ஞாயிறு, 28 ஜனவரி, 2018

யட்சி வருகை

பெரிதாய் எந்த திட்டமிடல்களும் 
இல்லாத ஒரு சாமனியனின் வாழ்க்கையில் 
ஒரு நாள் யட்சி நுழைந்தாள். 
எளிதில் உணர்ச்சிவசப்படுவனாகவும் 
அதன் பொருட்டு வருந்துபவனும் 
இருந்த  போது , 
யட்சியோ அதன் மறுகரையில் இருந்தாள்.
ஒரு வழிகாட்டியை போல் அவள் 
தன் பாதையில் அழைத்து சென்றாள்.
எல்லா அசாதாரணமான விஷயங்களும் அவளுக்கு சாதரணமாய் இருந்தது.
என் வாழ்வில் இத்தனை 
குழப்பங்கள் நிறைந்த ஒரு பெண்ணை 
இப்போது தான் பார்க்கிறேன் என்று நினைத்த போது உலகம் அவள் தெளிவிற்காக 
கொண்டாடி கொண்டிருந்தது.
கானகங்களில் அலைந்து 
கொண்டிருந்த போது அவள்தான் 
நகரத்திற்கு அழைத்து வந்தாள்.
மழைதுளிகள் ஒலி எழுப்ப தொடங் கிய
அவள்  குரல் கேட்க தொடங்கும்.
ஒரு நடு இரவில் அழுது கொண்டிருந்த 
போது அவள் Smiley கள் அனுப்பி வைத்தாள்.
நட்சத்திரங்களை எண்ணிய நாட்களில் 
அவள் என் கூட இருந்தாள். 
அன்பை அதன் அத்தனை பரிணமாங்களிலும் 
உணர்த்தியவளை புரிந்து கொள்ள 
முயற்சிப்பதை விட்டுவிட்டு நேசிக்கத்தொடங்கிவிட்டேன்.

தாஜ்மஹால்

பெருமழை பெய்து பாலம் இடிந்ததை ஊர் கூடி பார்த்து கொண்டிருந்த போதுதான்  அவள் நிற்பதை கவனித்தேன்.மழை தண்ணீரில் வெற்றுக்காலுடன் நின்ற அவள் பாதங்களை தான் முதலில் பார்த்தது.
நிமிர்ந்த போது  மின்னல் வெட்டியது போல் இருந்தது  அவள்   நிறம் ; அந்த நிறத்திற்கு அவள்  என்னை  திரும்பி கூட பார்க்கபோவதில்லை  என்றுதான்  அப்போது    தோன்றியது.

இரட்டை சடைபோட்டு ஹைஸ்கூல் யூனிபார்மில் சின்ன  சைக்கிளை நிறுத்தி திரும்பி  பார்க்கும்  வரையிலும்  அப்படித்தான் நினைத்திருந்தேன்.
அவள்  கூட வரும் வானரங்கள் பிள்ளையார் கோவில் தெருவில் பிரிந்துவிட சைக்கிளில் இருந்து  நடக்க  ஆரம்பிப்பாள்.நால்ரோடு தாண்டி பின்னே செல்லும்   தைரியம் எனக்கு  இருந்ததில்லை. தெருமுனையில் நின்றுவிடும் போது திரும்பி திரும்பி பார்த்து விட்டு சைக்கிளில் ஏறி செல்வாள்.

அவளுடன் பேசுவதற்கும் ஒரு மழை வேண்டி இருந்தது.ஒருநாள்  மழை பிடிக்க செருப்பை கழட்டிவிட்டு பிள்ளையார் கோவில் முகப்பிற்கு வந்து நின்றாள்.அதே பாதங்கள். நானுற்றி அம்பது முறை சொல்லிபார்த்த அந்த  கேள்வியை  அவளிடம்  கேட்டேன்.
நீ  என்ன படிக்கிற ?

என்னை விட இரண்டு வகுப்புகள் குறைவாக சொன்னாள். அந்த
மழைக்கும் பிள்ளையாருக்கும்
நன்றிகள்.

உள்ளூர் திருவிழாவில் தண்ணீர் தெளித்து குளிப்பாட்டியிருந்த தார்ச்சாலையில் வைத்து
இடது  கையில் அவள் நம்பர்  எழுதி தந்தாள்.அதிகாலையில் எடுத்த    தாஜ்ஹால் போட்டோ  ஒன்றோடு அவள் பெயரை சேமித்து வைத்திருந்தேன்.
அதிகம்  பேர்  வராத ஒரு பெட்டிக்கடை வாசலில் ஓரத்தில் எனக்காக காத்திருப்பாள்.உள்ளங்கையில் மடித்து வைத்திருக்கும்  திருநீறை  அக்கம்  பக்கம்  பார்த்து பூசிவிடுவாள்.
இது வழக்கம்  தான்.சங்குசக்கரம்  போட்டிருந்த அம்மன் கோவில் சிகப்பு கயிற்றில் கோர்த்த டாலர்தான் அவள்  தந்த முதல் அன்பளிப்பு.
நூல்  நைந்து அறுந்து வீழும் வரையிலும்  அது கழுத்தில் இருந்தது.
கடைக்கார அண்ணனுக்கு எங்களை பற்றி தெரியும்.எப்போதும் அவர் அதை காட்டிக்கொண்டது இல்லை.
ஊர்  திரும்ப வேண்டிய ஓர்  நாள் சீக்கிரம் வந்தது.கடைசி நாள் அவளை
பார்க்கும் போது தாடிமுளைக்க ஆரம்பித்திருந்தது.
இனிமேல் ஷேவ் செய்ய வேண்டும்.
மூன்று நாட்களாக ஒரே சட்டையை  போட்டிருப்பதாக சொன்னாள்.

சோனி எரிக்சனின் மிகப்பழைய மாடல் ஒன்றில் லாக் எடுக்கும்  போது தவறவிட்ட அழைப்புகள் முன் வந்து நிற்கும்.அதன்பிறகான நாட்களில்
எப்போது  எழும்போதும்  போனில் தாஜ்மஹால் காட்டும். ஆறுமாதங்களுக்கு பிறகு  ஒரு நாள்  பிள்ளையார் கோவில் தெருவில்
நின்று கொண்டிருந்தேன்.
தாவணி கட்டியிருந்தாள்.
நுனி தலைப்பை கையில் பிடித்தபடி வேகமாக நடந்து வந்து வந்தாள்.

ரெட்டை சடை போட்டு ஹைஸ்கூல் யூனிபார்மில்  நால்ரோடு வரை சைக்கிள்  தள்ளி வந்த  அந்த சின்ன பெண்  இப்போது இல்லை.
வளர்ந்திருக்கிறாள்.தாவணியில் வெட்கம்   அவளை  அழகாக்கி  கொண்டிருந்தது. பிரிண்ட் செய்யபட்ட
பஸ்டிக்கட் தாளை திருப்பி என் புது நம்பரை எழுதி கொடுத்தபோது வாங்கிகொண்டாள்.தெருமுனையில் விடைபெற்று பஸ்  ஏறும் போது  தாஜ்மஹாலிடம்  இருந்து  அழைப்பு வந்தது.அவள்  பேசும் போது அழுதிருப்பது  தெரிந்தது.

ஆறுவருடங்களுக்கு  பிறகு அரசாங்கத்தில்  பழைய பாலத்தை இடித்துவிட்டு புது பாலம்  கட்டியிருந்தார்கள். பாலத்தை பஸ் கடக்கும் போது கடைசி படிக்கட்டில் நின்று கொண்டேன்.

தூரத்தில் அவள்  வெற்றுக்காலுடன் மழைத்தண்ணியை தள்ளி விளையாடி
கொண்டிருந்தாள்.

