வியாழன், 23 ஜனவரி, 2020

தேவலாயத்து கடல் புறா


கடல்புரத்தில் தேவாலயத்தை சுற்றி வந்த புறாவின் காதல் கதை கல்லூரி மூன்றாம் ஆண்டில் ஒப்புக்கொண்டதில் இருந்து தொடங்குகிறது. ஆனால் அவள்  காதல் எட்டு வருடங்களுக்கு முன்பே   ஆரம்பித்திருந்தது.

ஏழாம் வகுப்பு டியூஷன் சென்டரில்  பக்கத்தில் வந்து   அமர்ந்த போது அது காதலாகவெல்லாம் இருக்கவில்லை. அவன்  பன்னிரண்டாம் வகுப்பு. வழுக்குகிற பாவாடை அணிந்து ஆச்சியிடம் திட்டு வாங்கி  பையன்களோடு  பச்சை குதிரை விளையாடிய பால்யத்தில் இருந்து அப்போது தான் அவள்  வந்திருந்தாள். ஆனாலும் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்தது. ஒரே டியூஷன் என்றாலும் ஒரே ஸ்கூல் இல்லை. இருவரில் யார்  முதலில் டியூஷன் வருவதென நடக்கும் போட்டிகளில் அவளே முதலில் வருவாள். வீட்டில் இருந்து தின்பண்டங்கள் கொண்டு வந்து தருவாள்.

எட்டாம் வகுப்பு வந்த போது அவன்  ஸ்கூலை  முடித்திருந்தான். டியூஷன் போராடித்தது.மீண்டும்  பார்க்கிற மாதிரி வாய்ப்புகளுக்காக காத்திருந்தாள். அவன் முற்றிலும் தொலைந்து போயிருந்தான்.சில மாதங்களுக்கு பிறகான சோர்வான  ஒரு நாளில்  பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, ஒரு பழைய கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த அவனை பார்த்தாள். அவள் எப்போதும் வீடு திரும்புகிற வழியை விட்டு மாறி வந்திருந்தாள். அத்தனை பையன்களின் முன் போய் பேசுகிற தைரியம் வரவில்லை.தன்னை நியாபகம் வைத்திருப்பானா என்பதே சந்தேகமாய் இருந்தது.இருந்தும் சுற்றி போகிற அந்த பாதையையே தேர்ந்தெடுத்தாள்.

இரண்டு ஆண்டுகள் இப்படியான கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு பிறகு,ஆச்சி முன்னே செல்ல, பத்தாம் வகுப்பு ரிசல்ட் பார்த்து விட்டு திரும்பி கொண்டிருக்கிற போது அவன் வந்தான்.கையில் சாக்லேட்டோடு.அது அவனுக்கு  உண்மையான பிறந்த நாளா  என தெரியவில்லை.ஆனால் அவன் அப்படித்தான் சொன்னான்.

கல்லூரி வந்த போது சுனாமி குடியிருப்பில் இருக்கிற அத்தை வீட்டிற்கு இடம் மாற வேண்டியிருந்தது.ஆச்சி வீட்டுக்கு தனியே பஸ் ஏறி 
செல்கிற அளவிற்கு வளர்ந்த பின் 
அவன் வீட்டை கடந்து போகிற சன்னல் ஓரத்தில் அமர்ந்து கொள்வாள்.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆச்சியை பார்க்க வருகிற போதெல்லாம் மாமா பையன்கள் அவளை யாரோ விசாரித்தாக சொல்லிவிட்டு போவார்கள்.

இரண்டாம் ஆண்டில் ஒரு சந்தேகம் வந்திருந்தது.அவனுக்கு ஐந்து வயது அதிகம்.கல்யாணம் முடிந்திருக்கலாம். அல்லது யாரையாவது காதலித்து கொண்டிருக்கலாம்.இப்போது அழுகையாக வந்தது.

ஒரு வருடங்களுக்கு பின் அவன் தென்பட்டான். அவன் காதலை சொன்னபோது அவள் முதலில் நம்பவில்லை.அவள் பார்த்த எட்டு ஆண்டுகளை அவன் இவ்வாறாக சொல்ல தொடங்கினான்.

அது ஒவ்வோர் ஞாயிற்று கிழமையும் கிரவுண்ட் வாசலில் நின்றது, அக்காவிடம் ரிசல்ட் கேட்டு சாக்லேட் வாங்கி வந்தது, ஊருக்கு வருகிற நாளை மாமா பையன்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது என தொடர்ந்தது.அவள் சந்திப்பு எதுவும் தற்காலிகமாக  நிகழவில்லை என விளங்கி கொண்டாள்.

தேவலாயத்து கடல் புறா இப்போது கல்யாணத்துக்காக காத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக