சனி, 27 ஜனவரி, 2018

பேரன்பின் ராட்சசி


"என் பர்த்டே கிப்ட் என்னடா தரப்போற ? "
"என்ன வேணும்"
"நான் சொல்ல மாட்டேன்."
----------
1.யட்சியிடம் இருந்து
அதிகாலையில் ஒரு தகவல் வருகிறது.
வணக்கத்துடன்
புன்னகைக்கும் smileyஐயும் சேர்த்து அனுப்பி வைத்திருக்கிறாள்.
அவள் சிரிக்கும் முகம்
நினைவில் வருகிறது.
யட்சி....
அவள் செல்லப் பெயர்.
யட்சியை பற்றியும்
அவள்தான் சொன்னாள்.
மற்ற எல்லாரையும் விட அவளுக்கு தான் அந்த
பெயர் பொருத்தமாக
இருப்பதாய் தோன்றும்.
அவள் உலகம்
smiley களால் ஆனது.
அவள் போட்டோக்க்ளில் யட்சியின் வடிவம் தெரியும் என்று சொன்னால்,
இரட்டைக்கொம்பு பூதத்தின் smileyஐ அனுப்பி
வைப்பாள்.
சந்தோசம் கோபம்
வருத்தம் எல்லாமே
அவளுக்கு smiley தான்.
சண்டை நாட்களில்
முறைத்து பார்க்கும்
கோப smiley வரும்.
அவள் கோபமாக எல்லாம் இருப்பதில்லை.
அவள் கோபத்தில்
இருப்பதாக காட்டிக்கொள்ள விரும்புவாள்.
வழக்கத்தை விட smiley
அதிகம் வந்தால் அவள் சந்தோசமாக இருக்கிறாள்
என்று அர்த்தம்.
அவளிடம் இருந்து smiley வராத நாட்களில்,
உண்மையில் அவள்
யட்சியாய் மாறி
இருப்பாள்.
------
2.அவள் ரசனைகள்
எதுவும் என்னுடன் ஒத்துப்போனதில்லை.
அவள் நண்பர்கள் யாரும்
எனக்கு நண்பர்களாய் இருந்ததில்லை.
அவள் பிடிக்கும்
என்று சொன்ன எந்த திரைப்படத்தையும்
நான் பார்த்ததில்லை.
அவள் எடுக்கும்
முடிவுகளில் எந்த ஆலோசனையும் சொன்னதில்லை.
அவளை
பிடித்திருக்கிறதா
என்று கேட்டால்
யோசிக்க வேண்டும்
என்று சொல்வேன்.
எங்களுக்குள் நட்பு சாத்தியமாகியிருந்தது.
நட்பென்பது புரிதல்;
நட்பென்பது நம்பிக்கை;
நட்பென்பது அடையாளம்;
நட்பென்பது நட்பு.
-----
3.உனக்கு எல்லாமும் நியாபகம் இருக்கிறதா?
.
நட்பில் இணைந்த
அன்று வண்ணத்து பூச்சி
பறப்பதை முகப்பு படமாய் வைத்திருந்தாய்.
முதல்பேச்சில் சிரித்து கொண்டே இருந்தாய்.அதிகம் பேசாதவளாக தோன்றியது அல்லது
அப்படி இருக்க
விரும்பியிருக்கலாம்.
புத்தகங்கள் பற்றி அதிகம் சொல்லிக்கொண்டிருப்பாய்.
புது புத்தகம் படிக்கும் போதெல்லாம் கேக் சாப்பிடுவாதக சொல்வாய்.
அது எதேச்சையாக இருக்கும் என நினைத்து கொள்வேன்.
.
அன்று மயிலிறகு படம்
முகப்பில் மாறியிருந்தது.
கோவிலுக்கு போனதாக சொன்னாய்.
கடவுள் நம்பிக்கை வந்திருக்கிறதா என்று கேட்டேன். அதை பற்றி இப்போது பேச வேண்டாம் என்றாய்.அதன் பிறகு எப்போதும் பேசவில்லை.
.
ஒருநாள்
மேகத்தை முகப்பு
படமாக வைத்திருந்தாய்.
அன்று மழை பெய்து கொண்டிருந்தது. பாடல் முணுமுணுப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாய். என்ன பாட்டு என்று கேட்கவில்லை.
சந்தோசமாக இருக்கிறாய்
என்பது புரிந்தது.
.
உன் நிஜப்பெயர் கேட்ட போது அலங்காரம் செய்யப்பட்ட நடிகையின் படத்தை முகப்பில் மாற்றினாய்.
சில நாட்களுக்கு பிறகு,
நான் பொய் சொல்வதில்லை உண்மையை மறைக்கிறேன்
என்றாய். நாம் பேசவில்லை.
.
இரண்டு நாட்களாக
முகப்பு படம் மாற்றபடாமல் இருந்தது. உன்னை புரிந்து கொள்வது கஷ்டம் என்று சொன்னேன்.
அப்படி இருக்கவே பிடித்திருக்கிறது என்றாய்.
.
திடிரென
ஒரு நாள் வந்து மறைந்து வாழப்போவதாக சொன்னாய்.எனக்கு அதில் ஆச்சரியம் எழவில்லை.
.
பேஸ்புக்...
உன் ஐடி டீஆக்டிவேட் செய்யப்பட்டதாக காட்டிக்கொண்டிருந்தது.
-----
4.வண்ணத்துபூச்சியின்
சிறகடிப்பில் ஆரம்பிக்கிறது
அவள் வாழ்க்கை.
கூட்டுக்குள் இருந்து
கேள்விகளும் இல்லாத.
பதில்களும் இல்லாத ஒரு
உலகத்தை தேடி வந்திருக்கிறாள்.
எதிர்பார்ப்புகளும் பற்றுகளும் இன்றி பறக்கவே அவளுக்கு பிடித்திருக்கிறது.
பின்தொடர்வதில் நம்பிக்கையற்று
பறக்கும் திசையை அவளே தேர்ந்தெடுக்கிறாள்.
சிறகுகளில் வண்ணம் பூசி
சந்திக்கும் எல்லோரிடமும் கொஞ்சம் நிறங்களை பகிர்ந்தளிக்கிறாள்.
அவளை புரிந்து கொள்ள
அவள் உலகில்
நீங்கள் வண்ணத்துபூச்சியாய்
இருக்க வேண்டும்.
------
5.ராஜாளியும் வல்லூறுகளும்
பறக்கும் வானத்தை காட்டினால் அவள் பட்டம்பூச்சிகள் தெரிகிறது என்பாள்.
துறைமுகத்தில் உடைந்து நிற்கும் ஒரு கப்பல் ஓவியத்தை
அனுப்பி வைத்தால் புது கப்பல் உருவாக்குகிறார்களா என்று கேட்பாள்.
நோலன் படங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தால்,
உனக்கு விஜய் பிடிக்குமா என்று கேட்பாள்.
பரிணாமவியலையும்
டைம் டிராவலையும்
சிலாகித்தால்,
அவள் பக்கத்து வீட்டு குட்டி பையனுடன் நடந்த சண்டையை பற்றி சொல்வாள்.
ரகசியங்களை பற்றி பேசினால் என்னிடம் மறைக்க எதுவும் இல்லை என்பாள்.
இயற்கையை , அரசியல
லை , கவிதையை, காதலை,
தொழில்நுட்பத்தை , மானுடத்தை,சினிமாவை , இலக்கியத்தை , கதைகளை
எல்லாவற்றை பற்றியும் நாம் ஓர்
நாள் பேச வேண்டும் என்றேன்.
உன்னுடன் பேச வேண்டும் என்பதை தவிர எனக்கு சொல்ல எதுவும் இல்லை என்றாள்.
--------
6.நான் பேசுவது அவளுக்கு புரியுமா என்றெல்லாம் தெரியவில்லை.
ஆனால் அவள் எல்லாவற்றையும் கேட்பாள்.அவள் உளறலுக்காகவேனும் அவளை உங்களுக்கு பிடிக்க கூடும்.
அவள் உலகில் எல்லாரும்
ராமன்கள் தாம்.
அவள் பெயர்.
அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.
அவள் என்பது நிச்சயம்
அவள் மட்டும் தான்.
~~~~~~~
7. யட்சி,
நாம் இருவேறுகாலத்தின் பிரதிநிதிகளாய் இருக்கிறோம்.
நீ கனவென நம்பும்
கடந்த காலத்தில்தான் நான்
இன்னமும் இருக்கிறேன்.
நம் பிரச்சனையும்அதுதான்.
சட்டென முடியும் ஒரு நாளின் பின்னே ஓடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
நகர மறுக்கும் குதிரையின் முதுகில் சவாரி செய்து நாளை விழுங்கும் பாவனையுடன் அமர்ந்திருக்கிறேன்.
யாருமற்ற குளத்தில் மீன்பிடிக்க தூண்டிலுடன் காத்திருப்பவனை பார்த்திருக்கிறாயா யட்சி,
காலத்தில் உறைந்துபோவதென்பது அது தான். நாளை பிடித்து நிறுத்தி அழகாக்கி எதிர்காலத்திற்கு சேர்த்து வைக்கும் வினோத பழக்கம் என்னிடம் இருக்கிறது.
கண் மூடுவதற்கும் திறப்பதற்கும் இடையேயான கணத்தில் இரண்டு உலகத்தில் பிரவேசிக்கிறேன்.
கனவுகளும் நிஜங்களும் நிறைந்த
ஓர் மெய்நிகர் உலகம் எனக்காக காத்திருக்கிறது.
சென்றடைந்த கனவிலிருந்து எழும் நாளில் யட்சிகளும் தேவதைகளும் நிகழ் உலகில் மறைந்திருக்க கூடும்.
~~~~~~
8. நீ கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறேன் யட்சி..
யுகங்களாக..
ஒரு ஒற்றைச்சொல் இந்த
வாதையிலிருந்து மீட்கும்
என்பதை அறிந்திருக்கிறாய்.
நீ கேட்க விரும்பியவைகளை
தூரே ஆற்றில் எறிந்திருக்கிறேன்
கூலாங்கற்களை போல.
அடியாழத்தில் திரும்பிவர முடியாத இடத்தில் கணங்களை அழித்துவிட்டு வந்திருக்கிறேன் யட்சி.
மனிதர்களை விட வார்த்தைகள் அத்தனை பெரியவை இல்லை.
நிகழ்காலத்தை தொலைத்து கனவுகளை சேர்த்து என்ன செய்யப்போகிறேன்.
விலகி நின்று வேடிக்கை காட்டும் காலத்தை என்னவென்று
சொல்வேன் யட்சி.
அகத்தினுள் எழும் ஒற்றை தீ இக்காடு முழுவதையும் கேட்கிறது.
உடைந்து வீழும் நேரத்திலும் அது என்னை இறுக்க பற்றி வைத்திருக்கிறது.
வனத்தில் இருந்து இறங்கி வரும் ஒரு நாளுக்காய் காத்திருக்கிறேன் யட்சி.
~~~~~~~
9. நீ பேசாத நாட்களில் வார்த்தைகளுக்கு உயிர் வந்துவிடுகிறது.
ஒன்றோடு ஒன்று இடித்து கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறது.
தெருமுனையில் வழிகேட்டு என் வீடு வந்துசேர்கிறது.
அனுமதி இன்றி உள்ளே நுழைந்து உன்னுடன் பேச சொல்லி கூச்சல் போடுகிறது.
பேசாவிட்டால் கூட்டமாக தற்கொலை செய்வோம் என மிரட்டுகிறது.
எழுதிய எனக்கு அவற்றின் இறப்பை காண முடியவில்லை.
அதனால் எழுந்தேன்.
வேகவேகமாக இங்கே இழுத்து வந்திருக்கிறது.
வரும் வழியில் உன்னுடன் சண்டை போடக்கூடாதென சத்தியம் வேறு வாங்கியிருக்கிறது.
என் வழியே உன்னை சந்திப்பதில் தான் அவைகளுக்கு சந்தோசமாம்.
காதில் சொல்லிகொண்டு இருக்கிறது.
உன் வீட்டு வாசலில் தான் நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்.
எப்போது வந்து எடுத்து கொள்ள போகிறாய்.
~~~~~~
10.
பேரிரைச்சலோடு கால் நனைக்கும் அலைகளுக்கு நடுவே அமர்ந்திருக்கிறாய்.
கடல் கன்னிகள் கரை தேடி புறப்பட்டதில்லை என அறிவேன்.
இதே கார்காலத்தில் ஒரு
காரிருள் ஆரம்பிக்கும் போது உன் கைகளில் தீபம் இருந்தது.
பாம்புகள் ஊறும் கனவிலிருந்து திடுக்கிட்டு எழும் போது நீயே புன்னகைத்து கொண்டிருக்கிறாய்.
உன் வரலாற்றில் சண்டைக்கும் சமாதனத்திற்குமான இடைவெளி என்பது ஒரு நூல்.
தலைகவிழ்ந்து பேசும் போது தூரத்தில் இருந்து வந்து சேர்வதற்குள் உன் குரல் ரகசியமாய் ஆகிவிடுகிறது.
காட்டில் தலைகீழாக பறக்கும் பறவையை தொடர்வண்டியில் செல்பவர்கள் கவனிப்பதில்லை.
ஆகாயத்தில் பறக்கும் பறவையை பற்றி நீலக்கடலில் பயணிப்பவர்களுக்கு என்ன கவலை இருக்க போகிறது?
~~~~~~
அவளுக்கு பிடிக்காத மாதத்தை கேட்டால் நவம்பரை சொல்வாள்.
எனக்கு நவம்பர் தான் பிடிக்கும்.
நவம்பரில் தான்
அவளுக்கு பிறந்தநாள்!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக