சனி, 27 ஜனவரி, 2018

யாழ்மொழி

இத்தனை உயரத்திற்கு இதற்கு முன் வர விரும்பியதில்லை.அல்லது
ஒரு முறையை தவிர ; கீழே தெரிகிற வனம் முழுவதும் அவள் முகம் தெரிந்தது. ஒவ்வொரு மரங்களிலும் அவள் இருந்தாள்.கனரக வாகனங்களும் மனிதர்களும் இல்லாத மரங்களடர்ந்த ஒரு நெடுஞ்சாலையை நான் தான் அவளுக்கு காட்ட விரும்பினேன்.இப்போது அவள் பட்டாம்பூச்சியாக பிறந்து இந்த காடுகளில் உலவி கொண்டிருப்பாள்.வருகிறேன் யாழ்மொழி.இருவரும் இந்த காடு முழுவதும் பறப்போம்.தெளிவற்ற இந்த இரவு ஆரம்பிப்பதற்கு முன்பே வந்து விடுவேன். குரல்கள் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அவற்றை கேட்க  விருப்பமில்லை.

×××××××

19 மணி நேரங்களுக்கு முன்பு :

உருவங்கள் மங்கலாகி கொண்டிருந்தது.மூன்றாவது ரவுண்டிலேயே நிறுத்தியிருக்க வேண்டும்.இப்போது யோசிப்பதற்கு நேரமில்லை. கார் சாவி பாக்கெட்டிலேயே இருந்தது. கண்ணாடியை சரி செய்த பின்னும் மனிதர்கள் இரண்டிரண்டாக உருமாறி கொண்டிருந்தார்கள். எத்தனை மைல்கற்களை இடித்து வீடு போய் சேர போகிறேன் என்று தெரியவில்லை. வந்து சேர்ந்த போது 10 மணி ஆகிவிட்டிருந்தது.காலையில் தெளிந்து காரை பார்த்த போது தான் கவனித்தேன்.காரின் பின்புறம் நசுங்கி ஹெட்லைட் உடைந்திருந்தது.

××××××

அந்த காட்சி என் வாழ்வை மாற்றி போடும் என எதிர்பார்க்கவில்லை.ஒரு வகையில் இந்த சந்திப்பு நிகழாமல் இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் சாதரணமாக எடுத்து கொண்டிருக்க வேண்டும். முடியவில்லை.இந்த தவறு என்னில் இருந்தே தொடங்குகிறது.நான் தான் சரி செய்ய வேண்டும்.

×××××

ஹங்கோவர் குறைந்திருந்தது. வண்டியை ஷெட்டில் விட்டு வரும்போது தான் அவனை பார்த்தேன். முதலில் அவன் இயற்கையை  ரசிப்பவனாக தான் தோன்றியது.இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு அக்கறையில்லை. நான் பிறந்ததில் இருந்து இதை பார்த்து கொண்டிருக்கிறேன்.இந்த பகுதிக்கு வருகிறவர்கள் முழுக்கவுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.அவன் இயற்கையை ரசிக்கிற மாதிரி தெரியவில்லை.எதிர்ப்பார்த்தது தான். அட்ரினலின் சுரந்து
கத்திகொண்டே ஓடினேன். அவன் எதையும் காதில் வாங்குகிறவனாக தெரியவில்லை.

××××××

இன்று அவளுக்கு பிறந்தநாள். காதலிக்க ஆரம்பித்து மூன்று வருடங்களாகி விட்டது.
இதே மாதிரியான ஒரு பிறந்தநாளில் அது நிகழ்ந்தது. இரவையும் காடுகளையும் ரசிக்கிற வினோத பிறவி அவள்.அவள் உலகில் எல்லாம் உயிர் பெற்றிருந்தது.மரங்களும் பறவைகளும் அவள் வாழ்வோடு கலந்திருந்தது. அவள் பெயரும் மொழியும் ஒன்று தான்.யாழ்மொழி. அவளுக்கு இந்த உலகத்தை பரிசளிக்க விரும்பினேன். இப்போது  குறைந்த பட்சம் அவள் விரும்புகிற உலகில் கொஞ்ச நேரம் இருந்து  வர வேண்டும்.இது தான் திட்டம்.பைக் இருக்கிறது.மூன்று மணி நேரத்தில் அவள் உலகில் நுழைந்து விட முடியும்.

×××××

"ரொம்ப நன்றி சார் "

" பரவாயில்லைங்க ".

கைத்தாங்கலாக அவனை இரண்டு பேர் பிடித்திருந்தார்கள்.அவன் முகம் அழுது சிவந்து போயிருந்தது.நடக்க ஆரம்பித்தோம்.

" என்ன ஆச்சு, நான் பார்த்துட்டு ஓடி வரும் போதே sucide பண்ணிக்க பாக்குறாப்ள "

கூட வந்தவர்களில் ஒருவன் பேசினான்.

"நேத்து இவன் ஆளுக்கு பர்த்டே சார்.அவளை கூட்டிகிட்டு இங்க வந்திருக்கான்.வர வழியில் எவனோ
கார்காரன் திருப்பத்தில அடிச்சிட்டு நிக்கமா போயிட்டான்.அந்த பொண்ணுக்கு பயங்கர அடி. இருட்டுல பைக் வேற  நசுங்கிபோய் எடுக்க முடியலை. கையிலேயே கொஞ்ச தூரம் தூக்கிட்டு வந்திருக்கான்"

நான் எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்தேன்.

"அப்பறம் ஒரு வண்டி கிடைச்சு ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்திருக்கான். இன்னைக்கு மத்தியானம்  அந்த பொண்ணு செத்து  போச்சு சார்.கார்ல அடிச்சவன் கொண்டு வந்திருந்தா கூட காப்பத்தியிருக்கலாம். அவன் நிக்காமயே போயிருக்கான்".

நான் பேசிக்கொண்டு வருகிறவரின் தோளில் சாயந்திருக்கிற அவன் முகத்தை பார்த்தேன்.அவன் சுய நினைவோடு இருக்கிற மாதிரி தோன்றவில்லை.

"ஹாஸ்பிடல் வந்து விசாரிச்சிட்டு இவன தேடிக்கிட்டு வந்தோம்.அதுக்குள்ள இப்படி தெய்வம் மாதிரி வந்து காப்பத்திட்டிங்க"

"இங்க இருப்பார்னு எப்படி தெரியும்" என்றேன்.

" இங்க தான் ஆக்சிடென்ட் ஆச்சு " என கைகாட்டினார்கள்.அந்த சாலையில்  முடிவில் என் வீடு இருந்தது.

×××××

கார் ஷெட்டில் இருந்து எடுக்கபடவில்லை.
உள்ளூர் வாலிபர் தற்கொலை என செய்தி வந்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக