வியாழன், 23 ஜனவரி, 2020

சாத்தானுக்கு மணிமண்டபம் கட்டுதல்


பேய்கள் அரசாளும் சித்திரையில் 
பிணங்கள் வீதியில் திரிய 
நிறை அம்மாவாசையில் 
சாத்தானுக்கு மணிமண்டபம் கட்டும் 
திட்டம் பிறந்தது.

நாடு பிடிக்கும் குள்ள சாத்தானும் 
ஊர் சுற்றும் வேதாளமும் 
கால் நக்கும் பேய்களை 
எழுப்பி ஊளையிட்டன.

குரங்குகள் கையில் தீப்பந்தங்களோடு 
நகருக்குள் புக 
ஓநாய்களும் நரிகளும் 
கண்கள் மின்ன எச்சில் முழுங்கி 
காத்திருந்தன.

தெய்வங்களை ஆற்றில் மூழ்கடித்து 
தேவதைகள் சிறை பிடிக்கபட்டன.
ரத்தம் குடிக்கும் மனிதர்களுக்கு 
விடுதலை அளிக்கபட்டது.

தென் திசையில் நாடொன்று 
விழித்திருந்தது.அது 
ஆயிரம் ஆண்டுகளாக மெல்ல
உருவாகி வந்திருந்தது.
குள்ள சாத்தானின் மாயாஜாலங்கள் 
அந்த மண்ணில் வேடிக்கையாகின.

சாத்தானின் ரத்த காட்டேரிகள் எல்லையில் 
திருப்பி அனுப்பி வைக்க பட்டன.
தீபபந்தம் ஏந்திய குரங்குகள் 
துரத்தி அடிக்க பட்டன.
சாத்தானும் வேதாளமும் 
நுழையவே முடியாத தென்நாட்டை 
ஏங்கி பெரு மூச்செறிந்தன.

சூறாவளியை தடுத்து நின்ற 
பெரும் புலிகள் மூப்பிலும் 
நோயிலும் ஓர்  நாள் மறைந்தன.
வேதாளம் ஆணவத்தோடு 
உள்ளே நுழைந்தது.
அதன் கை பட்டவர்கள் தலை 
சாம்பலானது.
பாய வேண்டிய வேட்டை நாய்கள் 
வேதாளத்தின் காலை நக்கின.
வேட்டை நாய்களாய் இருந்தவை 
அடிமை நாய்களாய் மாறி
சிம்மாசனத்தில் அமர்ந்தன.

சாத்தான் அகங்காரமாய் சிரிக்க 
தென்நாட்டை இருள் சூழ்ந்தது.
வீதிகளில் ரத்தம் பரவ வடக்கே 
மணி மண்டபம் உயிர் பெற்று 
கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக