வியாழன், 23 ஜனவரி, 2020

School Dhevathai -02

 ஒரு பெண் உள்ளே வந்தவுடன் எல்லாக் காலமும் வசந்த காலமாகி விடுகிறது.கடவுள் நமக்கு எல்லா நிகழ்வுகளையும் அவரே நேர்த்தியாக நெய்து தருகிறார் என தோன்ற ஆரம்பித்து விடுகிறது. திட்டமிட்டு அவளை பார்க்க விரும்பிய எத்தனையோ  நாட்கள் நடக்காமல் போயிருக்கிறது.எதிர்பாரத தருணங்கள் நிகழும் போது பிரபஞ்சம் நமக்கு கருணை காட்ட தொடங்கியிருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.அவ்வாறான ஒரு நாள் காலை.டியூசன் மாறியிருந்தேன்.இரண்டு வேளையும் வர வைத்திருந்தார்கள்.பள்ளி ஆரம்பிக்கும் முன்னே டியூசன் போக வேண்டும்.ஊர் நிசப்தமாக இருந்தது.மெல்ல சைக்கிள் மிதித்து போய் கொண்டிருந்தேன். ஒரு குளத்தை தார்சாலை 'ட'வடிவில் இணைத்து கொண்டிருந்தது.அதன் ஒரு முனையில் வந்த போது மறுமுனையில் அவள் வந்தாள்.ஒரு கணம் எதுவும் தோன்றவில்லை. தாகமெடுத்து நாக்கு மேலன்னத்தோடு ஒட்டி கொண்டது.எத்தனையோ முறை பள்ளியில் பார்த்திருந்தாலும் அவளை தனியே பார்க்க முடிந்ததே இல்லை.இந்த சாலையை கடவுள் தான் படைத்திருக்க வேண்டும்.அங்கே யாருமே இல்லை. கம்பருக்காவது அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் என்பதோடு முடிந்தது.எனக்கோ அவள் பார்க்கும் போது பிரபஞ்சமே பார்த்த மாதிரி இருந்தது.இதெல்லாம் சில நிமிடங்கள் தான் அவள் எதிரே வந்த போது அவளை பார்க்க கூட முடியாமல் திரும்பி கொண்டேன். ஒளி வீசும் முழுமதியை தனியே பார்க்கும் தைரியம் அப்போது வந்திருக்கவில்லை.

சலங்கையிட்டால் ஒரு மாது  பாடலில் வருகிற அமலா மாதிரி தான் அவள் இருந்தாள்.அந்த முகம் லட்சோப லட்சம் குடங்கள் பாலை ஊற்றி பூஜிக்கிற முகம்.கிருஷ்ணனின் பரமாவதாரத்தில் எதை பார்ப்பது எதை விடுவது என குழம்பி நிக்கிற கர்ணன் மாதிரி, அவள் முகத்தை எப்போதும் பரவசத்தோடு தான்  பார்க்க முடிந்தது. சனிக்கிழமைபள்ளிக் கூடம் இருந்தால் எல்லா வகுப்பிற்கும் ஒரே நேரத்தில் விளையாட விட்டு விடுவார்கள்.அன்று எல்லாரையும் வரிசையாக நிறுத்தி ஒவ்வோர் வகுப்பாக வீட்டுக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள்.எனக்கு பக்கத்து வரிசையில் தான் அவள் நின்றாள்.அப்போது தான் அவள் முழுமையும் பார்த்தேன்.வாழை மரத்தை தூணில் சாய்த்திருக்க மாதிரி இருந்தாள்.

பொதுத்தேர்வு நடக்க நாற்பது நாட்களே இருக்கும் நிலையில் போர்டில்  கவுண்டவுன் எழுத ஆரம்பித்திருந்தார்கள்.ஒவ்வொர் எண்ணாக குறைய ஆரம்பித்த போது அவளிடம்  பேசும் வாய்ப்புகளும் குறைந்து கொண்டிருப்பதாக தோன்றியது.இந்த சூழ்நிலையில் தான் அன்று ஸ்கூலில் அறிவியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள்.இரண்டு சின்ன பைப்புகளின் நடுவே கண்ணாடியை வைத்து நீர்முழ்கி கப்பலில் இருந்து வெளியே பார்க்க உதவும் ஒரு கருவியை செய்திருந்தேன்.ஒரு பெரிய அறையில் எல்லாருக்கும் இடம் கொடுக்க பட்டிருந்தது.கதவின் அருகே  கருவியோடு நின்று கொண்டிருந்தேன். ஒவ்வோர் வகுப்பாக வந்து போய் கொண்டிருந்தார்கள்.எங்கள் வகுப்பு வந்த போது அவள் தோழிகளோடு வந்தாள்.அவள் அருகில் நின்ற போது கூச்சமாக இருந்தது. அவள் தோழியிடம் எல்லாரிடமும் சொன்ன அதே சம்பிரதாய வார்த்தைகளை சொல்லி விளக்கினேன்.தோழி அவளிடம் கொடுத்தாள். அவள் கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்து பார்த்து விட்டு திருப்பி கொடுத்தாள்.எனக்கு சொந்தமான ஒன்றை அவள் கையில் வைத்திருந்ததே ஆனந்தமாக இருந்தது.எதுவும் பேச வாய் வரவில்லை.விக்கித்து விட்டது மாதிரி இருந்தது.அவள் அரங்கத்தை விட்டு வெளியேறும் வரையிலும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள்.

கண்காட்சி முடிந்து சேர் எல்லாம் அடுக்கி கதவு பூட்டி வைக்கும் போது ஐந்து மணிக்கு மேல் ஆகியிருந்தது.மொத்த பள்ளியும் கிளம்பி போயிருந்தது.மெதுவாக நடந்து சைக்கிள் ஸ்டாண்ட் வந்து கொண்டிருந்தேன்.அவளும் அவள் தோழிகளும் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களை கடந்து போய் சைக்கிளை எடுத்தேன்.நிமிர்ந்த போது அவள் அருகில் வருவது தெரிந்தது.அவள் தோழிகள் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவள் அருகில் வந்து நின்றாள்.பேச ஆரம்பிப்பவளை போல் லேசாக தொண்டையை செருமினாள். எனக்கு உள்ளூர நடுங்க ஆரம்பித்திருந்தது. இந்த மாதிரியான சூழலை எதிர்கொள்கிற எந்த தைரியமும் அப்போது இல்லை.தலையை குனிந்த படி அவளை பார்க்க கூட செய்யமால் சைக்கிளை எடுத்து  மிதிக்க ஆரம்பித்தேன். அவள் முதுகிற்கு பின் பார்ப்பதாக தோன்றியது.நான் திரும்பவே இல்லை.

*

வெறிச்சோடி இருந்த சாலையில் சைக்கிள்கள் தென்பட்டன.அவள்  இப்போது படிக்கிற பள்ளிக்கூட பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள்.அவளை காணவில்லை.
அவள் ஊரில் இருந்து இந்த ஒரே வழி தான் இருக்கிறது.நேரம் ஆகி கொண்டிருந்தது.அவள் முன்பே போயிருந்தால் இன்னைக்கு பார்க்க முடியாது.சஞ்சலமாக இருந்தது.இவ்வளவு காலையில் வந்து அவளை பார்க்காமல் போவதை பற்றி யோசிக்க முடியவில்லை.அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் அவள் பேச வந்த நியாபகங்கள் அலைக்கழித்து கொண்டிருந்தது. நேரம் அதிகமாக ஏமாற்றமாக வந்தது.மழை வந்தால் சிரமமாகி விடும்.இனியும் நிற்பது பயனில்லை என்று தோன்றியது. திரும்பி வருகிற வழியில் ஒரு  சின்ன ஊருக்குள் நுழைந்து வெளியேறும் போது எதிரில் வருகிற முகம் தெரிந்த மாதிரி இருந்தது.அவள் தோழி.மனம்  பரபரப்படைந்து.அப்படியானல் அவளும் வந்திருக்க வேண்டும்.பார்வையை விலக்கி பக்கத்தில் பார்த்தேன்.அவளும் என்னை  பார்த்து கொண்டிருந்தாள்.அந்த பார்வையில் இருந்தது அதிர்ச்சியா மகிழ்ச்சியா எதுவென தெரியவில்லை.நான் கடந்த காலத்தில் விழ ஆரம்பித்திருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக