வியாழன், 23 ஜனவரி, 2020

School Dhevathai -01


நெல்மணிகள் தார்ச்சாலையில் சாய்ந்திருக்கும் ஆலமரத்து சாலையோரம் சைக்கிள் நின்றிருந்தது.அவளை பார்க்க விரும்பிய போதே சைக்கிள் செயினை காலால் கழட்டி விட கற்று கொண்டிருந்தேன்.கைகளில் கிரீஸ் பூசிக்கொண்ட போது நெல் வண்டி ஏற்றிய மூக்கு லாரி வந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள் யாரும் பார்த்து விட கூடாதென திரும்பி கொண்டேன்.பன்னிரண்டு மைல்  தொலைவில் இருந்து  யாரும் தேடி வரப் போவதில்லை.இருந்தும் தெரிந்த முகங்கள் வந்தால் சொல்வதற்கும் தயாராக பொய் இருந்தது.ஏனோ கைகளில் நடுக்கம் பரவியிருந்தது. எந்த பக்கம் போனாலும் ஒரு கிலோமீட்டர் போனால் தான் ஊர் ஆரம்பிக்கும். இந்த அதிகாலையில் யாருக்கும் தெரியாமல், யாருமில்லாத இந்த சாலையில் தனியே இப்படி நிற்பதெற்கெல்லாம் ஒரே காரணம் தான்.

ஒன்றரை வருடங்களுக்கு பின் அவளை பார்த்தது.கோவில் திருவிழாவிற்கு வந்தவனை,வீட்டுக்கு வந்தே தீர வேண்டுமென வற்புறுத்தி அழைத்து சென்ற நண்பனால் வந்தது.சுடு காப்பியை வாசலில் நின்று ஊதி ஊதி குடித்து கொண்டிருந்த போது, கிழக்கு திசையில் இருந்து அவள் வந்தாள். சூரியன் அப்போது மேற்கு திசையில் இருந்தான். அந்த வெளிச்சத்தில் எலுமிச்சை பழம் மாதிரி அவள் முகம் பிரகாசித்தது. சைக்கிளில் பத்து வினாடிகளுக்குள் அந்த இடத்தை கடந்து போயிருந்தாள்.

பப்ளிக் பரிட்சை முடிந்து சட்டையெல்லாம் இங்க் தெளித்து பெரியாற்று பாலத்தின் கரையில் கடைசியாக பார்த்தது.அதே சைக்கிள் தான் வைத்திருக்கிறாள்.அந்த சின்ன மூக்குத்தியும் கூட மாறவில்லை.ஒன்றரை வருடத்தில் அவளை பார்க்க வேண்டும் என நினைத்ததில்லை. இப்போது உடனே அவளை பார்த்து பேச  வேண்டும் போல் இருந்தது.அது அத்தனை சாத்தியமில்லை. அழைத்து வந்திருந்தவனிடம் சென்று, 'நம்ம கூட படிச்சவங்க எல்லாரும் இப்ப என்ன படிக்கிறாங்க' என்று சுற்றி வளைத்த போது அவள் பக்கத்து ஊரில் படிப்பதையும்  அவள் போகும் சாலை வழியையும் சொன்னான்.

அவள் வந்து போகும் அந்த சாலையில் தான் காலையில் இருந்து நின்று கொண்டிருக்கிறேன். அவனிடம் சொல்லியிருந்தால் கூட வந்திருப்பான்.
இதை ரகசியமாகவே வைக்க விரும்பினேன். யாரிடமும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல் நடந்த கதை.எனக்கும் அவளுக்கும் மட்டுமே  தெரிந்த கதை. ரகசியமாய் வளர்ந்த கதை.

முதல் பருவ தேர்வு நடந்து முடிந்த ஒரு சாயங்கால வேளை. வேப்ப மரத்தின் அடியில் தமிழ் புத்தகத்தை தலைகீழாக வைத்து படித்து கொண்டிருந்தேன். வகுப்பிலும் வராண்டாவிலும் பாதி பேர் அமர்ந்திருந்தார்கள்.அவள் வகுப்பினுள் இருந்து வரண்டாவிற்கு வந்து அமர்ந்தாள்.
யாருடனோ  பேசிக்கொண்டே அவள் திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள்.வேப்ப மரத்தை சுற்றிலும் நிறைய பேர் இருந்ததால் யாரை பார்க்கிறாள் என தெரிந்து கொள்ள முடியவில்லை. அவள் மறுபடியும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தாள்.

இரண்டு நாட்களுக்கு  பிறகு ஒரு மத்தியான நேரம் தண்ணீர் தொட்டி அருகே நின்றிருந்த போது தூர்த்தில் இருந்து அவள் வந்து கொண்டிருந்தாள். தண்ணீர் பிடித்து முகம் கழுவுகையில் அருகில் வந்தாள்.ஒரு பெண்ணின் அருகாமை கூச்சமாக உணர செய்தது.திரும்பி பார்க்க தைரியம் வரவில்லை.நிமிர்ந்த போது அவள்  எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள்.அந்த பார்வையே தாங்கி கொள்ள முடியாத படி இருந்தது.வேப்ப மரத்தடியில் அவள் திரும்பி திரும்பி யாரை பார்த்தாள் என்பது தெரிந்து போயிற்று. அங்கிருந்து நடக்கும் போதும் அவள் முதுகுக்கு பின்னால் பார்ப்பது போல் தோன்றி கொண்டிருந்தது.

முதலில் பயமாக இருந்தது.இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை.ஆனாலும் ஏதோ ஒன்று அவளை மறுபடியும் பார்க்க சொல்லி கொண்டிருந்தது. யாரிடம் கேட்பதென்றும்  தெரியவில்லை. எவரிடமும் சொல்வதற்கு தயக்கமாய் இருந்தது.ரகசியமாய் வைத்திருப்பதே உள்ளூர கிளுகிளுப்பாக இருந்தது.

மறுநாள் அவள் வகுப்பில் சாதரணமாக இருந்தாள்.திரும்பி பார்த்த போதும் கூட பார்க்காமல் இருந்தாள்.ஒருசேர குழப்பமாகவும் கவலையாகவும் இருந்தது. அன்று மாலை  கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம். கிரவுண்ட் சுவர் ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது அவள் மறுபடியும் வந்தாள்.எல்லோரும் விளையாடி கொண்டிருக்க அவள் வராண்டாவில் அமர்ந்து மைதானத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களுக்கு பின் அவள் யாரை பார்க்கிறாள் என தெரிந்தது.தூரத்தில் இருந்ததால்  தைரியம் பெற்று அவளை பார்க்க முடிந்தது.வேகமாக அடிக்கபட்ட பந்து எல்லைக் கோட்டை நோக்கி ஓடி கொண்டிருந்தது.சுய உணர்வு பெற்று ஓடத்துவங்கிய போது பந்து  ஏற்கனவே கோட்டை தாண்டியிருந்தது.

நாளாக நாளாக  எப்போதாவது எங்கேயாவது யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்வது போய்  பிரேயர் கூட்டத்தில் கூட பார்க்க ஆரம்பித்திருந்தோம்.அது வகுப்பில் தலையில் சாக்பீஸ் வந்து விழும் வரையிலும் நீண்டது.அவள் தோழிகளுக்கும் தெரிந்திருந்தது. காலை பிரேயர் கூட்டத்தில் பார்க்க  ஆரம்பித்து சாயங்காலம் சைக்கிள் ஸ்டாண்டில் முடிப்பதை  தினசரி நிகழ்வாக மாற்றியிருந்தோம்.

அரையாண்டு தேர்வின் மூன்று நாட்களுக்கு முன்னிருந்து அவளை பார்க்க முடியவில்லை.சரியாக சொல்வதானால்  பிரத்யோகமான அந்த தனிப்பட்ட பார்வைகள் இல்லாமல் போனது.வலிந்து எதிரே போன போதும் கூட அவள் வேறெங்கோ பார்த்தபடியே சென்றாள்.புறக்கணிப்பின் காரணத்தை தேடி மனம் அலைந்து கொண்டிருந்தது. ஐந்தாம் நாள் ஏதோ நடந்து முடிந்த ஒரு  தேர்வொன்றின் மதியம் வராண்டாவில் தனியே படித்து கொண்டிருந்தாள். எதேச்சையாக  எதிரில் நின்ற போது அவள் முகம் பரவசமாகி பின் சோகத்தில் ஆழ்ந்தது.பின் அரையாண்டு தேர்வு முடியும் வரையிலும் அவள் முன் போகவில்லை.

தினத்தந்தியில் இருந்து  'பொதுத் தேர்வில் வெல்வது எப்படி' என பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் கருத்தரங்கு நடத்தி கொண்டிருந்தார்கள்.எங்கள் பள்ளியில் எல்லாரும் போய் வர அனுமதி கிடைத்திருந்தது.அவள் ஊரில் இருந்து  பஸ்சில்தான் வர வேண்டும். எனக்கு சைக்கிளிலே போகும் தூரமென்றாலும் பஸ்ஸில் போனேன்.கருத்தரங்கில் அவளை பார்க்கும்படியான இடம் அமையவில்லை. சாயங்காலம் திரும்பும் போது அவள் வந்த பஸ்சில் கூட்டமாயிருந்தது. ஒவ்வோர் நிறுத்தத்தில் கூட்டம் குறைய குறைய அவள் கைபிடித்திருந்த  கம்பியின் அருகிலேயே நிற்க முடிந்தது.சில ஊர் தாண்டியவுடன்  முன் சீட்டில் அமர்ந்து தோழியை அடுத்த சீட்டில் அமர்த்தி அவளோடு பேசியபடியே  படிக்கட்டு பக்கம் பார்த்து கொண்டிருந்தாள். பஸ் அடுத்த ஊரும் தாண்டிய பிறகு தான்  இறங்கினேன்.

பொது தேர்வு ஆரம்பிக்க இன்னும் நாற்பது நாட்கள் இருக்கிறது என வகுப்பாசிரியர்  சொன்ன போது தான், அவளிடம் காதலை சொல்ல வேண்டும் 
என தோன்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக