இறுக்கமாக மாற்றி வைத்திருந்தது.
அருகில் வந்து நின்ற போதும் அமைதியாக இருந்தான்.அந்த அமைதி
அச்சுறுத்துவதாக இருந்தது.

"உன்கிட்ட கேக்க வேணாம்னு தான் நினைச்சேன் ரவி ,காட்டுல போட்டதையும் எடுக்க முடியல நகையில போட்டதையும் எடுக்க முடியல கொஞ்சம் பணம் வேணும்."

"கருப்பா ,உனக்கே தெரியும்
இருக்கிற சொத்தை எல்லாம் வித்து பாவக்கணக்கு தீர்த்து நாலு வருஷம் கூட ஆகல மறுபடியும் பணம்னு வந்து நிக்கிற"

"நீ தூக்கி போட்ட  பணம்
ஊடல வந்தவனும் நின்னவனும் தின்னது போக எஞ்சுனது தம்புடி அரிசி தான் ரவி. அதுவும் ஆத்துல கரைச்சிட்டோம்."

" கேட்கும் போதெல்லம் படியளக்க பரமசிவன் இல்ல கருப்பா, வானத்தையும் ஆத்தையும் பார்த்து விவசாயம் பண்ற கூலிக்காரன் தான் இருக்கேன்.
மறுபடியும் வந்து மாரடிக்காத "

வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாகி விட்டது மாதிரி தான் தோன்றியது.
கருப்பன் எதுவும் பேசாமல் கிணற்று பக்கம் பார்த்தவாறு
நின்று கொண்டிருந்தான்.
×××××
பதினோரு மணிக்கே வெயில் உச்சிக்கு வந்திருந்தது.இன்னும் கொஞ்ச தூரம் நடந்தால் பஸ்ஸ்டாண்ட் வந்து விடும்.கை துண்டை தலையில் கட்டியதும்  வியர்த்தது.
சின்ராசு மகன் எதிரில் வந்து கொண்டிருந்தான்.
"மாமா எங்க போறீங்க "
" 11 மணி காருக்கு மாப்ள,பஸ்ஸ்டாண்ட் வரைக்கும் தானேனு நடக்க ஆரம்பிச்சேன்.
கண்ணை இருக்கிக்கிட்டு வருது."
"உக்காருங்க நான் கொண்டாந்து விடறேன் "
"துண்டை வாங்கி பின் சீட்டில் வைத்தான்.
இப்போ ஏறி உட்காருங்க
நல்லாயிருடா மாப்ள ,பொண்ணு இருந்தா கட்டி வச்சிருப்பேன்.
"ரவி எங்க மாமா,அவன் கிட்ட சொன்னா கொண்டாந்து விடுவானே , வயசான காலத்துல ஏன் இவ்வளவு தூரம் நடந்து கிட்டு "
"அப்பன் மகன் உறவெல்லாம் எப்பவோ அந்து போச்சு மாப்ள ,அவன் என்கிட்ட எதுவும் சொல்றதும் இல்லை ,நானும் கேட்கறது இல்ல."
மாப்ள எங்காலத்தில நான் கண்ணு மண்ணு தெரியாம இருக்காத அழிச்சேன்.
எங்கப்பாரு கிட்ட சொத்து இருந்தது.
இவன் பங்குக்கு மிச்சம் இருந்ததையும் உட்டுட்டு  வந்தான்.
ஏதோ பிரச்சனை வரமா போகுது "
சரி மாமா இறங்கிகங்க.நான் போய்ட்டு வரேன்.
பஸ் வருவதற்கும்
கொஞ்ச நேரத்திற்கு முன்னாலேயே திரும்பி வந்தான்.
" என்ன மாப்ள ,என்ன அவசரம் "
"நம்ம ரவிக்கும் கருப்பனுக்கும் கிணத்தடிக்கிட்ட சண்டையாம் "
"ஐய்யோ மாப்ள , அவன் இன்னொரு எழுவ இழுத்துட்டு வந்துற போறான் .சீக்கிரம் வண்டிய எடு .
××××××
நான்கு வருடங்களுக்கு முன் ரவி காளத்தி பாலத்தில் இருந்து உயிரோடு வந்ததே அதிசயம் தான்.ஊரே திரண்டு ஓடி வந்து கொண்டிருந்தது.ட்ராக்டரில் மாட்டிய பையனை உரித்து தான் எடுத்தார்கள்.
காளத்தி பால வளைவு ரத்தம் குடித்தே வளர்ந்திருந்தது.இருந்தும் உயிர் பலி வாங்கியது இல்லை.அந்த குறை ரவியை வைத்து தீர்த்து கொள்ள நினைத்திருக்க வேண்டும்.பின்னே ஏன்  அவ்வளவு பெரிய ட்ராக்டரில் ஒருவன்  வண்டியை கொண்டு வந்து விட போகிறான்.ஒவ்வொரு சொந்தக்காரன் வீட்டிலும் ஒளித்து ஒளித்து ரவியை காப்பாற்ற  வேண்டி இருந்தது.
ட்ராக்ட்ரை விற்று போலீசுக்கும்
நிலத்தை விற்று ஊர் வாய்க்கும் போட்டு கேஸ் முடிந்தது.
×××××
கருப்பன் கைகட்டோடு நின்று கொண்டிருந்தான்.கிணறும் தரிசு நிலமும் அவன் பெயருக்கு எழுதி வைக்க பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக