ஞாயிறு, 28 ஜனவரி, 2018

யட்சிக்கு

அந்தி மறையும்  சூரியன் தன்
கிரணங்களை பூமியில் விட்டு
சென்றதென அறிந்தவர்கள் அவள் 
புன்னகையை பற்றி தான்
பேசியிருக்க  கூடும்.

காலத்தில் தனித்திருக்கும் 
தேவதையின் சிரிப்பு
இந்த பிரபஞ்சம் எங்கும்
வியாபித்திருக்கிறது.

யுகங்களுக்கு பின்னும் 
யட்சியின் குரலை இன்னும் காடு  பிரித்தெடுக்கவில்லை.

அவள் புன்னகை  வேண்டி மழை
மேகத்தை பார்க்கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

காற்றின் சாரலில் சிந்தியிருக்கும் 
கடைசி புன்னகையை  தேடி
சென்றவர்கள் திரும்பவில்லை.

வனம் திரும்பும் யட்சிக்கு
புன்னகைப்பதற்கென தனி 
காரணங்கள் எதுவும் இல்லை.

கட்டி முடிக்கப்படாத பாலம்

இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பாலத்தின்  ஒரு  முனையில் இருக்கிறேன். கடைசி நேர மன்னிப்புகளும்  சமாதனங்களும் பலனின்றி உடைய ஆரம்பித்திருக்கிறது.
நம்பிக்கைகளும் நட்புமான ஒரு
நாளில் தான் நாங்கள் இந்த
பாலத்தை உருவாக்கினோம்.
இரு வேறுமுனையில் இருக்கும்  எங்களுக்குள்  நட்பை இந்த  பாலம்
பறிமாற்றிக்கொண்டிருந்தது.
எல்லைகளற்ற  அன்பு  எப்போதும்  பாலத்தை  உயிர்ப்புடன்  வைத்திருந்தது.
சிறு சண்டையின்  நீட்சியாய்
பேசாமல் இருந்த  நாளில்,
பாலத்தின்  முதல்  செங்கல் விழுந்தது.
விளக்கங்களை சொல்ல வாய்ப்புகள்  அளிக்காத  நொடிகளில்  பாலம் 
ஆட்டம்  காண  ஆரம்பித்தது.
வெறுப்புகளும் புறக்கணிப்புகளாமான ஒரு நம்பிக்கையற்ற
கணத்தில்  பாலம்  இடிந்து விழத்தொடங்கியது.
கண்முன்  எதிர்பக்கம்  சரிந்து
விழுந்து  கொண்டிருக்க ,
கொஞ்சம்  பூங்கொத்துகளையும்.. கொஞ்சம்  மன்னிப்புகளையும் ..
கொஞ்சம்  நட்பையும்
சேர்த்து  வைத்து காத்திருக்கிறேன்.

பிணம் தின்னும் கழுகுகள்

பிணம் தின்னும் கழுகுகள்
நதிக்கரையில் அமர்ந்திருக்கும்.
வேட்டை நாய்கள் ஊலையிடும்.
இரத்த வாடை காற்றில் வீசும்.
நரிகள் அலையும்.

ஒரு போர்
ஒரு வெறி
ஒரு வெற்றி

ஒரு உடன்படிக்கை
ஒரு சமாதானம்.

நாடுகள் பிளவுறும்.
நகரங்களுக்கு புது எல்லைகள்
அறிக்கைகள் ,
ஆயுதங்கள் ,பேரங்கள்.
ஊழல்கள்.

ஆட்சி மாற்றம்
கட்டுபாடுகள்
விதிமுறைகள்
கண்ணியம்
ஒழுக்கம்
கொஞ்சம் கொலைகள்.

போராளிகள் தோன்றுவர்.
இயக்கங்கள் உருவாகும்.
பிஞ்சு குழைந்தைகளின் கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்படும்.

ஆட்சி மாறும்.
அதிகாரம் மாறும்.
ஆள்பவர்கள் மாறுவார்கள்.
உறுதி மொழிகள் அள்ளி வீசப்படும்.
துரோககங்கள் நிகழும்.
பட்டினி சாவுகள் சாதரணமாகும்.

எல்லாவற்றுக்கும் பின்னால்,

ஒரு சர்வாதிகாரம்
ஒரு பேராசை
ஒரு ஏமாற்றம்
ஒரு கண்ணீர் துளி.

குட்டி யானையும் நகரத்து மனிதனும்

காட்டில் இருந்து அப்போது தான் குட்டி யானையை  பிடித்து வந்திருந்தார்கள்.
அதன் கால்கள் பெரிய சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூக்கு லாரியில் ஏறமாட்டாமல் அடம் பிடித்து கொண்டிருந்தது.

விடிகாலையில் அவன் அந்த
நகரத்திற்கு வந்தான்.
மின்சார வெளிச்சம் கண்களை
கூசியது.கொண்டு வந்து சேர்த்த பஸ்ஸை திருப்பி கொண்டிருந்தார்கள்.
அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

ஒடிசலான தேகம் கொண்ட ஒருவன்
தழிகளை வெட்டி எறிந்தான்.
நூறு ஆண்டுகள் பழமையான மரத்தில் குட்டி யானை கட்டப்பட்டிருந்தது.
அதன் சிறிய கண்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இப்போது பிளிறவில்லை.

ஒரு வழியாக அட்ரஸ் தேடி கண்டுபிடித்து விட்டிருந்தான்.ரெஸ்யும்  கைகளில் எடுத்து வைத்து கொண்டான்.யாரை கேட்பதென தெரியவில்லை. தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

இரண்டு வாரம் முடிந்திருந்தது.
யானை குட்டியை இடம் மாற்றி கட்டியிருந்தார்கள்.தும்பிக்கையை ஆட்டிய படி நின்று கொண்டே தூங்கி கொண்டிருந்தது.
நெற்றியில் குங்குமம் இட்டிருந்த தலைப்பாகட்டுகாரன் ஒருவன்  குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.

எதிரே கேள்வி கேட்பவரின் முகம் கணிக்க முடியாததாய் இருந்தது.
டேபிள் மீது சம்பிரதாயமாக சில புத்தகங்கள் இருந்தது.அந்த அறையில் இருந்து பெட்ரோல் வாசனை அடித்தது.
அவன் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
அவர்  இது தான் கடைசி கேள்வி என்றார்.

யானை குட்டிக்கு கண்கள் கட்டப்பட்டது.
அவன் சம்பளம் பற்றி சொன்னார்கள்.
லாரியில் ஏற்றவும் உடல் குலுங்க நகர்ந்தது. பஸ் சீட் கிடைக்க வில்லை. படியில் தொங்கி கொண்டு வந்தான்.

புதன்கிழமை ராசியான நாளாம்.
குளித்து முடித்து திருநீர் அணிந்து
பஸ் ஸ்டாபில் நின்று கொண்டிருந்தான்.
அங்கு எல்லாரும் அவனை மாதிரியே  இருந்ததாக தோன்றியது.

லாரியில் இருந்து இறக்கியதும் கண் கட்டு அவிழ்க்க பட்டது. அங்கே சில நூறு யானைகள் மரங்களை தூக்கியபடி நகர்ந்து கொண்டிருந்தது.

ரகசியங்களை கடந்தவள்


மழையில் நனைந்த ஓவியம் போல் இருக்கிறது அவள் மனசித்திரம்.
சில நேரம் எல்லாம் புரிந்ததாக தோன்றுகிறது.சில நேரம் எதுவுமே புரிவதில்லை.

சில வார்த்தைகள் சில மௌனங்கள்  மட்டும் வைத்திருக்கிறாள்.சில நாட்களில் வார்த்தைகளை சாப்பிட்டு மௌனமாக இருந்து விடுகிறாள்.
வாரக்கடைசியில் அந்த வார்த்தைகளும்  இருப்பதில்லை.

அவளுக்கு வண்ணங்கள் பற்றிய ஒரு பிரமை இருக்கிறது.வித விதமான வண்ணங்கள்.எல்லா நிறங்களிலும் அவள் இருக்கிறாள்.வண்ணங்கள் அற்ற ஓர் உலகம் அவளுடையதாக இருக்கிறது.

அவள் பேச விரும்பும் போதே பேசுகிறாள்.சில நேரம் அவளே பேசு பொருளாயிருக்கிறாள்.சில நேரம் அவள் எதுவும் பேசுவதில்லை.

காடு பற்றிய நியாபகங்கள்  அவள் மனதில்  புதைந்திருக்கிறது.
காடு வந்து சேர்தல் பற்றிய
கனவுகள் எப்போதும் அவளுக்கு வருகிறது.

ஒரு நாள் ஆகாயத்தில் இருப்பதாக தோன்றுகிறது.மறுநாள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாள்.அவள் இடைவெளிகளை தீர்மானிப்பது  வினோதமாயிருக்கிறது.

அதிதீவிரமான வெறுப்பும் அன்பும் சூழ நிற்கிறாள்.அவள் வெறுப்பு இந்த உலகத்தை அழிக்க போதுமானதாய் இருக்கிறது.அன்பு இந்த பிரபஞ்சத்தை குளிர்விக்க செய்கிறது.

சிலருக்கு ஒரு ஞானியை போல் அவள் முகம் தீர்க்கமனதாக தோன்றுகிறது. வேறு சிலருக்கோ  ஒரு  குழந்தையை போல  தெரிகிறாள்.

அவளோ யட்சியாக இருக்கிறாள்.

வேதாளம் சொன்ன கதை

வேதாளம் தோளில் ஏறி மூன்று
வருடங்களாகி விட்டது.
ஒவ்வொரு முறையும் வளர்ச்சி
கதை சொல்லும்.
தவறான பதில்களுக்கு கலவரமும்
சரியான பதில்களின் போது
வெளிநாட்டிற்கும் செல்லும்.

வேதாளத்தின் முதல் கதை
பணத்தாள்களை வெற்று தாளாக்கி
ஆரம்பித்தது.
வேதாளத்தின் அடிமைகள்
புது இந்தியா பிறந்ததாக ஆர்ப்பரிக்க
மக்கள் தலையை பிய்த்து தெருவில் அலைந்து கொண்டிருந்தனர்.

வேதாளத்தின் அடுத்த கதை
குடிமக்களுக்கு அடையாள எண்
கொடுப்பதாக ஆரம்பித்தது.
மக்கள் எண்களாக மாற்றம்பெற
அஃறினை போல் அலைய
வேதாளத்தின் அடிமைகள் வளர்ச்சி வளர்ச்சி என்று கூவின.

வேதாளத்தின் மூன்றாம் கதை
இந்தியை நடுவீட்டிற்கு அழைத்து வருவதாக ஆரம்பித்தது.நடுவிட்டில் உட்கார வைப்பதை சரிகட்ட  பெருச்சாளிகளை விட்டு தேர்வு செய்யும் நீட்டை கொண்டுவந்தது.
இந்தி தின்று வளர்ந்த பெருச்சாளிகள்
எல்லா இடத்திலும் நாட்டாமை செய்ய
முனைந்தன.

வேதாளத்தின் நான்காம் கதை
வரியில்லா வரி.
புதியா இந்தியா அடுத்தடுத்து பிரசவித்து தள்ளாட தொடங்கியிருந்தது.
போட்டோஷாப் செய்யப்பட்ட விலைபட்டியோடு வேதாளத்தின் அடிமைகள் நகரை சுற்றி வந்தன.

வேதாளத்தின் அடுத்த கதை
ஆரம்பிப்பதற்கு முன்
கையில் வைத்திருந்த ரேசன் கார்டை பிடிங்கி கொண்டது.
அடிமைகள் அலறல் இன்னும் குறையவில்லை.

வேதாளம் இப்போது தோளில்
இருந்து கழுத்தை இருக்க தொடங்கியிருக்கிறது.

அது கதை சொல்வதை நிறுத்த போவதில்லை.
அதன் கதைகள் நாளுக்கு நாள்
கொடூரமாகி கொண்டே வருகிறது.

இரண்டு ஆண்டுகள் முடியும் போது
பிணங்களும் வேதாளங்களும் மட்டுமே இங்கு  இருக்கும்.

நதியும் பிரபஞ்சத்தின் பேரழகியும்

மரக்கிளைகளில் இருந்து நழுவி
நதியில் விழுகிறது ஒரு மலர்.
பிரபஞ்சத்தின்  பேரழகியை  தேடிக்கொண்டிருந்தவன்  முன்
கையில்  நோட்டுடன்  அவள் நின்றாள்.
சலனமற்ற  நதியின்  மேற்பரப்பில்
மலர் மிதக்க  தொடங்கிற்று.
ஒப்பீடுகள்   அற்ற  பேரழகான ஒருத்தியை  இப்போது  தான் அவன்  பார்க்கிறான். பார்ப்பதே   அவனுக்கு  ஆனந்தமாய்  இருந்தது. நதிக்கும்  பூவுக்குமென ஒரு  புது  அத்தியாயம்  தொடங்கியிருந்தது. அவளை  48  நிமிடங்களாக காதலித்து கொண்டிருந்தான். அவளை
பார்த்தும்  அதே 48 நிமிடங்கள்தான் ஆகி  இருந்தது. இப்போது  காற்று வீசி மலர் புரண்டு அதன் எல்லா  இதழ்களும் ஒரு  முறையேனும்  நதியில்  நனைந்தது.
தேவதையின்  அருகாமை  அவனை  என்னவோ செய்தது. வெளிபடுத்த  முடியாத  அன்பு அவனை நிலையில்லாதவனாக  மாற்றிக்கொண்டிருந்தது.
நதி நீரில் வட்டமடித்து பயணிக்க தொடங்கியது  மலர். கட்டுபாடுகள்  அற்றவன்  பிரபஞ்சத்தின்  பேரழகியை ஒருநாள் சந்தித்தான். தேவதை  கைபிடித்து  நடக்க   வாழ்நாள்  முழுவதும் வேண்டும்  என்றான்.
நதிப்பிரவாகம்  வேகமெடுக்க  தொடங்கியிருந்தது.
சாத்தான்களுடன் வாழ  தேவதைகளுக்கு  விருப்பம்  இருப்பதில்லை என்றாள்.
அவன்  சாத்தானை தேடியபோது அவனை  நோக்கி சுட்டு விரலை நீட்டினாள்.மலர்  இன்னும்  நதியில்
தான்  இருந்தது.
அவள்  அங்கேயே  நின்று கொண்டிருந்தாள்.
அவன்  நடக்க ஆரம்பித்தான்.
இப்போது  அவனுக்கு  பிடிக்காத  முதல் விஷயமாக காதல்  மாறியிருந்தது.
பாறையில்தடுக்கி  மலர்  நின்றுவிட, நதி  தனியே  செல்ல ஆரம்பித்தது.
தேவதைகள்  மெய் உலகில் இல்லை  என உணர  அவனுக்கு  இரண்டரை வருடங்கள்  ஆகிவிட்டிருந்தது.
எந்த  மலர்களின்  வருகைக்கும்  காத்திராமல் பேரிரைச்சலோடு இப்போதும்   நதி  பயணித்து  கொண்டிருக்கிறது.