கடைசி வனம்

சஞ்சாரமற்ற ஓர் அடர்வனம் தீப்பிடிக்கிறது.
அந்தியில் நட்சத்திரம் 
மறைந்து தீப்பிழம்பு காடெங்கும் 

சாம்பல் பரப்புகிறது.
வெடித்து கிளம்பும் சுள்ளிகள் புகை 

நடுவே நடனம் புரிகின்றன.
பெறுங்காற்று காடு முழுவதையும் 

தின்ன கொடுக்கிறது.
பொருளற்ற சத்தங்கள்
திசையெங்கும் ஒலிக்கிறது.
ஆர்ப்பரிக்கும் நெருப்பில்
மரண ஓலங்கள்
காணமல் போயிருந்தது.
வீடு திரும்பும் பறவைகள்
வீட்டை தொலைத்து விட்டிருந்தன.
விடியலில் மழை பெய்து,
தீ உயிர்விடுகிறது.
இரண்டு திங்களில்
எரிந்த மரக்களைகளில் தளிர் எட்டிபார்க்க
நகரமயமாக்கலில் எஞ்சியிருக்கும்
கடைசி வனம்
புதுயுகத்தை ஆரம்பிக்கிறது.

யட்சிக்கு

அந்தி மறையும்  சூரியன் தன்
கிரணங்களை பூமியில் விட்டு
சென்றதென அறிந்தவர்கள் அவள் 
புன்னகையை பற்றி தான்
பேசியிருக்க  கூடும்.

காலத்தில் தனித்திருக்கும் 
தேவதையின் சிரிப்பு
இந்த பிரபஞ்சம் எங்கும்
வியாபித்திருக்கிறது.

யுகங்களுக்கு பின்னும் 
யட்சியின் குரலை இன்னும் காடு  பிரித்தெடுக்கவில்லை.

அவள் புன்னகை  வேண்டி மழை
மேகத்தை பார்க்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

காற்றின் சாரலில் சிந்தியிருக்கும் 
கடைசி புன்னகையை  தேடி
சென்றவர்கள் திரும்பவில்லை.

வனம் திரும்பும் யட்சிக்கு
புன்னகைப்பதற்கென தனி 
காரணங்கள் எதுவும் இல்லை.

கட்டி முடிக்கப்படாத பாலம்

இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பாலத்தின்  ஒரு  முனையில் இருக்கிறேன். கடைசி நேர மன்னிப்புகளும்  சமாதனங்களும் பலனின்றி உடைய ஆரம்பித்திருக்கிறது.
நம்பிக்கைகளும் நட்புமான ஒரு
நாளில் தான் நாங்கள் இந்த
பாலத்தை உருவாக்கினோம்.
இரு வேறுமுனையில் இருக்கும்  எங்களுக்குள்  நட்பை இந்த  பாலம்
பறிமாற்றிக்கொண்டிருந்தது.
எல்லைகளற்ற  அன்பு  எப்போதும்  பாலத்தை  உயிர்ப்புடன்  வைத்திருந்தது.
சிறு சண்டையின்  நீட்சியாய்
பேசாமல் இருந்த  நாளில்,
பாலத்தின்  முதல்  செங்கல் விழுந்தது.
விளக்கங்களை சொல்ல வாய்ப்புகள்  அளிக்காத  நொடிகளில்  பாலம் 
ஆட்டம்  காண  ஆரம்பித்தது.
வெறுப்புகளும் புறக்கணிப்புகளாமான ஒரு நம்பிக்கையற்ற
கணத்தில்  பாலம்  இடிந்து விழத்தொடங்கியது.
கண்முன்  எதிர்பக்கம்  சரிந்து
விழுந்து  கொண்டிருக்க ,
கொஞ்சம்  பூங்கொத்துகளையும்.. கொஞ்சம்  மன்னிப்புகளையும் ..
கொஞ்சம்  நட்பையும்
சேர்த்து  வைத்து காத்திருக்கிறேன்.

பிணம் தின்னும் கழுகுகள்

பிணம் தின்னும் கழுகுகள்
நதிக்கரையில் அமர்ந்திருக்கும்.
வேட்டை நாய்கள் ஊலையிடும்.
இரத்த வாடை காற்றில் வீசும்.
நரிகள் அலையும்.

ஒரு போர்
ஒரு வெறி
ஒரு வெற்றி

ஒரு உடன்படிக்கை
ஒரு சமாதானம்.

நாடுகள் பிளவுறும்.
நகரங்களுக்கு புது எல்லைகள்
அறிக்கைகள் ,
ஆயுதங்கள் ,பேரங்கள்.
ஊழல்கள்.

ஆட்சி மாற்றம்
கட்டுபாடுகள்
விதிமுறைகள்
கண்ணியம்
ஒழுக்கம்
கொஞ்சம் கொலைகள்.

போராளிகள் தோன்றுவர்.
இயக்கங்கள் உருவாகும்.
பிஞ்சு குழைந்தைகளின் கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்படும்.

ஆட்சி மாறும்.
அதிகாரம் மாறும்.
ஆள்பவர்கள் மாறுவார்கள்.
உறுதி மொழிகள் அள்ளி வீசப்படும்.
துரோககங்கள் நிகழும்.
பட்டினி சாவுகள் சாதரணமாகும்.

எல்லாவற்றுக்கும் பின்னால்,

ஒரு சர்வாதிகாரம்
ஒரு பேராசை
ஒரு ஏமாற்றம்
ஒரு கண்ணீர் துளி.

குட்டி யானையும் நகரத்து மனிதனும்

காட்டில் இருந்து அப்போது தான் குட்டி யானையை  பிடித்து வந்திருந்தார்கள்.
அதன் கால்கள் பெரிய சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூக்கு லாரியில் ஏறமாட்டாமல் அடம் பிடித்து கொண்டிருந்தது.

விடிகாலையில் அவன் அந்த
நகரத்திற்கு வந்தான்.
மின்சார வெளிச்சம் கண்களை
கூசியது.கொண்டு வந்து சேர்த்த பஸ்ஸை திருப்பி கொண்டிருந்தார்கள்.
அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

ஒடிசலான தேகம் கொண்ட ஒருவன்
தழிகளை வெட்டி எறிந்தான்.
நூறு ஆண்டுகள் பழமையான மரத்தில் குட்டி யானை கட்டப்பட்டிருந்தது.
அதன் சிறிய கண்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இப்போது பிளிறவில்லை.

ஒரு வழியாக அட்ரஸ் தேடி கண்டுபிடித்து விட்டிருந்தான்.ரெஸ்யும்  கைகளில் எடுத்து வைத்து கொண்டான்.யாரை கேட்பதென தெரியவில்லை. தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

இரண்டு வாரம் முடிந்திருந்தது.
யானை குட்டியை இடம் மாற்றி கட்டியிருந்தார்கள்.தும்பிக்கையை ஆட்டிய படி நின்று கொண்டே தூங்கி கொண்டிருந்தது.
நெற்றியில் குங்குமம் இட்டிருந்த தலைப்பாகட்டுகாரன் ஒருவன்  குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.

எதிரே கேள்வி கேட்பவரின் முகம் கணிக்க முடியாததாய் இருந்தது.
டேபிள் மீது சம்பிரதாயமாக சில புத்தகங்கள் இருந்தது.அந்த அறையில் இருந்து பெட்ரோல் வாசனை அடித்தது.
அவன் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
அவர்  இது தான் கடைசி கேள்வி என்றார்.

யானை குட்டிக்கு கண்கள் கட்டப்பட்டது.
அவன் சம்பளம் பற்றி சொன்னார்கள்.
லாரியில் ஏற்றவும் உடல் குலுங்க நகர்ந்தது. பஸ் சீட் கிடைக்க வில்லை. படியில் தொங்கி கொண்டு வந்தான்.

புதன்கிழமை ராசியான நாளாம்.
குளித்து முடித்து திருநீர் அணிந்து
பஸ் ஸ்டாபில் நின்று கொண்டிருந்தான்.
அங்கு எல்லாரும் அவனை மாதிரியே  இருந்ததாக தோன்றியது.

லாரியில் இருந்து இறக்கியதும் கண் கட்டு அவிழ்க்க பட்டது. அங்கே சில நூறு யானைகள் மரங்களை தூக்கியபடி நகர்ந்து கொண்டிருந்தது.